எடப்பாடி போகிறார் டூருக்கு… முதல்வர் பொறுப்பு யாருக்கு?

லேசான தூறலில் நனைந்து வந்த கழுகாருக்கு, சுடச்சுட சுக்குக்காபி கொடுத்ததும் உற்சாகமாகி செய்திகளைச் சூடாகக் கொட்ட ஆரம்பித்தார்.

அமித் ஷாவுடன் எடப்பாடி, ஓ.பி.எஸ்

‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்தான் ஆளுங்கட்சியில் ‘ஹாட் டாப்பிக்’காக ஓடிக்கொண்டிருக் கிறது. இதற்கு முன் முதல்வராக இருந்த யாருமே அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் இத்தனை நாள்கள் வெளிநாட்டுப் பயணம் போனதில்லை. அதுதான் பலருக்கும் உறுத்தலாகவும் சந்தேகமாகவும் இருக்கிறது.’’

‘‘அதிலென்ன சந்தேகம்… அதுதான் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று, தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறார் என்று விளக்கம் சொல்லியிருக் கிறார்களே?’’

‘‘ `அப்படியானால், பல கோடி ரூபாய் செலவழித்து சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது எதற்காக, இவர் அங்கே சென்று யார் யாரைச் சந்திக்கப்போகிறார்?’ என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த ‘முதலீடு’ என்ற வார்த்தைதான் எதிர்க்கட்சியினரைத் தோண்டித்துருவவைத்திருக்கிறது.

அவர் எங்கெங்கே போகிறார், யார் யாரைச் சந்திக்கப்போகிறார் என்பதெல்லாம் அமித் ஷாவிடம் விளக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஒப்புதலில்தான் இந்தப் பயணமே திட்டமிடப்பட்டதாம்.’’

‘‘ஓ… அதற்காகத்தான் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அமித் ஷா சென்னைக்கு வந்தாரா?’’

‘‘ஆமாம்… எடப்பாடி வெளிநாடு போகும்போது, முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி அமித் ஷா முன்னிலையில்தான் பெரிய பஞ்சாயத்தே நடந்திருக்கிறது. நியாயப்படிப் பார்த்தால், துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ் வசம்தான் ஒப்படைக்க வேண்டும். அதைத்தான் அமித் ஷாவும் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவரிடம் ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை எடப்பாடி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம். அதனால், தங்கமணி அல்லது வேலுமணியிடம் ஒப்படைப்பார் என்று ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘அப்படிச் செய்தால் சர்ச்சை கிளம்பாதா… துணை முதல்வரிடம் ஏன் ஒப்படைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பார்களே?’’

‘‘கேட்டால் எதையாவது சொல்லிச் சமாளிப்பார்கள். ஆனால், ஓ.பி.எஸ் வசம் பொறுப்பை ஒப்படைப்பதற்கு வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது. இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். கடந்த பல மாதங்களாக ஓ.பி.எஸ் பரிந்துரைத்த பல கோப்புகளை முதல்வர் அலுவலகத்தில் கிடப்பில் போட்டுவிட்டார்களாம். ஒருவேளை ஓ.பி.எஸ் வசம் பொறுப்பை ஒப்படைத்தால், அந்தக் கோப்புகளின் நிலை அவருக்குத் தெரிந்துவிடும். அதையெல்லாம் அவர் நகர்த்திவிடுவார். மேலும், சி.எம் ஆபீஸ் ரகசியங்களும் கசிவதற்கு ஒரு வாய்ப்பாகிவிடும் என்று எடப்பாடி தரப்பில் பயப்படுவதாகத் தெரிகிறது.’’

‘‘மடியில் நிறைய கனம் இருக்கிறதோ?’’

‘‘யாமறியேன் பராபரமே… ஆனால், முதல்வர் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்காவிட்டால், இதுவரை தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு களில் அது பெரியதாக இருக்கும் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறாராம். ஏற்கெனவே தன்னை டம்மியாக்கி வைத்திருப்பதாக டெல்லி பி.ஜே.பி தலைவர்களிடம் ஓ.பி.எஸ் பலமுறை புலம்பித் தீர்த்துவிட்டார். இப்போது தற்காலிகமாகக்கூட தன்னிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியானால், அவரின் ரியாக்‌ஷன் வேறு மாதிரியாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு!’’

‘‘அதைவிடும்… நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வரப்போகிறதாமே?’’

‘‘ஆமாம்… செப்டம்பர் இறுதிக்குள் தேர்தலை முடித்துவிட மத்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாம். இந்தத் தகவல் தமிழக ஆளும் தரப்புக்கும் தெரிந்துள்ளதால், இரண்டு தொகுதிகளிலும் சத்தமில்லாமல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க தரப்பு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வரலாம். ஆனால், அதற்கு முன்பே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்வு வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.’’

‘‘இடைத்தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளுக்கு அலர்ஜியாயிற்றே… தி.மு.க தயாராக இருக்கிறதா?’’

‘‘வேலூர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக இருக்கிறது தி.மு.க தலைமை. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் மத்தியில்தான் பீதி நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தல், வேலூர் தேர்தல், இப்போது இரண்டு தொகுதி இடைத்தேர்தல் என எல்லாவற்றுக்கும் மாவட்டச் செயலாளர்களையே தலைமை செலவழிக்கச் சொல்வதால், எல்லோரும் திணறுகிறார்கள்.’’

‘‘விக்கிரவாண்டியைக் கைப்பற்ற பொன்முடி தீவிரமாக இருக்கிறார் என்கிறார்களே…’’

‘‘ஆமாம்… விக்கிரவாண்டித் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்களுக்கு, சுற்றுப்பயணம் செல்ல ஆரம்பித்துவிட்டார் பொன்முடி. நாங்குநேரி தொகுதியில் மீண்டும் போட்டியிடு வதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. ஆனால், தி.மு.க-வும் அந்தத் தொகுதியில் நிற்கும் ஐடியாவில் இருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு இந்த விவகாரம் வெடிக்கலாம்.’’

‘‘ஆளுங்கட்சி என்ன செய்யப்போகிறதாம்?’’

‘‘இரண்டையும் ஜெயிக்க வேண்டும் என்பதில் எடப்பாடி படுதீவிரமாக இருக்கிறார். வேட்பாளர்கள் தேர்வில் இந்த முறை தன் கை ஓங்க வேண்டும் என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், வெளிநாடு போகும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தால், என்ன செய்வதென்றுதான் சற்று குழம்பியிருக்கிறாராம்.’’

‘‘தி.மு.க இளைஞரணிக் கூட்டம் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கிறதே!’’

‘‘அதைத்தான் முரசொலியில் முக்கிய அறிவிப்பாகவே வெளியிட்டிருக்கிறார்களே… நட்சத்திர விடுதியில் நடத்தவேண்டும் என்று உதயநிதிக்கு ஐடியா கொடுத்ததே அன்பில் மகேஷ்தானாம். நிர்வாகிகளைக் கவரும் கார்ப்பரேட் உத்தியை கட்சிக்குள் அமல்படுத்தியிருக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டம் என்று சொன்னாலும், பெரிதாக எந்த விவாதமும் இருக்காதாம். பிரமாண்டமான விருந்து உபசரிப்பு நடத்தி, இளம் உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தவே இந்த அறிவிப்பு என்கிறார்கள்.’’

‘‘தயாநிதி மாறன் மீது டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருக்கிறாராமே?”

‘‘காரணமிருக்கிறது. நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து அவர் செய்யாத ஒரு காரியத்தை, சத்தமில்லாமல் தயாநிதி மாறன் செய்திருக்கிறார். ஆகஸ்ட் 13-ம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருள்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மூத்த நிர்வாகிகளை தலைவர் அறைக்குள் அழைத்துள்ளார் தயாநிதி மாறன். அங்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட பிறகு 90 நாள்களில் செய்த மக்கள் பணிகளை விளக்கும், ‘மக்கள் பணியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்’ என்ற புத்தகத்தை ஸ்டாலின் கையில் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார். இப்படியொரு நிகழ்வு நடைபெறுவது டி.ஆர்.பாலுவுக்கே தெரியாதாம். ‘நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்து என்ன செய்ய… ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்களே!’ என்று வெளியே நின்றவர் களிடம் புலம்பியிருக்கிறார். ஏற்கெனவே டெல்லியில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி என தனி ஆவர்த்தனங்கள் அதிகமாகிவிட்ட நிலையில், அறிவாலயத்தி லும் அது எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.’’

‘‘ஓஹோ!’’

‘‘கனிமொழி அறிவாலயம் பக்கம் வருவதேயில்லை. ஆனால், தொகுதிக்கு நன்றி சொல்லப் போன இடத்தில் சில சங்கடங்கள் அவருக்கு நேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு கனிமொழிக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்கிறார்கள். நாயுடு மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைச் சந்தித்து கனிமொழி இன்னும் நன்றி சொல்லவில்லை, அதற்குக் காரணம், கீதா ஜீவன்தான் என்று சிலர் புலம்புகிறார்கள்.’’

‘‘ஆடிட்டர் குரூமூர்த்தி சுறுசுறுப்பாகி விட்டாரே?’’

‘‘ஓ! வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவை வைத்துச் சொல்கிறீரா? டெல்லியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தவே இந்த விழாவை அவர் நடத்தினார் என்கிறார்கள். டெல்லி பி.ஜே.பி-யிடம் அ.தி.மு.க – பி.ஜே.பி – ரஜினி இந்தக் கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்று மீண்டும் ஆலோசனையை வழங்கியிருக் கிறாராம். பத்திரிக்கையில் ரஜினி பெயரே இல்லாமல், மேடையேற்றிப் பேசவைக்கும் அளவுக்கு குரூமூர்த்திக்குச் செல்வாக்கு வந்ததன் பின்னணி, இந்தக் கூட்டணிக் கணக்குதானாம். ஆனால், இப்படித்தான் அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோதும் சிலபல விஷயங்களை டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தில் உறுதியாக பேசினார். அதேபோல் இதுவும் நடக்காமல் போனால் என்ன செய்வது என்கிறார்கள் தமிழக பி.ஜே.பி-யினர்’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்தார்.

தி.மு.க-வுக்கு திருப்பதி லட்டு!

திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு உறுப்பினர்கள் தேர்வுசெய்யும் வேலைகள் ஜரூராக நடக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்திக்கு, பி.ஜே.பி ஆதரவால் பதவி உறுதியாகிவிட்டது என்கிறார்கள். மற்றோர் இடத்துக்கு தி.மு.க தலைமைக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் பெயர் ‘டிக்’காகி இருக்கிறதாம். இந்தப் பெண்ணின் பெயர் எப்படி போர்டின் பட்டியலுக்குள் சென்றது என்று ஆராய்ச்சி செய்துவருகிறது ஒரு டீம்

%d bloggers like this: