போதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா?!

உலகளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. போதைக்கு அடிமையானவர்களின் உடல், மனம், குடும்பம் பாதிக்கப்படுவதோடு குற்றச் செயல்கள் அதிகரித்து சமூகப் பிரச்னைகளும், சமூக சீர்கேடுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படி போதைப் பழக்கம் சமூகத்தின் சாபக்கேடாக மாறிவரும் சூழலில் போதைப் பொருள் பயன்பாடு, அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சென்னை மாங்காட்டில் உள்ள நியூ விஸ்டம் குடிபோதை மறுவாழ்வு மற்றும் மனநல சிகிச்சை மையத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அருணாவிடம் பேசினோம்…
‘‘உலகம் முழுவதும் 2.30 கோடி மக்கள் பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. போதை மற்றும் மனநிலை மாற்றப் பொருட்களைத் தடுக்க இந்திய அரசு 1988-ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. இருந்தபோதும் போதைப்பொருள் கேடு பரவலாகத் தொடர்ந்து வருகிறது. நகர்ப்புறங்களில் சிகரெட், மது மற்றும் போதைப் பொருள் பழக்கமானது ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்திலும்கூட அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பலர் முதலில் பரிசோதனை முயற்சியாக, ஆர்வக் கோளாறினால் போதைப் பொருளை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலினால் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். மேற்கத்திய கலாச்சாரம், மாறிவரும் குடும்ப உணர்வு, நண்பர்களின் வற்புறுத்தல் போன்றவை போதைப் பழக்கம் ஏற்படுவதற்கான சில காரணங்களாக இருக்கிறது.
சிலர் தனக்கு ஏற்படுகிற பிரச்னைகளை சமாளிக்க முடியாததாலோ அல்லது அதற்கு சரியான வழியில் தீர்வு காண முடியாததாலோ, பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் பயத்தினால் இதுபோன்ற குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள நினைக்கிறார்கள்.
யார் ஒருவர் தன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண குடி மற்றும் போதைப் பொருட்களை நாடுகிறாரோ, அவருக்கு பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அந்தப் பொருட்களின் துணையுடனே அவர் தீர்வு காண முயற்சிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி ஏதோ ஒரு விதத்தில் ஒரு போதைப் பொருளை முதலில் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அடுத்தடுத்து எல்லா வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்திப் பார்க்க விரும்புவார்கள்.
போதைப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை வேதிப்பொருள் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உணர்வுகளும், சந்தோஷமும் கிடைப்பதாக அதைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றனர். இந்த வேதிப்பொருட்கள் அனைத்தும் உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பவையே. போதை மற்றும் மதுபான பொருள் பயன்படுத்துவோருக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்னைகளே முதலில் உண்டாகிறது.
இதனால் சோர்வு, எரிச்சல், எந்த வேலையிலும் கவனமின்மை, ஆர்வமின்மை போன்ற பிரச்னைகள் படிப்படியாக உண்டாகிறது.
போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது, பிறரை  துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய பழக்கங்களுக்கு ஆளானவர்கள் நாளடைவில் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும், கணையத்திலும் கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் தானாகவே பேசிக்கொள்வது, பயம், மனச்சோர்வு, மனக்குழப்பம் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது.
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, முடிவெடுப்பதில் சிக்கல், சிந்தனைத்திறன் குறைவு, ஞாபகமறதி, தனக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று கற்பனை செய்துகொண்டு அதன்படி நடந்து கொள்வது போன்ற மனநல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் மற்றும் குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
ஆல்கஹால் உடலின் உள்ளே செல்லச் செல்ல நம் உடலிலுள்ள வைட்டமின்களை அது அழித்து விடுகிறது. மேலும் கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்னைகளும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகளும் உண்டாகிறது. தற்போது குடி மற்றும் போதை பொருட்களில் உடல்நலனுக்கு பாதிப்பினை உண்டாக்குகிற, அப்பழக்கத்தைத் தூண்டுகிற வேதிப்பொருட்கள் அதிகளவு கலப்பதால் பெரும்பாலானோர் குடி மற்றும் போதை நோயாளிகளாக மாறுவதோடு மன நோயாளி களாகவும் மாறுகின்றனர்.
போதை மற்றும் குடிப்பழக்கம் உடையவர்கள் செய்கிற குற்றச் செயல்களால் முதலில் குடும்ப உறுப்பினர்களே  அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்தினரும் காவல்நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரியாதைக் குறைவு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் பணப் பிரச்னைகள் உண்டாகிறது’’ என்றவரிடம், போதையை ஒழிக்க என்ன செய்யலாம் என்று கேட்டோம்…
‘‘ஒருவர் என்ன காரணத்தினால் போதைக்கு அடிமையானார் என்பதை கண்டுபிடித்து, அதற்குரிய ஆலோசனைகள் வழங்கி அவரை படிப்படியாக மனதளவில் சரி செய்ய வேண்டும். அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல்நல மற்றும் மனநல பிரச்னைகளுக்கு ஏற்றவாறு மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் கொடுப்பதன் மூலம் படிப்படியாக பிரச்னைகளை சரி செய்யலாம்.
போதைப் பழக்கங்களிலிருந்து தானாகவே மீண்டு வர நினைப்பவர்கள் மனநல மருத்துவர்களை அணுகி உரிய மருத்துவ சிகிச்சையும், ஆலோசனையும் பெறலாம். அரசு அல்லது தனியார் போதை மீட்பு மையங்களை அணுகி உரிய சிகிச்சைகளை மேற்கொள்கிறபோது அந்தந்த குடும்ப உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் நல்லதோர் மாற்றத்தை விரும்பி அவற்றை உட்கொள்வதை நிறுத்தத் தாமாகவே ஒரு முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவெடுத்து நேர்மையுடன் அதற்கு முயற்சிக்க வேண்டும். அதோடு அப்பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் நபர்களோடு ஒரு குழுவாக இணைந்து செயல்படலாம். இப்படி ஒரே மாதிரியான பிரச்னை உள்ளவர்களோடு பழகும்போது அவர்களது கதைகளும் அனுபவங்களும் நீங்கள் விரைவாக குணமடைய உதவியாக இருக்கும். குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் இணைந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உணர்வுப்பூர்வமாக ஆதரவளிப்பதன் மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்க முடியும்.
போதைப் பொருள் பயன்படுத்துவோருக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறபோது, அதற்கு மாற்றாக உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தாத பிற பொருட்களை மாற்றாக கொடுக்கலாம். உதாரணமாக சிகரெட் பிடிப்பவர்களுக்கு Chewing Gum கொடுக்கலாம். இது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
இத்தகைய போதை மீட்பு சார்ந்த பழக்கங்களை தொடர் பயிற்சியாக கொடுத்து மூளையை அதற்கு பழக்கப்படுத்த வேண்டும். சிகிச்சைக்குப் பிறகும் இப்பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றினால் போதையிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும்.
சமநிலை உணவு, யோகா, தியானப் பயிற்சிகள், உடற்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றால்  ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை உருவாக்குதல், நேர்  சிந்தனைகள், சமுதாய செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவை போதைப் பழக்கத்தைத் தடுத்து அதிலிருந்து மீண்டுவர உதவுகின்றன’’ என்கிறார் அருணா.
‘எத்தகைய போதைப்பழக்கத்துக்கு ஆட்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிட முடியும்’ என்கிறார் சென்னையிலுள்ள ஓட்டேரியைச் சேர்ந்த திருமலை. இவர் மோசமான போதைப்பழக்கத்துக்கு ஆட்பட்டதோடு, அவற்றிலிருந்து மீண்டு வந்து, தற்சமயம் போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான குடிபோதை மறுவாழ்வு மற்றும் மனநல மையத்தையும் தற்போது நடத்தி வருகிறார்.
எப்படி இந்த மாற்றம் உண்டானது?
‘‘16 வயதில் நண்பர்களோடு சேர்ந்து மற்றவர்கள் குடிப்பதைப் பார்த்து, குடித்தால் என்ன ஆகிறது என்று பரிசோதித்துப் பார்க்க நினைத்து குடிக்க ஆரம்பித்தேன். 1990-ல் நான் காதலித்த பெண்ணோடு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகாவது சரியாகி விடுவேன் என்று வீட்டில் நினைத்தார்கள். ஆனால், திருமணமான இரண்டு நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விட்டேன்.
குடித்துவிட்டு வருவதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய் சொல்வேன். 24 வயது முதல் கஞ்சா, அபின், மாத்திரை போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்கினேன். எங்கள் வீட்டில் யாருக்கும் இதுபோன்ற பழக்கங்கள் இல்லை. எங்கள் வீட்டில் எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். தனியார் பைக் நிறுவனம் ஒன்றில் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்.
அப்போது எனக்கு கிடைத்த நண்பர்களும் என்னைப் போலவே மது மற்றும் போதைப் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டு போதைப் பழக்கத்திற்கு ஆளாகி சரியாக வீட்டிற்கே போவதில்லை.  2000-ல் என் மனைவியும், குழந்தைகளும் என்னை விட்டு விலகிச் சென்றார்கள். 2003-ல் என் அம்மா இறந்தார்கள். அப்போதுகூட நான் வீட்டிற்கு போகவில்லை.
மது மற்றும் போதைப் பொருட்களை வாங்கி விற்கிறபோது ஏற்பட்ட பிரச்னைகளால் காவல்நிலையம் மற்றும் சிறைக்கு பலமுறை சென்றுள்ளேன். தினசரி போதை எடுக்காவிட்டால் என்னால் இருக்கவே முடியாது. என் நண்பர்கள் இரண்டுபேர் போதை ஊசி போடும்போது ஏற்பட்ட பிரச்னையால் என் கண் முன்னரே இறந்தனர். இதனால் என் மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்பட்டது.
அதன்பிறகு மறுபடியும் வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னால் எழுந்து நடக்கவே முடியாத அளவு உடல்நிலை மோசமானது. நண்பரின் உதவியோடு போதைமீட்பு மையத்தில் 3 மாத சிகிச்சையில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த பிறகும் சில நாட்களுக்குப் பிறகு என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
அங்கே இருந்த ஆலோசகர்கள் அப்போது நான் அங்கு வந்த முதல் நாள் எப்படி இருந்தேன், அதன் பிறகு எப்படி உள்ளேன் என்று அவர்கள் எடுத்திருந்த புகைப்படங்களில் காட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் கொடுத்த ஆலோசனைகளைக் கேட்டு, அவர்களுடன் என் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டேன். அவர்கள் கொடுத்த ஆலோசனைகள் மற்றும் ஊக்கத்தால் என்னைப் போன்று போதையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொண்டுவரும் சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்’’ என்கிறார் திருமலை.

%d bloggers like this: