Advertisements

யூனியன் பிரதேசம் ஏன்; தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது!’ – மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ModiModi ( ANI )

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததுடன் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்தது மத்திய அரசு. இதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.

Modi

ModiANI

மாலை 4 மணிக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது 8 மணியாக மாற்றப்பட்டது. நாட்டு மக்களிடையே பேசிய மோடி, “காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவவே சட்டப்பிரிவு 370 உதவியது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இந்த சட்டப்பிரிவு இதுவரை தடையாக இருந்தது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர், லடாக் பகுதிகள் வளர்ச்சியடையும். காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆட்சிமுறைக்கு முடிவு எழுதப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசால் லடாக் பகுதிகளில் எந்த நன்மையும் நடக்கவில்லை. காஷ்மீர் மக்களுக்கு இனி வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். இந்த சட்டப்பிரிவு ரத்தால் பட்டியல், பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். 370 சட்டப்பிரிவு ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைக்கூற இங்கும் யாரும் இல்லை. இந்த சட்டப்பிரிவு ரத்தால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பேச இங்கு யாரும் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது

பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க முடிவெடுத்தது ஏன்?

ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தைக் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு கவனித்து வந்தது. அப்போது, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்த முடிந்தது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தற்காலிக முடிவுதான்!

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். அதேநேரம், லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும். அந்த உரிமை அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கும். பாதுகாப்பு படையில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்படும். நான் சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்தபோது சாலை மற்றும் மின்சார வசதிகள் மேம்பட்டிருப்பதைக் கண்டேன். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்ட பிறகு அங்கு வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும்.

Modi

ModiANI

காஷ்மீரில் இனி திரைப்பட நிறுவனங்களைத் தொடங்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களை தயாரிப்பவர்கள், காஷ்மீரில் படப்பிடிப்புகளை நடத்த முன்வர வேண்டும். சினிமா படப்பிகளை காஷ்மீரில் நடத்தியதால் அந்த மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். லடாக்கில் சூழலியல் சுற்றுலாக்கள் ஊக்கப்படுத்தப்படும். காஷ்மீரில் உள்ள மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும். ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதிகளைத் தோற்கடிப்பார்கள். மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதிக்கிறோம்; ஆனால், தேசவிரோத நோக்கில் செயல்படக்கூடாது. லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இனிமேல் ஜம்மு – காஷ்மீரையோ லடாக்கையோ தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வோம்

மோடி

அனைவருக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எந்தவொரு பிரச்னையும் எங்கள் பிரச்னை. அவர்களின் மகிழ்ச்சி, சோகமான தருணங்களில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முழுமையான பாதுகாப்புடன் விரைவில் நடத்தப்படும். கடந்த 1947-க்குப் பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு – காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீஸாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலைய உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காஷ்மீரில் விளையாட்டு அரங்குகள் போன்றவை இல்லை. அவற்றில் கவனம் செலுத்தப்படும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று பிரதமர் மோடி பேசினார். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். 8 மணிக்குத் தொடங்கி ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

Advertisements
%d bloggers like this: