சிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்!’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்

எம்.பி-க்கள் கூட்டத்தை நடத்தினால் சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் போட வேண்டியது வரும் என்பதால்தான் கூட்டத்தை 29-ம் தேதிக்குத் தள்ளிவைக்குமாறு கூறிவிட்டார் ஸ்டாலின்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மீதான கைது நடவடிக்கைக்குப் பிறகு அறிவாலயத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. `தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிதம்பரத்துக்கு ஆதரவாக யாரும் பேசச் செல்ல வேண்டாம் எனவும் தலைமை கூறிவிட்டது. தி.மு.க எம்.பி-க்கள் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.
 

சென்னையில் தி.மு.க எம்.பி-க்கள் கூட்டம் நாளை(24/08/2019) நடைபெறுவதாக இருந்தது. `இந்தக் கூட்டம் வரும் 29-ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறும்’ என நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். “எம்.பி-க்கள் கூட்டத்தை நடத்தினால் சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் போட வேண்டியது வரும் என்பதால்தால் கூட்டத்தை 29-ம் தேதிக்குத் தள்ளிவைக்குமாறு கூறிவிட்டார் ஸ்டாலின்.

சிதம்பரத்தைக் கைது செய்ததற்காக தி.மு.க தரப்பிலிருந்து உடனடியாக கண்டன அறிக்கை வெளிவரவில்லை. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் கராத்தே தியாகராஜன், இதுதொடர்பாகப் பேட்டி அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதன்பின்னர், 12 மணி நேரங்களுக்குப் பிறகே கண்டனம் தெரிவித்தார் ஸ்டாலின். காரணம், சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையை பெரும்பாலான தி.மு.க நிர்வாகிகள் மனதளவில் வரவேற்பதுதான். இந்த உற்சாகத்தைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்” என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,

“ சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையை வரவேற்கும் அதேசமயம், தி.மு.க-வில் உள்ள சில முக்கியமான எம்.பி-க்களையும் அடுத்ததாக கை வைத்துவிடுவார்களோ என்ற அச்சமும் நீடித்து வருகிறது. மத்திய அரசு செல்லும் வேகத்தைப் பார்த்தால் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாகக் கருதுகிறோம். சிவகங்கையில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ் வழக்கு நெருக்கிக் கொண்டிருக்கிறது. 2ஜி வழக்கின் மூலம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது எனத் திட்டம் வகுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் வெற்றி பெற்ற கௌதம சிகாமணி மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளைத் துரிதப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலின்போதே, `கௌதம சிகாமணி வெற்றி பெற்றாலும் சிறைக்குப் போய்விடுவார்’ என எதிர்முகாம் வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். மத்திய அரசின் நோக்கத்தைப் பார்த்தால், தி.மு.க கூட்டணியில் 5 விக்கெட்டுகளை எடுக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

 

அதனால்தான் சிதம்பரம் விவகாரத்தில் பெரிதாக எந்தக் கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்தார் ஸ்டாலின். பழைய பகை ஒரு காரணமாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் நாம் அமைதியாக இருப்போம் என்றுதான் நினைத்தார். தொடர்ச்சியான விமர்சனங்களால்தான் அவர் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, `தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைத்தாலும் யாரும் செல்ல வேண்டாம், விவாதத்தில் கைது தொடர்பாக நாம் எதாவது கருத்தைக் கூறி மாட்டிக் கொள்ள வேண்டாம்’ எனவும் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார் ஸ்டாலின்.

எம்.பி-க்கள் கூட்டம் ஒத்திவைப்பு, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை என ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டு வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள், `தி.மு.க ஊழல் கட்சி’ என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் காட்டுவதற்கு மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்ற அச்சமும் வாட்டி வருகிறது. `சிதம்பரத்தோடு இந்தக் கைது நின்று விடப் போவதில்லை. அடுத்ததாக நம்மிடம்தான் வருவார்கள்’ எனவும் அறிவாலயத்தில் விவாதம் நடந்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது தி.மு.க தலைமை” என்கின்றனர் விரிவாக.

`அடுத்த இலக்கு யாராக இருக்கும்?’ என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம். “ சிதம்பரம் மீதான கைது நடவடிக்கை என்பது, மத்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டின்பேரில் நடக்கவில்லை. அவர் மீதான வழக்கு என்பது இன்று நேற்றைய விவகாரம் அல்ல. வருடக்கணக்காக நடந்து வரும் வழக்கு அது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். யார் யாரெல்லாம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டார்களோ, யார் மீதான வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருக்கிறதோ அவையெல்லாம் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் முழு சுதந்திரத்துடன் கையாளும் வகையில் அந்தந்த துறைகள் பங்காற்ற இருக்கின்றன. இதில் யார் உள்ளே போவார்கள், யார் வெளியில் இருப்பார்கள் என்றெல்லாம் கணிப்பது எங்களுடைய வேலை அல்ல. யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.

 

தவறு செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபித்துவிட்டு வெளியில் வரட்டும். நீதித்துறையைப் பொறுத்தவரையில் கீழமை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எனப் பல அமைப்புகள் உள்ளன. எனவே, உச்ச நீதிமன்றம் வரையில் சென்று தவறு செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கு அந்தந்த துறைகள் பாடுபடும்” என்றவர், “இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்தும் வேகமாகச் செயல்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. பாகுபாடு இல்லாமல் அனைவரும் ரெய்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். யாருக்கும் எந்தவித தயவு தாட்சண்யமும் காட்டப் போவது கிடையாது” என்றார் உறுதியாக.
%d bloggers like this: