கோட்டை முதல் குமரி வரை… கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்… துறைதோறும் கேன்சர்!

பரபரப்பாக உள்ளே நுழைந்த கழுகார், ‘‘ஜூனியர் விகடன் இதழையே ‘ஊழல் ஸ்பெஷல்’ இதழாகக் கொண்டுவந்துள்ளதற்கு வாழ்த்துகள்! நல்ல முயற்சி.நானும் அப்படியான தகவல்களையே இப்போது தருகிறேன்.

துறைதோறும் கேன்சர்!

அதிகாரம் முடிவுக்கு வரும்போது, எக்கச்சக்கமான ஊழல்களும் லஞ்ச விவகாரங்களும் வெளிச்சத்துக்கு வரும். அதற்கெல்லாம் இந்தக் கட்டுரைகள் திறவுகோல்களாக இருக்கும்!’’ என்றார்.

‘‘நிச்சயம் நடக்கும்தானே?’’

‘‘அதில் என்ன சந்தேகம்? அறப்போர் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளும், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்கள் தொடர்பில் ஏராளமான ஆவணங்களைத் திரட்டிவைத்துள்ளன. இவை தொடர்பான வழக்குகளிலும், கிலோக்கணக்கில் ஆதாரங்களை அடுக்கியிருக்கின்றன. துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் கமிஷனாக அடித்ததுபோக, பினாமி நிறுவனங்களைவைத்து டெண்டர் எடுத்ததிலும் கோடிகள் விளையாடுகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,126 கோடி ரூபாய்க்கு டெண்டர் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்!’’

‘‘கிறுகிறுக்கவைக்கிறதே!’’

‘‘யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில்தான், அமைச்சர்கள் சிலர் பினாமி நிறுவனங்களைத் தொடங்கி டெண்டர்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களின் பூர்வீகம் என்ன என்பது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் வருமானவரித் துறையினர் எடுத்து வைத்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சென்னையில் ஒப்பந்ததாரர் ஒருவரின் வீட்டில் ரெய்டு நடந்து, தகவல்கள் அரைகுறையாக வெளியாகி அமுக்கப்பட்டதே நினைவிருக்கிறதா?’’

‘‘நன்றாகவே நினைவிருக்கிறது… 16 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கமாகவே கைப்பற்றினார்களே…’’

‘‘அதேதான்… அப்போது இரண்டு அமைச்சர்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்களை அழைத்து விசாரிக்கும் வகையில் விசாரித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஐ.டி அதிகாரி ஒருவர். அதில் பயந்துபோன அமைச்சரின் பினாமி ஒருவருக்கு, ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கிறது. மற்றொருவர் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார். ஆனாலும், அப்போதே அந்த அமைச்சரின் அத்தனை விவகாரங்களையும் தோண்டி எடுத்துவிட்டார்கள்!’’

‘‘அவருக்கு மட்டுமா… எல்லோருடைய ஜாதகமும்தான் அவர்களிடம் இருக்கிறதே. ஆனால் பி.ஜே.பி-யுடன் இணக்கமாக இருக்கும் வரை எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதுதானே எதிர்க்கட்சிகளின் புகாராக இருக்கிறது!’’

‘‘அதென்னவோ உண்மைதான்… ஒருசில துறைகளில் மட்டும்தான் ஊழலில் பெரும்தொகை புரளும். மற்ற துறைகளில் பெரியளவிலான தொகையில் ஊழல் செய்ய வாய்ப்பில்லை. அதனால் டிரான்ஸ்ஃபர்களில் அடித்துத் தூக்குகிறார்கள். ஆட்சியர் முதல் ஆசிரியர் வரை பணிமாறுதலுக்கு இவ்வளவு ரேட் என்று பெரிய பட்டியலே வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ் ஆன நம் தமிழக அதிகாரிகளையே ஆட்சியராக நியமித்திருப்பதற்கு முழுமுதற் காரணம், அவர்களில் பலரும் பணம் கொடுத்து வந்திருப்பதுதான்!’’

‘‘அவர்கள்தானே அமைச்சர்கள் சொல்வதை அப்படியே கேட்பார்கள்!’’

‘‘ஆமாம்… ஆட்சியர்களை விட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பணியிடங்களுக்குத் தான் அதிக கிராக்கி என்கிறார்கள். அங்குதான் கோடிக்கணக்கில் பணம் புழங்கும். முன்பெல்லாம், அந்தப் பணியில் நேரடியாக ஐ.ஏ.எஸ்-ஸாகத் தேர்வான இளம் அதிகாரிகளைத்தான் நியமிப்பார்கள். இப்போது அதை பி.ஆர்.ஓ பதவிபோல ‘பொலிட்டிக்கல் போஸ்ட்டிங்’ ஆக மாற்றிவிட்டார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கேற்ப ரேட் எகிறுகிறது. ‘வளமான’ மாவட்டம் என்றால் அந்தப் பணியிடத்துக்கு இரண்டு ‘சி’ வரை சிதறவிடவும் பலர் தயாராக இருக்கிறார்கள்!’’

‘‘இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தலைமைச் செயலருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஒரு கடிதம் கொடுத்தார்களே… என்ன ஆனது அது?’’

‘‘அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்ட கிரிஜா வைத்தியநாதன், அந்தப் பதவியிலிருந்தே ஓய்வு பெற்றுவிட்டார். கோரிக்கை அப்படியேதான் இருக்கிறது. அதிலும் பல மாவட்டங்களில் திட்ட இயக்குநர்கள் பயங்கர பவர்ஃபுல்லாக இருக்கிறார்கள். சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன் சிக்கினாரே… அவர் ஓர் உதாரணம் தான். இதேபோல மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி, சாதாரண பொறியாளர் பதவி வரை பொறுப்புக்கேற்ப டிரான்ஸ்ஃபருக்கு ரேட் பேசப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட சில மாநகராட்சிகளில் ஒருசில அதிகாரிகள், சாதாரண துறைகளின் அமைச்சர்களுக்கு இணையாகச் சம்பாதித்திருக் கிறார்கள். புதிய தலைமைச் செயலாளர் சண்முகம்தான் மனதுவைக்க வேண்டும்!’’

‘‘பதிவுத் துறையிலும் பணி மாறுதலில் பல கோடி ரூபாய் விளையாடுகிறதாமே?’’

‘‘ஆமாம்… மொத்தமுள்ள 578 சார்பதிவாளர் பணியிடங்களில் நூறு இடங்களுக்குப் போட்டி பலமாக இருக்கிறது. அதிலும் பதிவு அதிகமாக நடக்கும் ஒருசில அலுவலகங்களுக்குப் பணிமாறுதலில் செல்வதற்கு ஒரு கோடி ரூபாய் ரேட் நிர்ணயித்திருக்கிறார்கள். அதாவது பத்தாயிரம் பதிவுகள் நடக்கும் ஓர் அலுவலகத்தில், ஒவ்வொரு பதிவுக்கும் 2,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. பத்திரப்பதிவில் பாதியைக் கணக்கிட்டு, சராசரியாக 5,000 ரூபாய் லஞ்சம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டாலும், ஓர் அலுவலகத்துக்கு ஆண்டுக்கு இரண்டரைக்கோடி ரூபாய் வருமானம். அதில் ஒரு கோடி ரூபாய் அங்கே கொடுத்தால், அதிகாரிக்கு லாபம் ஒன்றரைக்கோடி ரூபாய்!’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘மேற்கண்ட ரேட், இந்த ஆண்டில் இன்னும் தாண்டிப்போய்விட்டதாம். வணிகவரித் துறையில் இணை ஆணையர் பதவிக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தர வேண்டியிருக்கிறதாம். இந்தத் துறையில் நடக்கும் இவை அனைத்தையும் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்தான் முடிவுசெய்கிறாராம்.’’

‘‘ஆசிரியர்கள் டிரான்ஸ்ஃபருக்கு எவ்வளவு வாங்குகிறார்களாம்?’’

‘‘அது சீனியாரிட்டியையும் வாங்கும் சம்பளத்தையும் பொறுத்தது. பொதுவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து ஆசிரியர்கள் இடமாற்றம் நடக்கும். முன்பெல்லாம் இருப்பவர்களிலேயே ஜூனியர்களைத்தான் இடமாற்றம் செய்வார்கள். இப்போது இன்னும் ஒருசில வருடங்களில் ஓய்வுபெறவிருக்கும் சீனியர்களைத் தூக்கியடிக்கிறார்கள். ஓய்வுபெற இரண்டோர் ஆண்டுகளே இருக்கும் நிலையில், அவர்களால் எப்படி தூரமான ஊருக்குச் செல்ல முடியும்? அதனால், கேட்டதைக் கொடுத்துவிட்டு, அதே இடத்தை தக்கவைத்துக்கொள்கிறார்கள் அல்லது பக்கத்தில் இடமாற்றம் வாங்கிக்கொள்கிறார்கள். இந்த வகையில் ஒரு டிரான்ஸ்ஃபருக்கு பத்து லட்சம் ரூபாய் வரை பணம் கைமாறுகிறது. இதற்காகவே பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான புரோக்கர்கள் வலம்வருகிறார்கள்!”

‘‘ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லும் ‘வெளிப்படையான ஊழல் ஆட்சி’ என்பது இதுதானா?’’

‘‘அதை அவர்தான் விளக்க வேண்டும்… ஆனால், ஜூன் மாதம் தொடங்கிய டிரான்ஸ்ஃபர் மேளாவில் பல நுாறு கோடி ரூபாய் புழங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உயர்கல்வித் துறை உட்பட ஏராளமான துறைகளில் பணி மாறுதல்களுக்கு பயங்கரமாக பணம் விளையாடுகிறது. மொத்தத்தில், டிரான்ஸ்ஃபர் விவகாரத்தில் துறைதோறும் கேன்சர் பீடித்திருக்கிறது!’’

‘‘மாஜி அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் ஃபாலோ அப் இருக்கிறதா?’’

“மணிகண்டன் சொன்ன விஷயங்களைவைத்து வழக்குப் பதிவுசெய்ய முடியுமா என்று, தி.மு.க தரப்பில் ஆலோசனை நடக்கிறதாம். அதேசமயம் சட்டரீதியாக அதில் சரிவருமா என்றும் ஆலோசிக்கிறார்கள். ஆனால், தி.மு.க தரப்பில் ஏன் தாமதம் என்றுதான் புரியவில்லை!’’

‘‘காஷ்மீர் பிரச்னையில் தி.மு.க எம்.பி-க்கள் போர்க்குரல் கொடுத்தார்களே… பி.ஜே.பி-யின் ரியாக்‌ஷன் என்ன?’’

‘‘அது தெரியவில்லை… ஆனால், தமிழகத்தில் இரண்டு மதுபான நிறுவனங்களில் கடந்த வாரத்தில் திடீரென ரெய்டு நடந்தது. அதற்குப் பின்னணியில் அரசியல் காரணம் இருப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். ஏனெனில், அதில் ஒரு நிறுவனத்தினர், ஆழ்வார்பேட்டை அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்களாம். மற்றொரு நிறுவனம் தி.மு.க தலைவர் ஒருவருக்கு நெருக்கமானதாம். இந்த ரெய்டுகளில், கணக்கில் வராத 700 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள்!’’

‘‘ரஜினியின் ‘கிருஷ்ணன் – அர்ஜுனன்’ பேச்சு பரபரப்பாகிவிட்டதே?’’

‘‘அந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவதே சந்தேகமாக இருந்ததாம். ஆனால், ஆடிட்டர் ஒருவர் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலரின் ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு, கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்குக் கிளம்பினாராம். அங்கே போய் பரபரப்பைப் பற்றவைத்துவிட்டார். அவருக்காக துணை ஜனாதிபதியின் புரொட்டகாலில் சில மாற்றங்கள் செய்தார்களாம். ரஜினியின் பேச்சைவைத்து, `அவர் கட்சி தொடங்கி பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கப்போகிறார். பி.ஜே.பி-யின் அடுத்த தமிழகத் தலைவரே அவர்தான்’ என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், `2020, ஜனவரி வரை அவரிடமிருந்து அரசியல் அறிவிப்பு எதுவும் வராது’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

“ஓஹோ!’’

‘‘சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் பாணியில் பி.ஜே.பி-யுடன் நட்பைத் தொடரவும்… அதேநேரத்தில் தனித்துவமான தலைவராகவும் வலம்வர விரும்புகிறார் ரஜினி. அவருக்காக அண்டை மாநில முதல்வர் ஒருவர் டெல்லி பி.ஜே.பி மேலிடத்தில் பேசிவருகிறார். ‘ரஜினியை பி.ஜே.பி-யில் சேரச்சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம். நான் எப்படி காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வில் உங்களோடு நெருக்கமாக இருக்கிறேனோ, அதேபோல் உங்களுக்கு ரஜினி இருப்பார். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஸ்டாலின், காங்கிரஸை விட்டுப் பிரிய மாட்டார் என்பதை நான் நேரடியாகப் பேசியதால் புரிந்துகொண்டேன். ரஜினியை சரியான முறையில் பயன்படுத்தினால்தான்

தி.மு.க-வைத் தோற்கடிக்க முடியும். கூட்டணி இல்லாமல் நட்பு வளையத்துக்குள் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார். `ரஜினி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரச்னைகளின் தன்மையைப் பொறுத்து பி.ஜே.பி-யின் முடிவுகளை ஆதரிப்பார். அதேசமயம், தனித் தன்மையுடன் தமிழக அரசியல் சூழல்களை முன்னெடுப்பார்’ என்றெல்லாம் பி.ஜே.பி தலைமையிடம் எடுத்துச் சொன்னாராம்” என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: