காய்ச்சல் என்பது நோயே அல்ல!

மழை வலுக்கத் தொடங்கி விட்டது. உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. அலுப்பு, அமைதியின்மை, வலி , பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம். இதனை

அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. காய்ச்சலின் தன்மையையும், வந்துவிட்டால் எதிர்கொள்ளும் முறைகளையும் நன்கு தெரிந்துக் கொண்டோமானால், காய்ச்சல் என்பது நமக்கு ஒரு பிரச்சினையே அல்ல.
காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை  ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.
மூளையை பாதிக்குமா?
காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.
வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°Fக்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும். காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர்  மற்றும் சில காரணங்களாலும் வரும்.
என்னென்ன சிகிச்சை?
காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிச்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரஸ்களை எதிர்த்துப் போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான். நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும். குழந்தைகளாக இருந்தால் மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு ஏற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது.
* காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.
* வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம்.தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்
* இளஞ்சூடான நீரில் குளிக்கலாம். அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவ்வாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்
* பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும். இது நிலைமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.
* முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்.
மருந்து என்ன?
Acetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது. 4 முதல் 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen  எடுத்துக் கொள்ளலாம். கைக்குழந்தைகளுக்கு Ibuprofen நல்லதல்ல. பெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழந்தைக்கு கொடுக்காதீர்கள். காய்ச்சல் மருந்துக்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து விபரங்களை படித்து விட்டு அதன் படி உபயோகிக்கவும். 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.
நோய் நாடி அறிதல்
மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.
* எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?
* காய்ச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
* விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
* காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
* காய்ச்சல் ஏறி இறங்குகிறதா?
ஆகிய கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் மருத்துவருக்கு தெரிய வரும். தேவைப்பட்டால் இரத்த சோதனை, சிறுநீர் பரிசோதனை, மார்பு பகுதியில் எக்ஸ்ரே சோதனை போன்றவற்றை செய்தும் அவர் காய்ச்சலின் தன்மையறிந்து சிகிச்சை அளிப்பார்.

%d bloggers like this: