ஆண்மையை பாதிக்குமா ஸ்மார்ட்போன்? ஒரு மருத்துவ விளக்கம்

ன்றைக்கு, சிறு நகரங்களில்கூட `குழந்தையின்மைக்கான சிகிச்சை மையங்கள்’ (Fertility Centres) முளைத்துவிட்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இல்லாத அளவுக்கு இப்போது இந்த மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெண்களுக்கு இணையாக ஆண்களும் சிகிச்சைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். `லேப்டாப், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுகூட ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்’ என்று அண்மையில் ஓர் ஆங்கிலப்

பத்திரிகையில் வெளியான செய்தி அதிரவைக்கிறது. `இந்தச் செய்தி உண்மைதானா… ஆண்களுக்கு இந்த அளவுக்குக் குறைபாடு ஏற்பட என்ன காரணம்?’ என்று கேட்டால், ஒன்றல்ல… பல காரணங்களை அடுக்குகிறார்கள் மருத்துவர்கள்.

 ஆண்கள்நல மருத்துவரும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவருமான சேரன் கோவலன் சொல்கிறார்…

“ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. புகைபிடித்தல்கூட ஒரு காரணம். வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் பணிபுரிபவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். உதாரணமாக, ஆடை உற்பத்தித்துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. ஆண்களுக்கு விதைப்பைகள் இயற்கையாகவே உடலுக்கு வெளியே அமைந்திருக்கின்றன. அவற்றால் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதால் அதிக வெப்பமான சூழலில் பணிபுரிவோருக்கு விந்து உற்பத்தி பாதிக்கப்படும்.

லேப்டாப்பை மடியில்வைத்தபடி வேலை பார்க்கும்போது அதிலிருந்து வெளியாகும் வெப்பம் விதைப்பைகளை பாதிக்கும். அதன் காரணமாக லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, வெப்பமான சூழலை ஆண்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

 

`செல்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது மருத்துவரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

எம்.ஆர்.ஐ ஸ்கேனில்கூட மின்காந்த அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. எனவே, `செல்போன் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும்’ என்று உறுதியாகக் கூற முடியாது.

இப்போது மலட்டுத் தன்மை குறைபாட்டுக்காகச் சிகிச்சைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு இன்றைய வாழ்க்கைமுறையும் காரணம். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஆண் மலட்டுத் தன்மை பிரச்னை இருந்திருக்கிறது. ஆனால், அப்போது யாரும் சிகிச்சைக்காக வரவில்லை. மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தை உணர்ந்த பிறகுதான் சிகிச்சைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்திலெல்லாம் குழந்தையின்மைப் பிரச்னை என்றால், பெண்களைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள். `குழந்தை இல்லையா… இன்னொரு திருமணம் செய்துகொள்’ என்று ஆண்களை வலியுறுத்தினார்கள். ஆனால், சமீபகாலமாக, ‘ஆண்களுக்கும் மலட்டுத் தன்மை இருக்கலாம்’ என்ற உண்மையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். பரிசோதனை செய்துகொள்ளவும் முன்வருகிறார்கள். அந்த விழிப்புணர்வு நன்றாகவே ஏற்பட்டிருக்கிறது’’என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுகிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்

“நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும்; விந்துப்பைகளின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இதற்கு ஒரு ஸ்பெஷல் மெக்கானிசமே இருக்கிறது. விந்துப்பைகளைச் சுற்றி ரத்தநாளங்கள் சுருண்டு சுருண்டு இருக்கும். ரத்தம், உடலிலிருந்து விந்துப்பைகளுக்குப் போகும்போது, சுருண்டிருக்கும் ரத்தநாளங்கள் அவற்றின் வெப்பத்தைக் கொஞ்சம் குறைத்துவிடும்.

 

ரத்தநாளங்கள் சில நேரங்களில் அவற்றின் சரியான, இயல்பான தன்மையை இழந்துவிடும். அப்படி இழந்தால் அதை, `வேரிகோசில்’ (Varicocele) என்கிறோம். அதாவது, ரத்தநாளங்கள் சரியாக இல்லாமல், விரிவடைந்து ரத்தம் தேங்க ஆரம்பித்துவிட்டால், ரத்தநாளங்களில் வெப்பம் அதிகமாகிவிடும்; விந்துப்பைகளும் சூடாகிவிடும். இந்த வேரிகோசில் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

ஆரோக்கியமான ஆண்களின் விந்துப்பைகளுக்கு ரத்தம் கொஞ்சம் குறைவாகவே செல்லும். அவர்களின் விந்துப்பைகளின் வெப்பநிலையும் 35 டிகிரி செல்சியஸாகவே இருக்கும். விந்துப்பைகளை, `விந்துத் தொழிற்சாலை’ என்றே சொல்லலாம். ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி அணுக்கள்வரை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும். லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வேலை பார்க்கும்போது, அதிலிருக்கும் பேட்டரி சூடாவதால் வெளியாகும் வெப்பம் விந்துப்பைகளை பாதிக்கும். இது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. எனவே, லேப்டாப்பில் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது. அதேபோல வெப்பத்தை அதிகம் வெளிப்படுத்தும் பெரிய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், லாரி ஓட்டுநர்கள், பாய்லரில் பணிபுரிபவர்கள்… என எல்லோருக்குமே இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதிக தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள், சைக்கிளை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இருபக்கமும் காலைத் தொங்கப்போட்டபடி உட்காரும் வாகன இருக்கை, (Saddle Seat) மிகவும் கடினமாக இல்லாமல் மென்மையானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், அடிவயிற்றுக்குக் கீழே `புடெண்டல் ஆர்ட்டரி’ (Pudendal Artery) என்ற ரத்தநாளமும் நரம்புகளும் இருக்கும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவற்றின் மேல் நம் மொத்த எடையையும்வைத்து, அழுத்தி உட்கார்ந்திருப்போம். அதனால், ஆணுறுப்புக்கும் விந்துப்பைக்கும் ரத்த ஓட்டம் குறைவாகச் செல்லும். விந்தணுக்கள் குறையும். விரைப்புத் தன்மையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

 

செல்போனைப் பொறுத்தவரை அதன் இயக்கத்துக்கு மின்காந்த அலைகள் இன்றியமையாதவை. அவை ‘விந்தணுக்களைக் கண்டிப்பாக பாதிக்கும்’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். பல மணி நேரம் செல்போனைப் பயன்படுத்துபவர்கள், விந்துப்பைகளுக்கு அருகே பேன்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்திருப்பவர்கள் ஆகியோர் மின்காந்த அலைகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதை விந்தணுக்களின் `மார்பாலஜி’ (Morphology) என்று சொல்வோம். அதாவது, அவை உருச்சிதைவில்லாத அணுக்களின் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும். எனவே, செல்போனை அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பேன்ட் பாக்கெட்டில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். லேப்டாப்பை மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்துவது நல்லது. லேப்டாப்பை மடிமேல் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல அதிக சூடான நீரில் குளிப்பது, `சோனா பாத்’ (Sauna Bath) எனப்படும் நீராவிக் குளியல் எடுப்பது இவையும் விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும்.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, உருச்சிதைவான விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் குழந்தைப்பேறில்லாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. முன்பெல்லாம் 6 சதவிகிதம்,

8 சதவிகிதம் தம்பதிகளுக்குத்தான் குழந்தையில்லாமல் இருந்தது. இப்போது அது 15 சதவிகிதமாகியிருக்கிறது. இனிவரும் காலங்களில் இது இன்னும் அதிகமாகலாம்.

 

குளிர்பானங்கள், உணவுகள்கூட ஆண்களுக்கு ஏற்படும் இந்தக் குறைபாட்டுக்கு ஒரு காரணமாகலாம். ஒரு பாட்டிலில் தண்ணீரை ஊற்றிவைத்தால் அது இரண்டு, மூன்று நாள்களில் கெட்டுப்போகும். ஆனால், பாட்டிலில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள் மூன்று, நான்கு மாதங்களுக்கு கெட்டுப் போகாமலிருக்க வேண்டும். அதற்காகத் தண்ணீரிலும் குளிர்பானங்களிலும் சில பூச்சிக்கொல்லி மருந்துகளை, பதப்படுத்தும் பொருள்களைச் (Preservatives) சேர்க்கிறார்கள். ஊறுகாய் தொடங்கி எந்த உணவுப் பொருளை வேண்டுமானாலும் இன்றைக்கு இந்த முறையில் பதப்படுத்திவைத்துச் சாப்பிட முடியும். இப்படிப் பதப்படுத்துவதற்காகச் சேர்க்கப்படும் பல ரசாயனப் பொருள்கள், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்; பாலியல் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

பழங்களும் காய்களும் கெட்டுப்போகாமலிருக்க, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லிகளாலும் விந்தணுக்கள் குறையலாம். அண்மையில்கூட ஒரு பெரிய நிறுவனம் தயாரித்த நூடுல்ஸில் `பதப்படுத்தும் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன’ என்ற பிரச்னை எழுந்தது. இன்றைக்குத் தயாரிக்கப்படும் எல்லா உணவுப் பொருள்களிலும் குளிர்பானங்களிலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலமாக நாம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் நச்சுப்பொருள்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.

கார், லாரி, பைக் போன்ற வாகனங்களிலிருந்து எழும் புகையும்கூட ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத காரணங்கள். ஆனால், விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே நம்மில் பலர் லேப்டாப்பையும் செல்போனையும் பயன்படுத்துகிறோம். இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துகொள்ளலாமே!’’

%d bloggers like this: