சந்திக்கும் உறவுகள்… சங்கடம் தீர்ந்த சசிகலா! – பெங்களூரு சிறையில் நடப்பது என்ன?

ஆக்ஸ்ட் 18 – சசிகலாவின் பிறந்தநாள். ஜெயலலிதா இருந்த காலம்வரை கட்சி நிர்வாகிகளின் அன்புப் பரிசுகளால் பிறந்தநாளைக் கொண்டாடியவர். கடந்த மூன்று ஆண்டுகளாகச்

சிறைக்குள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது பிறந்தநாளை, தண்டனைக் காலத்தின் ஒரு நாளாகவே கழித்து வருகிறார் சசிகலா.

“கண்ணிலிருந்து நீர் வடிவது இன்னும் நிற்கவில்லை; சர்க்கரை நோயின் தாக்கமும் குறையவில்லை” என்று தன்னைச் சந்திக்க வரும் உறவுகளிடம் உருக்கமாகப் பேசியிருக்கிறார் சசிகலா

“சிறைக்குச் சென்றபோது அவரை அனைவருமே சந்திக்க முடிந்தது. ஆனால், தினகரன் தரப்பினருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் சில சொந்தங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லை. இப்போது அவரே, அனைவரையும் அழைத்துப் பேசி வருகிறார். 15 நாள்களுக்கு ஒருமுறை ஐந்து பேராவது பெங்களூரு சிறைக்குச் சென்றுவிடுகிறோம். இளவரசி, சுதாகரன், சசிகலா ஆகிய மூவரின் பெயர்களிலும் மனுக்களைப் போட்டு சந்தித்துவருகிறோம்.

தினகரன் பற்றி அவர் எந்தக் கருத்தையும் சொல்வதில்லை. அவர்மீது வருத்தத்தில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அரசியல் குறித்து தெளிவாகப் பேசுகிறார். `எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க நம் பக்கம் வந்துவிடும்’ என்று நம்புகிறார். ஒருவேளை, `அ.தி.மு.க – பா.ஜ.க – ரஜினி எனக் கூட்டணி அமையும் நிலை வந்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பெரும்பாலான நிர்வாகிகள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். அப்படி ஒரு நிலைதான் எதிர்காலத்தில் வரும்’ எனவும் கணக்குப்போடுகிறார்.

` மோடியுடன் நட்பு பாராட்டினாலும், அரசியல்ரீதியாக அவரை எதிர்த்தே களம் கண்டவர் ஜெயலலிதா. அந்த வழியை நாமும் பின்பற்ற வேண்டும். பன்னீர்செல்வம் அ.தி.மு.க-வில் தொடரமாட்டார் என்பது எனக்குத் தெரியும். நான் வெளியே வந்தால் இப்போது எடப்பாடியின் அமைச்சரவையில் உள்ள பலரும் என்பக்கம் வந்துவிடுவார்கள்’ எனவும் சிலரிடம் பேசியதாகவும் அவர் தகவல் கிடைத்தது.

அதே நேரம், இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட தினகரன் தரப்பினர், `எடப்பாடி விவரமாக அரசியல் செய்கிறார். ஒருபுறம் சசிகலாவுக்குத் தூது அனுப்பிவிட்டு மறுபுறம் பன்னீர்செல்வத்தைக் காலிசெய்யப் பார்க்கிறார். சசிகலா வெளியே வந்தால் அவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவிடுவார். இது தெரியாமல் சசிகலா அவரை நம்புகிறார்’ எனப் பொங்கியுள்ளனர்.

சசிகலா தனக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், தொடர்ந்து அ.ம.மு.க-வைத் தன்னுடைய தலைமையிலே நடத்திச் செல்லும் முடிவிலும் உறுதியாக இருக்கிறார் தினகரன்.

சசிகலாவுக்கு வேண்டிய சட்ட உதவிகளை நடராசன் தம்பி ராமச்சந்திரனின் மகன் மூலமே நடைபெறுகிறது. சசிகலாவைத் தொடர்ந்து சந்திக்கும் நபராகவும் அவர் இருக்கிறார். அவர் மூலமே டெல்லி மேலிடத்தையும் சசிகலா தரப்பு சந்திக்க திட்டமிட்டு வருகிறார்கள். டெல்லி மேலிடத்தின் மூலம் சசிகலாவின் விடுதலையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்” என்கின்றனர் விரிவாக.

%d bloggers like this: