கொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ஆப்பிள் ஜூஸ் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் குடித்து முடித்த அவர், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குப் பயணிக்கிறார். ஏற்கெனவே `மிஸ்டர் கழுகு’ப் பகுதியில் குறிப்பிட்டதுதான். இப்போது விரிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதுதான் இப்போது தலைமைச் செயலகத்தின் ஹாட் டாப்பிக்’’ என்றபடியே கையில் இருந்த குறிப்புகளைப் புரட்ட ஆரம்பித்தார்.

‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின் நோக்கம்தான் என்னவோ?’’

‘‘கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செய்யப்படுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அதன் அடுத்தடுத்த கட்டங்கள், எதிர்பார்த்தபடி முன்னேறவேயில்லை.’’

‘‘அது தெரிந்த கதைதானே!’’

 

‘‘அதனால்தான், மேற்கொண்டு உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கோடு ‘யாதும் ஊரே’ என்று தனியாக ஒரு பிரிவையே உருவாக்கினார். இதற்கென்று இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, முதலீடுகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது, முதலீட்டைச் செய்யவைப்பது என்று பல வகைகளிலும் முதலீட்டாளர்களுக்கு உதவுவதுதான் திட்டம். ஆனால், அப்போதும்கூட எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என்பதால், நேரடியாகவே பறந்துபோய் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பேசுவதற்குத்தான் இந்தப் பயணம்.’’

‘‘பலே… பலே…’’

‘‘ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வரின் பயணத்திட்டம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. உத்தேசப் பயணத்திட்டத்தின்படி ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையிலிருந்து முதல்வர் புறப்படுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்களும் இந்தப் பயணத் திட்டத்தில் இருக்கின்றனர். முதலாவதாக, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் செல்கிறார் முதல்வர். ஆகஸ்ட் 29-ம் தேதி லண்டனில் சுகாதாரத் துறை சார்ந்த பல இடங்களை அதிகாரிகளுடன் பார்வையிடுகிறார். அது சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற் கான முன்னெடுப்பும் நடக்குமாம். பிறகு, எரிசக்தித் துறை உள்ளிட்ட சில துறை சார்ந்த முதலீட்டாளர்கள் சந்திப்பும், லண்டன் தமிழ் முதலீட்டாளர்கள் சந்திப்பும் நடைபெறவுள்ளன.’’

‘‘ஓ…’’

‘‘செப்டம்பர் 1-ம் தேதி லண்டனிலிருந்து அமெரிக்கா செல்லும் முதல்வர், நியூயார்க்கின் மேற்குப் பகுதியில் இருக்கும் பஃபல்லோ நகருக்குப் பயணிக்கிறார். பால்வளத் துறையில் முன்னணியில் இருக்கும் இந்தப் பிரதேசத்தில் கால்நடைத் தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு, நியூயார்க்கில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.’’

‘‘பயணத்தில் வேறு என்ன ஸ்பெஷல்?’’

‘‘முதல்வருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் படை சென்றாலும், முதல்வருடன் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கவோ, தங்கவோ போவதில்லையாம். ‘அமைச்சர்கள், அந்தந்தத் துறை அதிகாரிகளோடு இருந்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது முதல்வருடன் இணைந்துகொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால், முதல்வரின் தனிச்செயலாளர் கிரிராஜன் மட்டுமே இந்தப் பயணம் முழுவதிலும் முதல்வருடன் இருக்கப் போகிறார் என்கிறார்கள்.’’

‘‘அவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?”

‘‘தலைமைச் செயலகத்தில் கிரிராஜனைத்தான் ‘நிழல் முதல்வர்’ என்று வர்ணிக்கிறார்கள். இந்தப் பயணத்திலும் அவருடைய பெயரே பெரிதாக உச்சரிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டுமுதலே அவருடைய தனிச்செயலளாராக இருப்பவர்தான் கிரிராஜன். அதற்கு முன்பு அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் உதவியாளராக இருந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் என்று அனைத்தையும் முடிவுசெய்வது முதலமைச்சர் அலுவலகம்தான். அதனால், உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது, பிற துறை அமைச்சர்களும்கூட கிரிராஜனிடம் பரமபவ்யம் காட்டுவது கட்டாயமாகவே இருக்கிறது!”

‘‘கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்குச் சென்ற இருவர் பற்றியும் செய்திகள் கசிகின்றனவே?’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன், மிதுன். இவர், கடந்த வாரம் சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்ற தகவல், உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. கொல்கத்தா சென்ற மிதுன், அங்கு உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அங்கு மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதுதான் இப்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.’’

‘‘யார் அந்தத் தொழிலதிபர்?’’

‘‘அவரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்தான். பெயர் பிரபாகரன். `திருவேணி எர்த்மூவர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்கிற கனிமவள சாம்ராஜ்யத்தை ஒடிசாவில் நடத்திவருபவர். தமிழக முதல்வருக்கு நெருக்க மான இந்தத் தொழிலதிபர், தற்போது காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். ஒடிசாவின் நவீன் பட்நாயக் அரசுக்கு நெருக்கமானவரும்கூட. ஒருகட்டத்தில் பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவைக்கூட நெருங்கியுள்ளார். இவருடன்தான் முதல்வர் மகன் சந்திப்பு நடத்தியுள்ளார் என்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘திருவேணி குழுமத்தின் சார்பில், விரைவில் சேலம் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கனிமத்தைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் முதல்வரின் குடும்பத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள். இத்தகைய சூழலில்தான், முதல்வர் மகனும் `திருவேணி’ பிரபாகரனும் ஆகஸ்ட்-18 அன்று கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணப்பட்டுவிட்டனர். கேட்டால் இருவருக்கும் நல்ல நட்பு என்கிறார்கள்!’’

‘‘அப்பா, அரசு முறைப் பயணம். மகன், நட்பு முறைப் பயணமா?’’

‘‘நீர் இரண்டு பயணங்களையும் முடிச்சுப்போட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இன்னும் சில மாதங்களில் சேலத்தில் தொழிற்சாலை தொடக்கப் போகிறார் பிரபாகரன். முதல்வரோ, தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்க லண்டன் செல்கிறார்.’’

‘‘சரி, முதல்வர் எப்போது தமிழகம் திரும்புகிறார்?’’

‘‘செப்டம்பர் 9-ம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர். அதன் பிறகு, கட்சியிலும் ஆட்சியிலும் சில நடவடிக் கைகள் இருக்கப் போகின்றனவாம். குறிப்பாக, நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முடிவுக்கு தமிழக அரசு வந்துவிட்டது. இனியும், அந்த விவகாரத்தைத் தள்ளிப் போட முடியாது. அதேபோல், கட்சியில் காலியாக உள்ள பதவிகள் குறித்த பட்டியலை மாவட்டவாரியாக கட்சித் தலைமை கேட்டுள்ளது. அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் இருக்கலாம்.’’

‘‘அதுசரி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் லண்டனுக்கும் அப்படி என்ன உறவோ… எப்போது பார்த்தாலும் லண்டனுக்கே பறக்கிறார்களே?’’

‘‘அவர்கள் எதற்காகப் பறந்தார்கள்… பறக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், கறுப்பை வெள்ளையாக மாற்றும் நகரங்களில் லண்டன் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து நடக்கும் பெருமளவிலான மாற்றங்கள், லண்டன் வழியாகவேதான் நடக்கின்றன.’’

‘‘காங்கிரஸ் கட்சித் தலைவர்மீது சி.பி.ஐ விசாரணை என்கிறார்களே?’’

‘‘கே.எஸ்.அழகிரி, தன் சொந்த ஊரில் கப்பல் தொழில்நுட்பம் தொடர்பான கல்லூரி நடத்தி வருகிறார். அந்தக் கல்லூரியில் 720 மாணவர்களிடம் மோசடியாக 42 கோடி ரூபாய் பணம் வசூலித்துள்ளதாக அகில இந்திய கப்பல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. இதில் அழகிரி குடும்பம் சி.பி.ஐ விசாரணைக்குள் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.’’

‘‘ம்!’’

‘‘இந்த விவகாரத்தின்பின்னணியில் ஜி.கே.வாசன் இருப்பார் என்று நினைக்கிறாராம் அழகிரி. வாசன் கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய அதிகாரிதான், இப்போது இந்த இயக்குநர் அலுவலகத்தில் தலைவராக இருக்கிறார். தன்னை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து வாசன் காய் நகர்த்திவிட்டார் என்று புலம்புகிறாராம் அழகிரி.’’

‘‘வைகோ, மத்திய அரசுக்கு எதிராக தனது போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டாரே!’’

‘‘தேனி நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மூன்று நாள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார் வைகோ. ஆனால், உடல்நிலையைக் காரணம்காட்டி கடைசி நேரத்தில் போராட்டத்தை ரத்துசெய்துவிட்டார் . உடல்நிலை ஒருபுறம் என்றாலும், டெல்லியிலிருந்து வந்த சில சமிக்ஞைகள் வைகோவை யோசிக்கவைத்து விட்டன என்று அவருக்கு நெருக்கமானவர்களே சொல்கிறார்கள்’’ என்று புறப்படத் தயாரான கழுகார், ‘‘காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ம் தேதி தி.மு.க கூட்டணி எம்.பி-க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவிருக்கின்றனர்’ என்ற தகவலைச் சொல்லிவிட்டுப் பறந்தார்.

 

%d bloggers like this: