எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் முதல் அதிரடி! – அமைச்சர் மணிகண்டன் பதவிப் பறிப்பின் பின்னணி

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். மணிகண்டனுக்குப் பதிலாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு முதல்முறையாக வென்ற மணிகண்டனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார். அந்த நேரத்தில், பிரபல பத்திரிகை ஒன்று, தொலைக்காட்சி தொடங்குவதற்காக இவரிடம் அனுமதி கேட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களிடம் இவர் பேரம் பேசியதாக புகார் மேலிடத்துக்குச் சென்றிருக்கிறது. இதனால், அவரின் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பறித்தார் என்கிறார்கள்.

அமைச்சராகப் பதவியேற்ற மணிகண்டன் சீனியர்களை மதிப்பதில்லை; தன்னை முன்னிறுத்தியே அரசியல் செய்து வருகிறார்’ என்று நிர்வாகிகள் புகார் வாசித்துவந்திருக்கிறார்கள். அதேபோல், முன்னாள் எம்.பியும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அன்வர் ராஜாவை மேடைகளிலேயே விமர்சனம் செய்து இவர் பேசிவந்தது மாவட்ட நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. அதேபோல், மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமியுடனும் இவர் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். இவருடைய நடவடிக்கைகளால்தான் ராமநாதபுரம் எம்.பி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜ.கவுக்குக் குறைவான வாக்குகள் கிடைத்ததாகவும் தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. மேலும், `அரசு ஒப்பந்த பணிகளை தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கொடுப்பது. அப்படி வேலை வாங்கும் கட்சி நிர்வாகிகளை பொது இடங்களில் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது. அமைச்சராக இருந்து கொண்டே தினகரனிடம் மென்மையான போக்கை கடைபிடித்தது. முதல்வர் அறிவிக்கும் திட்டம் எல்லாம் தன்னால்தான் வந்ததாக கூறுவது’ என இவர் மீது புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

அதேபோல், அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், ஒருபடி மேலேபோய் இவர் மீது நேரடியாகவே புகார் சொன்னார். அமைச்சரின் நடவடிக்கைகளால் சொந்தத் தொகுதிக்குள் வரவே முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தவிவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய கருணாஸ், “இனிமேல் தொகுதிக்கு வந்துவிடுவேன். தடைகள் எல்லாம் நீங்கிடும். முதல்வரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார். அமைச்சர் மணிகண்டனோடு இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, “அவர் துறையில் ஏதாவது தேவைப்பட்டால் மட்டுமே அவரிடம் கேட்பேன்” என்றதோடு முடித்திருந்தார். இந்த விவகாரங்கள் நீறுபூத்த நெருப்பாக உழன்று கொண்டிருந்த நிலையில், மணிகண்டன் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசியதை முதல்வர் தரப்பு ரசிக்கவில்லை என்கிறார்கள்.

மணிகண்டன் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக கால்நடைத் துறையின் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி நிறுவனத் தலைவராக இருந்தார். ஆனால், 2016ம் ஆண்டுக்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் மணிகண்டன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அமைச்சர் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கேபிள் டிவி நிறுவனத் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமிக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவை வெளிப்படையாகவே மணிகண்டன் விமர்சித்தார். அதேபோல், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனையும் அவர் விமர்சித்துப் பேட்டியளித்தார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்

உடுமலை ராதாகிருஷ்ணன்

பரமக்குடியை அடுத்த எமனேஸ்வரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.கவின் மாவட்ட செயலாளருக்கு அழைப்பு இல்லை என்கிறார்கள். மாவட்ட செயலாளர் முனியசாமி, பரமக்குடியைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு அழைப்பு இல்லாமலேயே அந்த விழா நடந்ததாகச் சொல்கிறார்கள். அதேபோல், மணிகண்டனின் ஆதரவாளர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில், 41 நெசவாளர்களுக்கு கடன், சேமிப்பு பாதுகாப்பு நிதி மற்றும் நெசவுத் தொழிலுக்கான உபகரணங்கள் என சுமார் 15.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மணிகண்டன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், “தமிழக அரசு கேபிள் டிவி துறைக்கு அமைச்சர் நான்தான். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேபிள் டிவி தொழில் செய்து வருபவர், அந்தத் தொழிலில் நல்ல அனுபவம் உடையவர். `தனியார் நிறுவன கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார். ஒரே இரவில் அனைத்து தனியார் கேபிள் டிவி இணைப்புகளையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்றிவிட முடியாது.

மணிகண்டன்

முதலில் அவர் அட்சயா கேபிள் டிவி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 2 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. வில்லெட் என்ற கம்பெனி செட் ஆப் பாக்ஸ் மூலம் அந்த 2 லட்சம் இணைப்புகளை இயக்கி வருகிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தன்னுடைய அட்சயா கேபிள் விஷனில் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் வைத்துள்ள இணைப்புகளை மாற்ற வேண்டும். அவரிடம் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்றுவதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடியவர் ( உடுமலை ராதாகிருஷ்ணன்) மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவருக்கு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. இனிமேல் நடத்துவார் என நினைக்கிறேன். எனவே, உடுமலை ராதாகிருஷ்ணன் தன்னிடம் உள்ள கேபிள் இணைப்புகளை அரசு நிறுவனத்திற்கு மாற்றிவிட்டு மற்ற தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு அறிவுரை சொல்லலாம்” என்றார்.

இந்தநிலையில்தான் மணிகண்டனை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தார் என்கிறார்கள்.

%d bloggers like this: