பாதுகாப்போம்…பரிசளிப்போம்!

கண் தானம் குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல்  செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவாரமாக (National Eye Donation Fortnight)  இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கண் தானம் மூலம் பிறருக்கு கண்களை பரிசளிப்பது, கண்களை பரிசளிப்பதற்கான உறுதிமொழி ஏற்க பொதுமக்களை  ஊக்கப்படுத்துவது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் இரண்டு வார காலம்  அனுசரிக்கப்படுகிறது என்ற கண் மருத்துவர்  ப்ரீத்தியிடம் கண் பார்வையிழப்பு, கண்தானம் செய்தல் மற்றும் அதன் அவசியம் பற்றி விளக்கமாகக் கேட்டோம்…

கண் பார்வை இழப்புக்கான காரணங்கள்

வளர்ந்து வரும் நாடுகளில் பார்வையிழப்பு என்பது ஒரு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. உலக சுகாதார  அமைப்பின் புள்ளிவிவரப்படி, கண்புரை,  கண்ணழுத்த நோய்களுக்கு அடுத்தபடியாக, கண்ணின் முன்பகுதித் திசுக்கள்  சேதமடைவதால் ஏற்படும் கருவிழிப்படல நோய்களே (Corneal Blindness)  கண் பார்வையிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த கார்னியல் ப்ளைன்ட்னெஸ் பிரச்னையானது குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு, தொற்றுகள்,  பிறப்புக்  குறைபாடு மற்றும் பல்வேறு காரணங்களால் கண்ணில் ஏற்படும் காயங்களாலும் ஏற்படுகிறது. இது பெரியவர்களுக்கு  தொற்றுகள், காயங்கள் மற்றும்  கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் பார்வையிழப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது. மேலும் கண்தானம் செய்ய முன் வராததற்கு மக்களிடையே  நிலவிவரும் கட்டுக் கதைகள் மற்றும் போதிய விழிப்புணர்வின்மையும் முக்கிய காரணங்களாக இருக்கிறது.

கண் பார்வை இழப்பின் தற்போதைய நிலை

இந்தியாவில் வரும் 2020 ஆம் ஆண்டில் யுனிலேட்டரல் கார்னியல் பிளைன்ட்னெஸ் பிரச்னை உள்ளவர்களின்  எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சம் என்ற  அளவுக்கு அதிகரிக்கும். அவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆண்டிற்கு 2 லட்சம்  கார்னியாக்கள் தேவை. ஆனால், நமக்கு தற்போது 45 ஆயிரம் மட்டுமே தானமாகக்  கிடைக்கிறது. இப்படி பெறப்பட்டுள்ள அந்த குறைந்த அளவிலும் 46 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய நிலையிலும், மீதமுள்ளவை தரமற்றவையாகவும்  உள்ளன என்பது வருத்தத்திற்குரியது.

நம் நாட்டில் கண்பார்வை குறைபாடுடைய 95 சதவிகிதம் பேர் எளிதில்  குணப்படுத்தக்கூடியவர்களே. கண் திசுக்களை தானம் பெறுவது, அதை சரியான  முறையில் செயல்படுத்துவது மற்றும்  நவீன வசதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியும். தேசிய பார்வையிழப்புக்  கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கணக்குப்படி உலக பார்வையற்றவர்களில் 20% பேர் நம் நாட்டில் உள்ளனர். மேலும் கருவிழிப் படல நோய்களால் பாதிக்கப்படுவோர்  பட்டியலில் ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் புதிதாக சேர்கின்றனர் என்று அதில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கு கண்தானம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது ஒன்றே தீர்வு. ஆகஸ்ட் 25ல் தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை  சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே கண் மருத்துவர்கள் பொது மக்களிடம் வைக்கும் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இந்த நாட்களில்  கண்தானம் குறித்த சரியான புரிதலை கிராமம், நகரம் என்று அனைத்துப் பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அரசுக்கும், மருத்துவர்களுக்கும்  உள்ளது.

கண் தானம்

ஒரு நபர் தான் இறந்த பிறகு தன்னிடம் ஆரோக்கியமாக இருக்கும் பல்வேறு உறுப்புகளை தானமாக வழங்க முடியும். அந்த உறுப்புகள் தேவைப்படும்  இன்னொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகின்றன. இதுபோன்று தானமாக வழங்கப்படும் உறுப்புகளில் ஒன்றுதான் கண். உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சைகளில் 95 சதவிகிதம் வெற்றிகரமாக நடைபெறுவது இதுபோன்ற கண் அறுவை சிகிச்சைகளே. ஒரு நபர் உயிருடன் இருக்கையில் தன் கண்களை தானம்  செய்வது சட்டப்படி இயலாத ஒன்று. எனவே ஒருவருடைய மரணத்திற்குப் பின் கண்களை தானமாக வழங்குவதே கண் தானம் என்று  அழைக்கப்படுகிறது.

6 மணி நேரத்திற்குள் கண்தானம்

உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் யாராவது திடீரென இறந்துவிடும்போது, அவருடைய கண்களை தானம் செய்ய விரும்பினால், அதிகபட்சம்  இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை உடலிலிருந்து எடுத்தாக வேண்டும். எடுத்த கண்களை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பாக  வைத்திருக்க வேண்டும். இப்படி பெறப்பட்ட ஆரோக்கியமாக உள்ள கண்களையே மற்றவர்களுக்கு பொருத்த முடியும். அதிக நேரமானால் அந்த கண்களை மற்றவர்களுக்கு பொருத்த முடியாது.

இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களின்போது, உறவினர்களின் ஒப்புதலோடு இறந்தவரின் கண்களை தானம் பெறும் முயற்சியை  மருத்துவமனைகள் மேற்கொள்ளலாம். நம் நாட்டில் விபத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் இறக்கின்றனர். விபத்துகள் காவல்துறை வழக்குகள்  சம்பந்தப்பட்டவை என்பதால் பல்வேறு நடைமுறைகள் முடிந்து 6 மணி நேரத்திற்குள் கண்களைத் தானம் பெற முடியாத நிலை உள்ளது. இப்படி இறப்பவர்களின்  கண்களை 6 மணி நேரத்திற்குள் தானம் பெறும் வகையில் உரிய மாற்றங்களை அரசு மேற்கொண்டால் கண்தான பற்றாக்குறையைக் குறைக்க அது பெரும்  உதவியாக இருக்கும்.

கண் தானம் செய்யும் வழி

கண் தானம் செய்வதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. முதலில் கண்தானம் செய்வதாக, ஒரு கண் வங்கி அல்லது கண் மருத்துவமனையில் நாம் பதிவு  செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்த நபர் இறந்த பிறகு உடனடியாக அந்த கண் வங்கி அல்லது மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு நபர்  இறந்த பிறகு மட்டுமே கண்தானம் செய்ய முடியும். அந்த நபர் உயிருடன் இருக்கும்போதே, அதற்கான உறுதிமொழி படிவத்தை அருகிலுள்ள கண் வங்கியில்  கொடுத்து வைக்கலாம்.

மேலும் இந்த தகவலை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து, கண்வங்கியின் தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்து  வைத்திருந்தால் இறந்த பிறகு கண்தானம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். கண்தானம் செய்வதற்கு ஏற்கெனவே உறுதிமொழி கொடுக்காவிட்டாலும், இறந்த  நபரின் உறவினர்கள் விரும்பினால் கண்வங்கியை தொலைபேசியின் மூலம் உடனடியாக அணுகி அதற்கான விதிமுறைகளின்படி கண்தானம் செய்யலாம்.

கண்கொடையாளர் ஆவது எப்படி?

இரு சாட்சிகளின் முன்னிலையில், நெருங்கிய உறவினரின் எழுத்துப் பூர்வமான ஒப்புதலுடனேயே கண் தானம் செய்ய முடியும். பதிவு பெற்ற கண்கொடையாளர்  ஆவதற்கு அருகிலுள்ள கண் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண் தானம் செய்வதற்குரிய உறுதிமொழிப் படிவத்தை நிறைவு செய்து அந்த கண்  வங்கியிடம் கொடுக்க வேண்டும். கண் கொடையாளராகப் பதிவு பெற்றவுடன் உங்களுக்கு ஒரு கண்கொடையாளர் அட்டை வழங்கப்படும்.

அருகிலுள்ள கண் வங்கியை அணுக நாடு முழுவதற்குமான தொலைபேசி உதவி எண்ணான 1919 இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கண்  தான உறுதிமொழியை எந்த வயதிலும் அளிக்கலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல் எவ்வளவு வயதானவராக இருந்தாலும் கண்தானம் செய்யலாம். தானம்  அளிப்பவர் மற்றும் பெறுபவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். தானம் அளிக்கப்பட்டக் கண்களை வாங்கவோ விற்கவோ முடியாது என்பதை நினைவில்  கொள்ள வேண்டும்.

கண்கொடையாளர் இறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

கண்கொடையாளர் இறந்தவுடன் கண் வங்கிக்கு தகவல் கொடுத்த பின்னர், அந்த குழுவினர் வந்து அவரது உடலிலிருந்து கண்களை எடுக்கும் வரை அவற்றைப்  பாதுகாப்பது மிகவும் அவசியம். கண் இமைகளை முதலில் மூடி வைக்க வேண்டும். அவரை வைத்திருக்கும் அறையிலுள்ள மின் விசிறியை நிறுத்த வேண்டும்.  அதற்கு பதிலாக குளிர்பதன சாதனத்தைப் பயன்படுத்தலாம். இறந்தவரின் தலையை ஒரு தலையணையில் வைத்துச் சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.  அருகிலிருக்கும் கண் வங்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே போதும். கண்வங்கிக் குழுவினர் கண் கொடையாளரின் வீட்டுக்கு அல்லது மரணம்  நடைபெற்ற மருத்துவமனைக்கு சென்று, அவருடைய கருவிழிப்படலத்தினை எடுத்துக் கொள்வார்கள்.

நவீன கண் சிகிச்சைமுறை

ஒருவருடைய கண்ணிலுள்ள சேதமடைந்த கார்னியாவை நீக்கி, அந்த இடத்தில் தானம் பெறப்பட்ட நல்ல கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதே  வழக்கத்திலுள்ள சிகிச்சை முறை. ஆனால், தற்போது PDEK (Pre Descemet’s Endothelial Keratoplasty) என்கிற நவீன சிகிச்சை முறை  மூலமாக, தானம் பெறப்பட்ட ஒரு ஜோடி (இரண்டு) கார்னியாக்களைப் பயன்படுத்தி நான்கு நபர்களுக்கு கண் பார்வை கொடுக்க முடியும். இம்முறையில்  திசுக்களை எளிமையாக கையாள முடிவதோடு திசு இழப்பும் குறைகிறது. மேலும் இதில் இன்ட்ரா-ஆபரேட்டிவ் திசு காயம் குறைவாகவே ஏற்படுகிறது.

இந்த நவீன சிகிச்சை முறை மூலமாக எந்த வயதிலிருக்கும் நபரும் தங்களின் கார்னியாக்களை தானம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின்  உடலிலிருந்து கண்களை அகற்ற 15 முதல் 20 நிமிடங்களே தேவைப்படும். இறந்தவர்களின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்துவதில்லை. ஒரு  நபரின் ஒரு கருவிழிப்படலத்தில் முன்னே 3, பின்னே 3 என்று மொத்தம் 6 அடுக்குகள் இருக்கும். இந்த 6 அடுக்குகளைப் பிரித்தெடுத்து, அதில் தேவையான  பகுதிகள் மட்டுமே கண்பார்வை பிரச்னை உள்ள நபர்களுக்கு பொருத்தப்படுகிறது. இந்த நவீன முறையில் ஒரு நபரிடமிருந்து தானமாகப் பெறும் ஆரோக்கியமான  2 கண்கள் மூலமாக 4 நபர்களுக்கு கண்பார்வையைக் கொடுக்க முடியும்.

கண் தானத்தால் முகம் சிதைவடையுமா?

கண் தானத்தால் முகம் சிதைவடையும் என்பது ஒரு கட்டுக்கதையே. கருவிழிப்படலத்தை அகற்றுவதால் எந்தச் சிதைவும் ஏற்படாது. கண்கோளம் அகற்றப்பட்ட  பின் ஒரு ஒளிபுகும் கண் மூடி அதற்குப் பதிலாக வைக்கப்படுவதால் முகத்தில் எந்த உருக்குலைவும் ஏற்படாது. தேவைப்பட்டால் செயற்கைக் கண்களைகூட  பொருத்திக்கொள்ளலாம்.

கண்தானத்திற்கு கட்டணம் உண்டா?

கண் மாற்று சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை கண் வங்கி ஏற்றுக்கொள்வதால் தானம் அளிப்பவர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மனித  கண்கள், உடல் உறுப்புகள் அல்லது திசுக்களை விலை கொடுத்து வாங்குவதோ விற்பதோ சட்டப்படி குற்றம் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வது  அவசியம்.

கண்தானம் செய்வதற்கான நிபந்தனைகள்

கண் தானம் என்கிற உன்னதமான செயலை வயது, பாலினம், ரத்த வகை அல்லது மத வேறுபாடுகளைக் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். கிட்ட  அல்லது தூரப் பார்வைகளுக்காக கண்ணாடி அல்லது ஒட்டுவில்லை (Contact lens) அணிபவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்து  கொண்டவர்களும்கூட கண் தானம் செய்யலாம். நீரிழிவு நோயாளி அல்லது, ரத்த அழுத்தம், ஆஸ்துமா நோயாளிகளும் கண் தானம் செய்யலாம்.

கண்புரை உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம். ஆனால் தொற்று நோயுள்ளவர்கள் கண்தானம் செய்ய இயலாது. எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி, ஹெப்படைட்டிஸ்  பி & சி, வெறிநாய்க்கடி, பாம்புக்கடி, நரம்பியல் பிரச்னைகள், மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒரு நபர் இறந்ததற்கான  சரியான காரணம் அறிய முடியாத நிலையில் இருப்பவர்களும் கண் தானம் செய்ய முடியாது.

கண்தான விழிப்புணர்வு அவசியம்

கண்தானத்தில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு உறவினர்கள் சம்மதம் இல்லாமலேயே கண்கள் தானம் பெறப்படுகிறது. அங்கு தற்போது  ஆண்டுக்கு 60 ஆயிரம் கண்கள் பெறப்படுகின்றன. அவர்களுக்கு 45 ஆயிரம் போக மீதி கண்களை இதர நாடுகளுக்கு வழங்குகின்றனர். சரியான முறையில்  இன்னும் கூடுதல் விழிப்புணர்வினை ஏற்படுத்தினால், இந்த நிலையை இந்தியாவிலும் உருவாக்க முடியும். இதற்கு அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும்  பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடலை மண்ணில் புதைத்து, அதனால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்படும்போதோ எவ்வித பலனுமின்றி  போகக்கூடிய அந்த நபரின் ஆரோக்கியமான இரு கண்களை தானமாக கொடுப்பதால், வாழும் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்ற முடியும். கண் தானம் என்பது  நம்மைப் போன்ற சகமனிதர்களுக்கு நாம் வழங்கக்கூடிய விலைமதிக்க முடியாத பரிசு. நமது கண்களை தானம் வழங்கி பார்வையிழப்புகளை தடுக்க நாம்  ஒவ்வொருவரும் இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோம்.

கண் பார்வையைப் பாதுகாக்க சில டிப்ஸ்

எழுதுவது, படிப்பது போன்ற பணிகளின்போது அதற்கு தேவையான அளவு வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கணினியில் வேலை  செய்யும்போது அல்லது தொலைக்காட்சி பார்க்கும் நேரங்களில் அடிக்கடி கண்களை மூடி திறக்க வேண்டும். அதாவது கண்களை சிமிட்ட வேண்டும். மேலும்  அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவுவது நல்லது. கண்களில் தூசு ஏதாவது விழுந்தால் கைகளால் அழுத்தக்கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம்  செய்வது நல்லது. அதிக தூசுகள் உள்ள சாலைகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்யும்போது கண்களில் கண்ணாடி அணிந்து  கொள்வது நல்லது.

40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண் பரிசோதனை செய்ய வேண்டும்.  நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். கண்பார்வை பிரச்னைகளால் 12 வயதிற்கு  உட்பட்டவர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். எனவே, 5 வயதாகும் போதே குழந்தைகளின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு  ஏற்படும் இதுபோன்ற கண் பார்வை பிரச்னைகளுக்கு சரியான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம். எனவே அவர்களது உணவில் பால், முட்டை, கீரை மற்றும்  பழங்கள் போன்றவை தேவையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

%d bloggers like this: