Advertisements

மழலை வரம் அருள்வாள் மலையன்குளத்தாள்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள மலையன்குளத்தில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியாங்கோனார், தம்பி சின்னாங்கோனார் மற்றும் அவர்களது உறவினர் கழக்குடி கோனார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர்.

ஒரு சமயம் ஊரில் மழை தண்ணி இல்லாததால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலைத் தேடி தென்திசை நோக்கிச் சென்றனர். காவல்கிணறு விலக்கு தாண்டி குமாரபுரம் செல்கையில் வயல்வெளிகள் பசுமையாய் காட்சி அளித்தன. இந்த ஊரில் கிடை போடலாம் என்று நினைத்த பெரியாங்கோனார். அந்த வழியாக வந்த மாணிக்கநாடாரிடம் கேட்க, அவர் ‘‘வாங்க எங்க ஊரு, மாட நாடார் குடியிருப்பு. எங்க மச்சான் தான் ஊரு தலைவர்’’ என்று கூறி, பெரியாங்கோனாரை, அழைத்துச் சென்று மாடன் நாடாரிடம் அறிமுகப்படுத்துகிறார். ‘‘என் நிலத்தில ஆடு கிடை மறிங்க. நிலத்துக்கு உரமாச்சு, செமட்டு கூலி மிச்சமாச்சு. மூனு மாசத்துக்கு கிடை மறிக்கணும். கோனாரே எக்காரணம் கொண்டும் மூனு மாசம் முடியாம போவ கூடாது.’’ என்றார்.
‘‘சரி’’ என்று ஒப்புக்கொண்டார் பெரியாங்கோனார். ஆடு கிடை மறிக்கப்பட்டது. மறுநாள் காலை மாடன்நாடார் தங்கை மாடத்தி தான் வளர்த்து வரும் ஆட்டுக்கிடாவுடன், ஆட்டுக்கிடைக்கு வந்தாள். பெரியாங்கோனாரிடம், ‘‘அண்ணாச்சி, இது எங்க  குலதெய்வமான இசக்கிக்கு நேந்து விட்டுருக்கிற கிடா, மேய்ச்சலுக்கு போகும் போது உங்க ஆடுகளோடு சேர்த்து பத்திட்டு போங்க, கிடை முடிஞ்சு நீங்க ஊருக்கு போவும்போது நான் பத்திக்கிறேன். அதுவரை உங்க ஆட்டோடு நிக்கட்டும் என்று கூறி கிடாவை விட்டுச் சென்றாள். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். கிடை மறிச்ச பதினாராவது நாள் இரவு பெரியாங்கோனார் அவரது ஊரான மலையன்குளத்தில் நல்ல மழை பெய்து குளம் பெருகி, வெள்ளம் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுவது போல கனவு கண்டார்.
உடனே திடுக்கிட்டு எழுந்து, சின்னாங்கோனார் மற்றும் கழக்குடி கோனாரிடம் கனவு கண்டதை கூறி, ‘‘நாம உடனே ஊரப்பாத்து போவோம்’’ என்று கூறினார். அப்போது அவரது தம்பி, ‘‘அண்ணே, நாடாரு தங்கச்சி, நேத்தைக்கு சாயந்திரம் கிடாவ பத்திட்டு போக வரல, கிடா நம்ம ஆட்டோட தான் நிக்குது. பொழுது விடிஞ்சதும் அவ கிட்ட பத்தி கொடுத்திட்டு போவோம்.’’ என்றார். ‘‘ஏலே, என்ன பேசுக நீ, நாம ஊருக்கு போறது அவங்களுக்கு தெரியப்படாது, ஏன்னா, மூனு மாசம் கிடை மரிக்கதா பேசி முடிவெடுத்துக்கிட்டு, திடீரென போக நாடார் விடுவாரா, அது நல்லதும் இல்ல, அதனால சொல்லாம, கொள்ளாம ராவோடு ராவா புறப்படுவோம்’’ என்று கூறி ஆடுகளை பத்திக்கொண்டு ஊரை நோக்கி புறப்பட்டனர். பணகுடி தாண்டி வருகையில் கழக்குடிகோனார் கூறினார்.
‘‘அண்ணேன், கிடா, கழுத்து மணியும், மேலிருக்க முடியும் காட்டிக்கொடுத்திருமே வளர்ப்பு ஆடுன்னு’’ என்று கூற, ‘‘மசுர செரச்சி கீழே போடு, மணிய கழுத்தி தூரப்போடு’’ என்று பெரியாங்கோனார் கூறுகிறார். அதன்படி செய்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர். பொழுது புலர்ந்தது. கிடாவை ஓட்டிக்கொண்டு செல்ல மாடத்தி ஆட்டு மந்தைக்கு வருகிறாள். அங்கே ஆட்டு மந்தை இல்லை. பதட்டத்துடன் அண்ணனிடம் வருகிறாள். ‘‘அண்ணே, கோனாங்கமாறு என் கிடாவ கொண்டு போயிட்டாங்கண்ணே,’’ என்று கூற, ‘‘என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ தெரியாது ஆட்டு கிடாவோடுதான் வீட்டுக்கு வரணும். இல்லண்ணா, கிடாவுக்கு பதிலா, இசக்கிக்கு உன்ன பலி கொடுத்து போடுவேன்’’ என்று கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்தார் மாடன்நாடார்.
ஆடு கால் தடம் பார்த்து அழுத படி, ஓடியும், நடந்துமாக வேக, வேகமாக வருகிறாள். அந்தி கருக்கல் ஆச்சு, கலந்தபனை ஊரதிலே கோனார்கள் ஆடுகளை மறித்து ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் முகம் மலர்ந்தாள் மாடத்தி, ஆடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு பெரியாங்கோனாரிடத்தில் கேட்க, ‘‘உன் ஆடு எங்க ஆடுகளோடு வரலைய தாயி, வேணுமுன்னா சத்தம் கொடுத்து பாரு, உன் குரல் பிடிபட்டு வந்தா, பத்திட்டு போ’’ என்றார். அழைத்தாள், கத்தினாள், ஆடு வரவில்லை. தென் திசை திரும்பி நின்று இசக்கியை வேண்டுகிறாள். அந்த நேரம் அவர்கள் ஆடுகளை பத்திக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர். தனித்து நின்ற மாடத்தி, இசக்கியை பார்த்து ‘‘உனக்கு நேர்ந்து விட்டு உசுரா வளர்த்து வந்தேன்.
ஆட்டோடு போகலண்ணா அண்ணேன் முகத்தில முழிக்க முடியாது. அவன் கையால பலியாகும் முன்னே நானே என் உசுர மாய்ச்சுக்கிறேன். உன் கரும்ப எடுத்துக்கிட்டு போறவங்கள நீ சும்மா விடாத, இசக்கியம்மா’’ என்றபடி தனது நாக்கை பிடுங்கி உயிரை மாய்த்தாள் மாடத்தி. ஆடுகளுடன் மறுநாள் பொழுது விடிய பெரியாங்கோனார் மற்றும் சின்னாங்கோனார், அவர்களுடன் சேர்ந்த கழக்குடிகோனார் ஆகியோர் மலையன்குளத்துக்கு வந்து சேர்ந்தனர். மறுவாரம் குலதெய்வம் ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலுக்கு கொடை விழா கொடுக்க ஏற்பாடுகளை செய்தார். பெரியாங்கோனார். பத்தமடையில் தனது தங்கை மகனுக்கு மணமுடித்து கொடுத்திருந்த மகள் சுடலியை அழைத்து வர உறவினர்களுடன் தங்கை வீட்டுக்கு சென்று மகளுக்கு வளைகாப்பு நடத்துகிறார்.
மகளை அழைத்துச்செல்ல முற்படும் போது, அண்ணேன் நான் பொல்லாத கனவு கண்டேன். என் மருமகளை அழைத்துச் செல்ல வேண்டாம். என தடுத்த தங்கையின் வார்த்தைகளை மீறி வண்டி கட்டி மகள் சுடலியை திங்கட்கிழமை அழைத்து வந்தார். மூன்று நாள் கடந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலில் கொடை விழா நடக்கிறது. வீட்டில் மகளையும், துணைக்கு தனது சின்னாத்தாவையும் வைத்துவிட்டு பெரியாங்கோனார் உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்கின்றார். பூஜை நேரத்தில் பரண் ஆடு பலி கொடுக்க, கிடா வை எங்கே என்று கேட்க, சின்னாங்கோனார் சொல்கிறார் ‘‘எண்ணோய், சொள்ளமுத்து மச்சான், இன்னும் கிடா கொண்டு வரலையே’’ என்று கூற,’’ ‘‘சரில,  மாடன் நாடார் தங்கச்சி மாடத்தியோட கிடா நம்ம ஆட்டோடு தான நிக்கி, உடனே அத பிடிச்சிட்டு வா’’ என்று சத்தம் போடுகிறார்.
மாடத்தியின் கிடாவை கொண்டு வந்து பரண்மேல் ஏற்றுகிறார்கள். மல்லாந்து படுக்க வைத்து அதன் வாயை பொத்தி ஆட்டுக்கிடாவை நெஞ்சுகீற முற்படும்போது கிடா அம்மே… அம்மே… என்று மூன்று முறை கத்தியது. மறுகனமே ஒரு பனை உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்தார் ஆட்டை வெட்ட முயன்றவர். அவர் தனது குலதெய்வத்தை வணங்கி, ஆட்டை பலி கொடுத்தார். ஆட்டுகிடா சத்தம் போட்டதும், மாடநாடார் குடியிருப்பில் இருந்த இசக்கி, ஆங்காரம் ரூபம் கொண்டு, கை கடையம் கலகலக்க, கால் தண்டை சலசலக்க வாராளே, தாயான இசக்கியம்மை மலையன்குளம் நோக்கி, பெரியாங்கோனார் வீட்டிற்கு அவரது ரூபத்தில் சென்று சுடலி, சுடலி என்று அழைக்க, தனது தந்தை கோயில் சாமான் எடுக்க வந்திருப்பாரோ என்று எண்ணி சுடலி கதவை திறக்க, இசக்கி சூலியான சுடலியை பலி வாங்கினாள்.
கொடை முடிந்து வீட்டுக்கு வந்த பெரியாங்கோனார் மற்றும் உறவினர்கள் சுடலியின் உடலைக்கண்டு கதறி அழுதனர். மறுநாள் சுடலியின் உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். கர்ப்பிணி பெண் இறந்து போனால் வயிற்றுப்பாரத்தோடு தகனம் செய்யக்கூடாது என்பதால் வயிற்றை கீறி குழந்தையை வெளியே எடுக்க சுடுகாட்டிற்கு சுடலைமுத்து பண்டுவனை அழைத்து வருகின்றனர். அவன் வந்து மந்திரித்த மையை நெற்றியில் வைத்துக்கொண்டு இறந்து போன சுடலியின் வயிற்றை கீறி உயிரற்று இருந்த அவளது குழந்தையை எடுக்கிறார். பின்னர் தாய், சேய் இருவரது உடல்களும் தகனம் செய்யப்படுகிறது. அது முடிந்த பின் பண்டுவன், சுடுகாடு பகுதியிலிருந்த கிணற்றில் இறங்கி, கை, கால்களை அலம்புகிறான்.
அப்போது தண்ணீர் பட்டு அவனது நெற்றியில் இருந்த மை அழிகிறது. உடனே கிணற்றிலிருந்து வெகுண்டெழுந்த இசக்கி, பண்டுவனை கொல்ல முற்படுகிறாள். அப்போது, ஆத்தா இசக்கி, என்னை எப்படியும் பழி எடுத்திருவ, எனக்கு, உன் இடத்தில் நிலையம் வேண்டும். என்று கேட்க, என் கோட்டையில் இடமில்லை, என் பார்வையில் இருக்க இடம் தருகிறேன். என்று கூறியவாறு பண்டுவனை, இசக்கி வதம் செய்தாள். இச்சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து ஊரில் உள்ளோர்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு என பிணி உருவானது. பெரியாங்கோனார் ஆடுகளில் கிடாக்கள் சில ஒவ்வொன்றாக மடிந்தது. இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று பாளையங்கோட்டை சென்று வள்ளிகுறத்தியிடம் கேட்டனர்.
அவள் ‘‘மாடநாடார் குடியிருப்பு ஊரிலிருந்து மாடத்தியின் கிடாவை அபகரித்து கொண்டு வந்து சுடலைக்கு பலி கொடுத்ததாலும், மாடத்தியின் சாபத்தால் இசக்கி கொண்ட கோபம் தான் காரணம். என்றாள். பரிகாரம் என்ன என்று கேட்க, ஊரம்மன் கோயிலான நல்லமுத்தம்மன் கோயில் முன்பு சிறு சொளவில் அஞ்சு வாழைப்பழம், முழு தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை கனியும் வச்சு வெள்ளிக்கிழமை பூஜை முடிஞ்சு கோயில் நடை சாத்துன பிறவு அங்க வச்சிட்டு திரும்பி பார்க்காம வந்துடுங்க. மறுநாள் காலைலே அந்த சிறு சொளவு எங்கு வந்து இருக்குதோ  அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில கட்டி வழிபடுங்க’’ என்றுரைத்தாள். அதன்படி நல்லமுத்தம்மன் கோயில் முன்பு வைக்கப்பட்ட சிறுசொளவு மறுநாள் காலைலே மலையன்குளம் ஊருக்கு மேற்கே குளத்தின் கிழக்கு கரையில  ஆலமரத்தின் கீழ் இருந்தது.
அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மாட நாடார்குடியிருப்பில் இருந்து பிடிமண்ணும், முப்பந்தலில் இருந்து ஆவாஹனம் செய்யப்பட்ட மஞ்சளும் கொண்டு வந்து மண் உருவம் செய்து நிலையம் இட்டு இசக்கியம்மனை பூஜித்து வந்தனர். கோயிலில் முதல் கொடைவிழா நடைபெறும்போது கோதைச்சேரி கிராமத்தில் மணம் முடித்துக்கொடுக்கப்பட்ட பெரியாங்கோனாரின் மற்றொரு தங்கை இசக்கியின் அருள் வந்து ஆடினார். அப்போது ‘‘எல்லா புள்ளங்களும் நல்லா இருப்பீங்க, உங்களுக்கு துணையா நான் இருப்பேன். கட்டிக்கொடுத்து போன பொன்னு வாரிசுங்க, புருஷன், புள்ளங்களோட என் இருப்பிடத்துக்கு கொடை தோறும் வந்து சேரணும். அவங்க மனசு கோணாம, எம் மக்க நீங்க நடந்துக்கணும்.
அவங்களுக்குத்தான் பிரசாதத்த முதல் கொடுக்கணும். நான் கண்டுக்காம இருந்ததால ஒரு பொன்னு உசுர மாச்சிகிட்டா, அதனால பொன்னு புள்ளங்கதான் முதல்ல.’’ என்றுரைத்தாள். அதன்படி இந்த கோயிலில் பெண் வரிதாரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மதித்து வணங்குபவர்க்கு தாயாகவும், அவமதிப்பவர்க்கு நீலியாகவும் மாறிவிடுவாள் இசக்கி. மழலை வரம் வேண்டி மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு வரமளித்து காத்தருள்கிறாள். இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து கிழக்கே தோட்டாக்குடி அடுத்த மலையன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: