நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்!-ஜூனியர் விகடன்

ஒரு மாதத்துக்கு ரூ.600 கோடிக்கு விற்பனை… அதில் லஞ்சம் மட்டும் ரூ.300 கோடி…

என்ன பதில் சொல்லப்போகிறார் எடப்பாடி?

செயின்ட் ஜார்ஜ் கோட்டை தொடங்கி டெல்லி செங்கோட்டை வரை அரசியல் அதிர்வை ஏற்படுத்திய விவகாரம், குட்கா ஊழல். அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி முன்னாள் டி.ஜி.பி, உயரதிகாரிகள் எனப் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும், குட்கா புழக்கம்

குறைந்தபாடில்லை. தெருவுக்குத் தெரு தாராளமாகக் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் லஞ்சம், ஊழல் தொடர்பாக வாசகர்கள் புகார் அளிக்க, விகடனில் வாட்ஸ் அப் எண் அளித்திருந்தோம். ஆகஸ்ட் 5-ம் தேதி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர், `சென்னை நகர் முழுவதும் குட்கா பரவலாக விற்பனையாகிறது. எங்கள் பகுதியில் பள்ளி சிறுவர்கள்கூட குட்காவுக்கு அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது நடவடிக்கை எடுங்கள்’ என்று புகார் அளித்திருந்தார். உடனடியாக களம் இறங்கியது ஜூனியர் விகடன் டீம். இதோ அதிரவைக்கும் குட்கா ஊழலில் பின்னணி விவகாரங்கள்…

குட்கா உட்கொண்டால், வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. இதனால் அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரைத் தவிர இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் குட்காவுக்குத் தடைவிதித்துள்ளன. கடந்த 2013, மே-8 அன்று, அன்றைய முதல்வர் ஜெயலலிதா, விதி எண் 110-ன்கீழ் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், `புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்க, குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருள்களைத் தயாரிக்க, சேமித்துவைக்க, விநியோகிக்க, விற்க தடைவிதிக்கப் படுகிறது’ என்றார். அறிவித்தபடியே 2013 ஜூலை முதல் குட்கா, பான்பராக், மாவா விற்க மற்றும் இருப்புவைக்க தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கடந்தும், நிலைமை மாறவில்லை.

முற்றுபெறாத முன்கதை இது!

2015-ம் ஆண்டு மார்ச் மாதம், சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் சிலரது குடோன்களைக் குறிப்பிட்டு, அங்கே தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை காவல் துறைக்கு சி.பி.ஐ கடிதம் எழுதியது. தொடர்ந்து செங்குன்றம், மாதவரம் பகுதிகளில் குடோன்களில் ரெய்டு நடத்திய சென்னை காவல் துறையினர், மூட்டை மூட்டையாக குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். ஆனால், திடீரென வழக்கின் விசாரணை பாதியிலேயே நின்றுபோனது.

இந்த நிலையில், பான் மசாலா தயாரிக்கும் சில தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைக்க… 2016, ஜூலை 8-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள தொழிலதிபர்கள் சிலருக்குச் சொந்தமான 30 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை அருகே செங்குன்றம், புழல் பகுதிகளில் உள்ள ஏழு குடோன்களில் நடைபெற்ற சோதனையில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை அள்ளினார்கள். சுமார் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. சென்னையில் பான்மசாலா மொத்த டீலர்களாகச் செயல்பட்ட சீனிவாச ராவ், மாதவ ராவ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் பலவற்றுடன், ஒரு டைரியும் சிக்கியது. இதில்தான் ‘ஹெச்.எம்’ உள்ளிட்ட சங்கேதப் பெயர்களில் பணம் யாருக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டது என்ற விவரம் எழுதப்பட்டிருந்தது.

சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிப்பட்டன. விசாரணை, தற்போது சி.பி.ஐ வசம் சென்றுள்ளது. இவ்வளவு நடந்தும், ‘தமிழகத்தில் குட்கா விற்கப்படுவதில்லை’ என்று பழைய பல்லவியையே பாடுகிறது தமிழக அரசு. ஆனால், நாம் களம் இறங்கி ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடத்தியபோது ஏராளமான குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப் பட்ட பொருள்களைப் பெற்றோம். இதில் பின்னிப் பிணைந்திருக்கும் ஊழல் நெட்வொர்க், நம்மை அதிரவைக்கிறது.

ஓடும் ரயிலிலிருந்து வீசப்படும் மூட்டை!

குட்கா விற்பனையில் ஈடுபடும் டீலர்கள் சிலரை தேடிப்பிடித்து பேசினோம். ‘‘ஆந்திரத்திலிருந்து திருத்தணி ரூட்டில் லாரிகள், வேன்கள், கார்கள் மூலமாக தினமும் குட்கா சென்னைக்குள் வருகிறது. பெங்களூரிலிருந்து ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் மூலமாகவும் குட்கா பாக்கெட்டுகளைக் கடத்துகிறார்கள். இதுபோக, ஆந்திரா வழியாக சென்னைக்கு வரும் ரயில்களிலும் குட்கா பொருள்கள் கடத்தப்படுகின்றன. ரயில் ஆந்திர எல்லையைத் தாண்டியவுடன் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் ஊர்களைக் கடக்கும்போது, ஓடும் ரயிலில் இருந்தே குட்கா மூட்டைகள் வெளியே வீசப்படும். அதேபோல், சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு சற்று முன்பாக சிக்னலுக்காக ரயில் ஓரிடத்தில் நிற்கும். மீதம் இருக்கும் மூட்டைகளையும் அங்கே வீசிவிடுவார் கள். பெரும்பாலும் அதிகாலை ஓரளவு இருட்டாக இருக்கும்போதுதான் இது நடக்கும். இவற்றை அள்ளிப்போக சிறுவர்கள் உட்பட ஆள்கள் அங்கு தயாராக இருப்பார்கள். அடுத்த சில மணி நேரங்களிலேயே குட்கா மூட்டைகள் சேர வேண்டிய இடத்துக்குச் சென்று சேர்ந்துவிடும். கடத்தல் ஆசாமிகள் வெறும்கையை வீசிக்கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்குவார்கள். இப்படியாக, சுமார் 300 கிலோ குட்கா தினமும் சென்னைக்குள் வருகிறது.

சென்னையைச் சுற்றி செங்குன்றம், மாதவரம், புழல் ஏரியாக்களில் சுமார் 12 குடோன்கள் ரகசியமாகச் செயல்படுகின்றன. முன்பெல்லாம், குடோன்களிலிருந்து மொத்த வியாபாரிகளுக்குப் போய், அங்கிருந்து குட்கா பெட்டிக்கடைகளுக்குப் போகும். தடைவிதிக்கப்பட்டதால், இப்போது டோர் டெலிவரி மட்டுமே செய்கிறார்கள். இதற்காக தனி டீலர்கள் உண்டு. இவர்கள் தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள், சிகரெட் சப்ளை செய்பவர்கள், தண்ணீர் கேன் போடுபவர்கள், பிச்சைக்காரர்கள்போல் சென்று, கடைகளில் டோர் டெலிவரி செய்துவிடுவர். வாட்ஸ் அப் மூலம் மட்டுமே இவர்கள் தகவல் பரிமாறிக்கொள்வார்கள். புதிதாக குட்கா கேட்கும் கடைகளுக்கு, உடனடியாக குட்கா கிடைக்காது. அந்தக் கடையை சுமார் ஒரு வாரத்துக்கு வாடிக்கையாளர்போல் சென்று குட்கா கேட்டும், தூரத்திலிருந்து கண்காணித்தும் அதன் பிறகே குட்கா சப்ளை செய்வார்கள்” என்றவரிடம், “கடைகளில் யார் போய்க் கேட்டாலும் குட்கா கிடைத்துவிடுமா?” என்றோம்.

நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்!

“அப்படி கொடுக்கமாட்டார்கள். ஒருவர் குட்கா உட்கொள்பவர் என்றால், முகத்தை அல்லது உதடுகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும். அப்படியும் சந்தேகம் ஏற்பட்டால், கடைக்காரர் வாயைத் திறந்து காட்டச் சொல்வார். அதன் பிறகே குட்கா அளிக்கப்படும். இது புதிதாக வருபவர்களுக்கு. நீண்டநாள் கஸ்டமர்கள், தெரிந்தவர்கள், பிரச்னை ஏற்படுத்தாத நபர்களுக்கு மட்டுமே குட்கா விற்கப்படும். ஒருவர்மீது சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் குட்காவை விற்பதில்லை. சென்னையின் எல்லா பகுதியிலும், பேப்பரில் மடித்துதான் குட்கா கொடுக்கப்படுகிறது. டீலர்களிடமிருந்து குட்காவை வாங்கும் கடைக்காரர்கள், கஸ்டமர்களிடம் இருமடங்கு லாபம் வைத்து விற்கிறார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு மட்டுமே, ஒருநாள் வியாபாரத்தில் பாதிக்குப் பாதி லஞ்சமாகச் செல்கிறது” என்று அதிரவைத்தார்.

தொடர்ந்து நமக்கு புகார் அளித்த வாசகரின் வில்லிவாக்கம் ஏரியாவிலிருந்தே குட்கா ‘ஸ்டிங் ஆபரேஷனை’த் தொடங்கினோம்.

“இன்னா கலாய்க்கிறீயா… முகத்தைக் கிழிச்சிடுவேன்!’’

வில்லிவாக்கம் – கொரட்டூர் மெயின் ரோட்டில் உள்ள சில பெட்டிக்கடைகளில் குட்கா கேட்டபோது, நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “இன்னா கலாய்க்கிறீயா… முகத்தைக் கிழிச்சிடுவேன்… போயிடு” என்றார்கள். சிலரோ, “அதெல்லாம் கிடைக்காதுப்பா!” என்றார்கள். இரண்டு மணி நேரம் கடந்தும் தேறவில்லை. அப்போது ஒரு முதியவர் நம்மை அணுகி, “என்னப்பா, ரொம்ப நேரமா இங்கயே சுத்திட்டு இருக்கீங்களே?” என்றார். அவரிடம், “குட்கா எங்கே கிடைக்கும்?” என்றோம். “இங்க எல்லா பெட்டிக்கடையிலும் விக்குறாங்க. ஆனா, புதுசா போய் கேட்டா, கொடுக்க மாட்டாங்க. நான் வழக்கமா வாங்குற கடை இருக்கு. அங்க போலாம் வாங்க. ஆனா, எனக்கு நாலு பாக்கெட் வாங்கிக் குடுக்கணும்” என்ற நிபந்தனையுடன் அழைத்துச் சென்றார். தொடர்ந்து அவரே, “குட்கான்னு கேட்டால்லாம் தர மாட்டானுங்க. அதுக்குன்னு ஒரு கோட் வேர்டு இருக்கு. அதைச் சொல்லி கேட்டாதான் தருவாங்க” என்றவர் ஒரு பெட்டிக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்!

கடையில் இருந்த பெண்மணியிடம், “….. (கோட் வேர்டு சொல்லி) இருக்காங்க?” என்றோம். நம்மை ஏற இறங்க பார்த்தவர், உடன் வந்த பெரியவரைப் பார்த்தார். பெரியவர் சிக்னல் கொடுத்தவுடன், குட்கா பாக்கெட்டுகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார். பிறகு அந்தப் பெரியவர் நம்மிடம், கடைகளில் குட்காவை எப்படி வாங்குவது என்று சில டிப்ஸ்களைக் கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் சொன்ன டிப்ஸ்கள்படியே கேட்டபோது, அடுத்த தெருவில் இருந்த ஒரு கடையில் ஒரு சரம் குட்கா பாக்கெட்டுகளும், ஐந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளும் கிடைத்தன.அயனாவரம் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஐஸ்ஹவுஸ் டாக்டர் நடேசன் ரோடு, சூளைமேடு அண்ணா நெடும்பாதை, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு புறநகர் பேருந்துநிலைய சாலை, திருவான்மியூர் போஸ்ட் ஆபீஸ் ரோடு, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் இங்கெல்லாம் சென்றோம். நாம் விசாரித்த வரை, இங்கெல்லாம் பெரும்பாலான கடைகளிலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. நமது ‘ஸ்டிங் ஆபரேஷன்’ குழு, 120 குட்கா பாக்கெட்டுகளையும், 55 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பெற்றது.

நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்!

ஒரு மாத லஞ்சம் ரூ.300 கோடி!

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 300 கிலோ குட்கா சென்னைக்குள் வருகிறது. தமிழ்நாட்டில் ஆறு நிறுவனங்களின் குட்காதான் அதிகமாக விற்பனையாகிறது. சென்னையில் அதிகமாக ரெமோ, கூல் லிப், சைனி கைனி, ஹான்ஸ் போன்ற குட்கா பொருள்கள் விற்கப்படுகின்றன. ஒரு பாக்கெட் ரெமோ குட்கா, 300 முதல் 350 ரூபாய் வரை கடைகளுக்கு சப்ளை செய்யப் படுகிறது. டிமாண்டைப் பொறுத்து இதன் விலை ஏறலாம். ஒரு பாக்கெட்டில் 80 பீஸ்கள் இருக்கும். அடக்க விலையாக வாடிக்கையாளர்களுக்கு ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை நகருக்குள் மட்டுமே, சராசரியாக 20,000 கடைகளில் குட்கா விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு இந்த 20,000 கடைகளிலும் சராசரியாக விற்பனையாகும் 400 பீஸ்களைக் கணக்கில்கொண்டால், ரெமோ குட்காவின் ஒரு நாள் வியாபாரம் மட்டுமே 4 கோடி ரூபாய்.

30 பீஸ்கள்கொண்ட ஹான்ஸ் பாக்கெட், கடைகளுக்கு 450 ரூபாய்க்கு சப்ளை செய்யப்படுகிறது. குட்கா வியாபாரம் செய்யும் 20,000 கடைகளில், ஒரு பீஸ் 20 ரூபாய் என்ற கணக்கில், ஒரு நாளைக்கு 60 பீஸ்கள் வரை ஹான்ஸ் விற்றுத்தீர்கிறது. சென்னையில் ஹான்ஸ் குட்காவின் ஒரு நாள் வியாபாரம் மட்டும் 2.4 கோடி ரூபாய். இன்னும் நான்கு நிறுவனங்கள் சென்னைக்குள் சந்தை விரித்துள்ளன. அவற்றின் விற்பனையையும் கணக்கில்கொண்டால், சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய்க்கு குட்கா விற்பனையாகிறது. ஒரு மாதத்துக்கு 600 கோடி ரூபாய். இந்த வியாபாரத்தில் 50 சதவிகிதம் காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் லஞ்சமாகச் செல்கிறது. அதாவது, 300 கோடி ரூபாய் லஞ்சம். இது சென்னை கணக்கு மட்டுமே. தமிழகம் முழுவதும் விற்பனையாகும் குட்காவின் வருமானத்தை, நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஜெயலலிதா தடைசெய்த குட்காவை தாராளமாகப் புழங்க அனுமதிப்பது ஏன்? பொதுமக்களின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லையா… அல்லது, ஆட்சியாளர் களுக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறதா? தினமும் வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் செல்கிறது? பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது.

%d bloggers like this: