அறிவோம்: லேபிள் ரகசியங்கள்!

உணவுப்பொருள்களில் சைவம், அசைவம் என்பதைக் குறிக்கும் செம்புள்ளி, பசும்புள்ளிக் குறியீடுகள் இருக்கும்.

பொருள்கள் வாங்கினால் பிரித்து டப்பாவில் போடுவதும், பிறகு பயன்படுத்துவதும்தானே நம் வழக்கம். நாம் தினமும் பயன்படுத்தும் எத்தனை பொருள்களின் அட்டைகளிலுள்ள (லேபிள்) குறிப்புகளைக் கவனித்திருப்போம்? இப்படி நாம் அவ்வளவாகக் கவனிக்காத லேபிள்களில் நிறைய ஆச்சர்யங்களும் உண்மைகளும் சின்னஞ்சிறு எழுத்துகளாக ஒளிந்திருக்கின்றன.

ஒரு லேபிளில், பொதுவாகக் கவனிக்கப்படும் விஷயங்கள் என்னென்ன? அந்தப் பொருள் தயாரிக்கப்பட்ட தேதி, எப்போது வரை பயன்படுத்தலாம் ஆகியவை மட்டுமே. அதைத் தாண்டி, சில படங்களும் குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. உண்மையில் அந்தத் தகவல்கள் மிக முக்கியமானவை.

மளிகை வாங்கும்போது, சில பொருள்களில் பச்சைப் பெட்டியில் பச்சைப் புள்ளியும் சிவப்புப் பெட்டியில் சிவப்புப் புள்ளியும் இருப்பதை கவனித்திருக்கலாம்.அவை என்னவென்று தெரியுமா? அந்தப் பொருளின் உள்ளீடுகளைச் சுட்டிக்காட்டுவதுதான் அது. பச்சை நிறம் தாவர உள்ளீடுகளையும் (vegitarian) சிவப்பு நிறம் மாமிச உள்ளீடுகளையும் குறிக்கும் (Non Vegetarian).

 அறிவோம்: லேபிள் ரகசியங்கள்!

Tidyman என்றழைக்கப்படும் குப்பையை குப்பைத் தொட்டியில் போடும் ஒரு மனிதரின் படத்தைப் பல பொருள்களின் பெட்டியில் பார்த்திருக்கிறோம். இதன் பின்னணியில் ஒரு நாடே உள்ளது என்றால் நம்புவீர்களா? சுத்தத்தின் முக்கியத்துவத்தை மக்கள் மனத்தில் பதிப்பதற்காக பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய படம்தான் இது. இன்று உலகெங்கும் தூய்மையை நினைவுபடுத்துகிறது.

மூன்று அம்புக்குறிகளால் ஆன முக்கோணம்… இது பொதுவாக நெகிழிப்பொருள்களில் இருக்கும். இதன்பொருள், மறுசுழற்சி செய்யக் கூடியது என்பதே. சில நேரங்களில், அந்த முக்கோணங்களின் நடுவே எண்கள் இருக்கும். அது அதன் அடர்த்தி வகையைக் குறிக்கும். இதன் அடிப்படையில்தான் பிளாஸ்டிக் பொருள்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த முக்கோணங்களே இலைகளாகக் குறிக்கப்பட்டிருந்தால் அது மக்கும் தன்மையுடையவை. இதையும் தாண்டி ஒரு சில குறிப்பிட்ட பொருள்களுக்கான பிரத்யேகக் குறியீட்டு முறைகள், குறியீடுகள் உண்டு. அவற்றையும் கவனிக்கலாம்.

பால்

பால் கவர் நிறத்தைக்கொண்டு கொழுப்புடன்கூடிய பால் (ஆரஞ்சு), கொழுப்பு குறைக்கப்பட்ட பால் (நீலம்), கொழுப்பு நீக்கப்பட்ட பால் (அடர் சிவப்பு), நிலையான பால் (பச்சை) என்று தெரிந்து கொள்கிறோம்.

அதில் fat ratio, SNF என்று இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அளவீடுகளைக்கொண்டே மேற்சொன்ன பிரிவுகள் ஏற்படுகின்றன. பாலில் உள்ள கொழுப்பின் அளவே FAT அளவு.

அதிகபட்சமாக 6% கொழுப்பு இருக்க வேண்டும். அந்த அளவைக்கொண்டது கொழுப்பு நிறைந்த பால். 4.5 % என்பது சராசரி அளவு. இதைப் பெற்றது நிலையான பால். 3% கொழுப்புடையது கொழுப்பு குறைக்கப்பட்ட பால். அதில் பாதி 1.5% உள்ளது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.

SNF என்றால் solid-no-fat. அதாவது கொழுப்பு அல்லாத மற்ற சத்துகள். இந்த அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும்.

உணவுப் பொருள்கள்

உணவுப்பொருள்களில் சைவம், அசைவம் என்பதைக் குறிக்கும் செம்புள்ளி, பசும்புள்ளிக் குறியீடுகள் இருக்கும்.

வெண்ணெய், பால், ஐஸ்க்ரீம் போன்ற வற்றில் ஒரு குறியீட்டைக் காண முடியும். கார்ட்டூன்களில் பனிக்குப் பயன்படுத்தும் ஸ்னோ பிளேக் (Snow flake) படம்தான் அது. பெரும்பாலும் அமுல் புராடக்ட்டுகளில் இதைக் காண முடியும். குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டும் என்பது இதன் பொருள்.

சில பொருள்களை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடுபடுத்தச்சொல்லி அலைகள் போட்டிருப்பார்கள். குக்கிகள், ஸ்நாக்ஸ்களில் இதைக் காணலாம்.

ஒவ்வொரு உணவுப் பண்டத்திலும் அதில் உள்ளடங்கிய பொருள்கள், அதன் அளவுகளை இறங்கு வரிசையிலேயே எழுதுவது வழக்கம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு உட்கொள்ளலாம், அதன்மூலம் எவ்வளவு சத்துகள் உடலில் சேரும், எவ்வளவு கொழுப்பு உடலில் சேரும் என்பதை அறிந்து கொள்ளலாம். டயட் இருப்பவர்கள் இந்தக் கணக்கின் அடிப்படையில் அந்த பண்டத்தை உட்கொள்ளலாம்.

அழகுசாதனப் பொருள்கள்

தினம் பூசும் ஃபவுண்டஷன், பவுடர், லிப்ஸ்டிக், ஐ-ஷாடோ, ஐ-லைனர், நெய்ல் பாலிஷ், லிப் பாம் என்று அலமாரி முழுக்க அடுக்கியிருக்கும் பொருள்களைத் திருப்பிப் பார்த்ததுண்டா?

திறந்த டப்பா போன்ற ஒரு படமும் அதில் எண்களுடன் m என்ற எழுத்தும் இருக்கும். அது period after opening. சீல் உடைக்கப்பட்ட ஒரு பொருளின் திறன் மாறாமல் இருக்கக்கூடிய கால அளவு அது. m என்பது மாதங் களைக் குறிக்கும்.

அழகுசாதனப் பொருள் களுக்கு அதிகபட்ச வாழ்நாள் 30 மாதங்கள்.

மணல் கடிகாரம் போன்ற படமும் அப்பொருளின் கால அளவையே சுட்டும்.

மஸ்காராவுக்கு மூன்று முதல் நான்கு மாதங்களே அதிகம் என்கின்றனர். லிப்ஸ்டிக், லிக்விட் பவுண்டஷன் ஆகியவற்றை திறந்து ஓர் ஆண்டுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

 அறிவோம்: லேபிள் ரகசியங்கள்!

எல்லா பெர்ஃப்யூம் ஹேர்ஸ்பிரேக்களிலும் flammable என்கிற குறியீடு இருக்கும். அதில் சேர்க்கப்படும் ஆல்க ஹால் எரியக்கூடியது என்பதால் இந்த எச்சரிக்கை.

தாவும் முயலை ஒரு சில லிப்ஸ்டிக் போன்ற பொருள்களின் லேபிளில் காணலாம். எல்லா கண்டுபிடிப்புகளும் முதலில் விலங்குகள் மீதே சோதனை செய்யப்படும். ஆனால், லிப்ஸ்டிக் போன்ற பொருள்களை அதன் மீது சோதனை செய்துபார்க்க முடியாது. இந்தப் பொருள்கள் விலங்குகள்மீது சோதனை செய்யப்படவில்லை என்பதைச் சுட்டுவதே இந்தத் தாவும் முயல்.

கிரீன் டாட் எனப்படும் குறி, அழகுசாதனப் பொருள்களில் சுட்டப்படும் மறுசுழற்சிக் குறி. எண்ணிட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சிக் குறிகளும் இதில் இருக்கும்.

அடிக்கும் வெயிலுக்கு சன் ஸ்க்ரீன் இல்லாமல் வெளியில் முகம் காட்ட முடியாது. அதற்கான லோஷன்களில் SPF என்று சில எண்கள் இருக்கும். SPF என்றால் Sun Protection Factor. இது, சூரியக் கதிர்களை ஊடுருவவிடாமல் இருக்கவைக்கும் அடர்த்தி அளவு. எண்கள் குறைவு (SPF 15) என்றால் குறைந்த பாதுகாப்பு. எண்கள் அதிகம் (SPF 50) என்றால் மிகவும் அடர்த்தியானது. சருமத்தை அதிகம் பாதுகாக்கும் என்று பொருள்.ஃபேர்னெஸ் க்ரீம்களிலும் இது இருக்கும்.

ஷாம்பூ பயன்படுத்தும் போது கண் எரிச்சல், சரும எரிச்சல் எல்லாம் வரும்.

அதைத் தவிர்த்து செய்யப்பட்ட ஷாம்பூகளில் பராபின் ஃப்ரீ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

துணிகள்

துணி வாங்கும்போது அதில் பாக்கெட், அயர்ன் பாக்ஸ் போன்ற படங்கள் இருக்கும்.

சாதாரண துவைத்தல் முறைக்கு ஏற்றது என்பதை பக்கெட் சிம்பல் சொல்லும். ப்ளீச் பயன்படுத்தலாம் என்பதற்கு முக்கோணம்.

வட்டம் போட்டிருந்தால், அந்தத் துணியை டிரை வாஷ் மட்டுமே செய்ய வேண்டும். அயர்ன்பாக்ஸுக்கும் புள்ளிகள் இருக்கும். ஒருபுள்ளி இருந்தால், மிகக்குறைந்த வெப்பத்தில் அயர்ன் செய்ய வேண்டும். புள்ளிகள் கூடக்கூட வெப்பத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

இயந்திரங்கள்

கேட்ஜெட்ஸ் பல வற்றிலும் வரிசையாக அடுக்கிவைத்தாற்போல படங்கள் இருக்கும்.

CE (Conformite Europeenne) என்பதை எலெக்ட்ரானிக் பொருள்களில் காணலாம். இதன் பொருள், ஐரோப்பிய நாட்டின் தரச்சான்றிதழ் பெற்றது என்பதாகும். இன்னொரு பொதுவான குறி, அடிக்கப்பட்ட குப்பைத்தொட்டி. இது, இயந்திரக்கழிவுகளில் சேரும். இதைச் சாதாரண குப்பைத்தொட்டியில் போடக்கூடாது என்பதற்காக.

ஏசி, ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களில் மின் பயன் பாட்டிற்கான ஸ்டார் ரேட்டிங் இருக்கும். ஸ்டார்கள் கூடக்கூட மின் சேமிப்பு அதிகரிக்கும்.

 அறிவோம்: லேபிள் ரகசியங்கள்!

பொம்மைகள்

பொம்மைகளில், இது குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட்டது என்று எச்சரிக்கப்பட்டிருக்கும். அதற்குக் குறைவான வயதினருக்கு அவற்றை கொடுக்கக் கூடாது.

மொத்தத்தில்… லேபிள் என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல… அந்தப் பொருளின் சரித்திரமே அதில் அடங்கி இருக்கிறது. அதை எவ்வாறு கையாள வேண்டும் அதில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதும் அதில் இருக்கிறது. பொருள்களோடு லேபிள்களில் உள்ள ரகசியமான உண்மைகளை யும் இனி மறக்காமல் அறிந்துகொள்வோம்!

%d bloggers like this: