சர்வதேச கவனம் பெற்ற தி.மு.க… கடுகடுப்பில் அமித் ஷா! – அடுத்த குறி யாருக்கு?

கழுகார் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, ப.சிதம்பரம் கைதுகுறித்த கவர் ஸ்டோரி சுடச்சுடத் தயாராகிக்கொண்டிருந்தது. கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்த கழுகார், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில விஷயங்களையும் சொல்லிவிடுகிறேன்’’ என்றபடி தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.

‘‘சிதம்பரத்தை இவ்வளவு அவசரமாக இரவோடு இரவாகக் கைதுசெய்ய வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை என்பது, பெரும்பாலானோரின் கருத்து. அப்படி நடந்ததற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். அவரின் கைது நடவடிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய பிசினஸ் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதை மோப்பம் பிடித்த சுப்பிரமணியன் சுவாமி, கைது நடவடிக்கையிலிருந்து சி.பி.ஐ பின்வாங்கிவிடுமோ எனப் பதறிப்போய், ஆர்.எஸ்.எஸ் மூலமாக நெருக்கடி கொடுத்திருக்கிறார். அங்கிருந்து வந்த பிரஷரில்தான் சுவர் ஏறிக் குதித்துக் கைதுசெய்யும் அளவுக்கு சி.பி.ஐ சென்றுள்ளது என்கிறார்கள்.’’

‘‘சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்கு தமிழகத்தில் அதிர்வு ஏதுமில்லையே?’’

‘‘அதிலொன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால், சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட மறுநாள், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. தந்தை கைதாகி இருந்த நிலையிலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டதில் தி.மு.க-வினருக்குத்தான் ஆச்சர்யம். கருணாநிதி இருந்தபோதே, சிதம்பரத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஒத்துப்போகாத நிலையிருந்தது. ஸ்டாலின் தலைவரான பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி கலந்துகொண்டது ஸ்டாலினையே ஆச்சர்யப்படவைத்தது என்கின்றனர்.’’

‘‘ஓஹோ!’’

‘‘டெல்லியில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்திய அதே நாளில்தான் சிதம்பரம் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் ஈ.வி.கே.எஸ்., சுதர்சன நாச்சியப்பன், கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று சிதம்பரம் கோஷ்டி சீறிக்கொண்டிருக்கிறது.’’

‘‘காங்கிரஸில் இதெல்லாம் சகஜம்தானே!’’

‘‘சிதம்பரம் கைதை ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடிய தகவலெல்லாம், சிதம்பரம் தரப்புக்குச் சென்றுள்ளது. இதனால் சிதம்பரம் குடும்பத்தினர் ரொம்பவே நொந்துபோயிருக்கின்றனர். அமித் ஷாவின் பழைய பகைதான் இதற்குக் காரணம் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாருமே வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதிலும் அவர்களுக்கு வருத்தமாம்.’’

‘‘ஸ்டாலின் பேட்டியிலேயே பெரிதாகக் காரமில்லையே?’’

‘‘ஆமாம். பெயரளவுக்கே எதிர்ப்பைப் பதிவுசெய்தார் ஸ்டாலின். தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் கோபத்தைவிட அச்சமே பெரிதாக இருக்கிறது. காஷ்மீருக்காக டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்காததற்கும் அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.’’

‘‘பயப்படுபவர்கள் எதற்காக ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கிறார்கள்?’’

‘‘இந்த ஆர்ப்பாட்டம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனே, அந்தத் தகவல் பாகிஸ்தான் வரை பரவிவிட்டது. ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாகியுள்ள தி.மு.க., காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த மோடி அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறது’ என்று பாகிஸ்தான் ரேடியோ அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. அதற்குப் பிறகு பாகிஸ்தானுடன் தி.மு.க-வை இணைத்து பி.ஜே.பி-காரர்கள் கருத்தைப் பதிவிடத் தொடங்கினார்கள்.’’

டெல்லியில் நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டம்

‘‘அதற்கு தி.மு.க-வினரும் பதிலடி கொடுத்தார்களே?’’

‘‘கொடுத்தார்கள். ஆனால், இந்த விவகாரம் இத்துடன் முடிவதாகத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தால் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தி.மு.க கவனம் பெற்றிருக் கிறது. அதனால் பி.ஜே.பி தலைமை டென்ஷன் ஆகியிருக்கிறது. அமித் ஷாவின் அடுத்த அஸ்திரம் தி.மு.க-வின் மீதுதான் பாயும் என்றார்கள். அநேகமாக ஆ.ராசாவின் சொத்துக் குவிப்பு வழக்கைத் தோண்டும் வாய்ப்பிருக்கிறது. 2ஜி வழக்கில் சாட்சியாக இருந்த பலரையும் இதுதொடர்பாக விசாரித்துக்கொண்டிருப்பதாகத் தகவல்.’’

‘‘எடப்பாடி, டூருக்குத் தயாராகிவிட்டாரா?’’

‘‘அவர் தயார்தான். அவருடன் போகும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள். அவர் கிளம்பிப் போன பிறகு இரு வாரங்களில் இங்கே என்னென்ன நடக்கிறதென்று தெரிய வேண்டும் என்பதற்காக சில அதிகாரிகளிடம் முக்கியமான பொறுப்பை அவர் ஒப்படைக்கப்போகிறாராம். அதன் அடிப்படையில்தான் இந்த மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அதைத் தவிர, திடீரென அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரை இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்க்க முயன்று, அதற்கு அங்கிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள்.’’

‘‘அப்படியானால் அதிகாரிகளைத்தான் அதிகமாக நம்புகிறாரா எடப்பாடி?’’

‘‘அப்படித்தான் குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். தலைமைச் செயலாளர் சண்முகம், நிரஞ்சன் மார்டி, சாய்குமார் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு தலைமைச் செயலக அதிகாரிகள் என ஐவர் பிடியில்தான் முதல்வர் இருக்கிறார் என்று பல தரப்பிலும் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. மாவட்டங்கள் பிரிப்பு, சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் போன்ற விஷயங்களை அமைச்சரவையைக் கூட்டித்தான் முடிவு எடுப்பார்கள். ஆனால், இவையெல்லாமே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சொல்லி, அவராகவே முடிவெடுத்த அறிவிப்பாக வெளியிட்டுவிடுகிறார் என்று கொந்தளிக்கிறார்கள் சில அமைச்சர்கள்.’’

“ஓஹோ!”

‘‘அமைச்சர்கள் பலரும் சமீபகாலமாக கடுமையான மன உளைச்சலில்தான் இருக்கிறார்கள். ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பதற்குத்தான் யாருக்கும் துணிச்சல் இல்லை. மணிகண்டனின் பதவியைப் பறித்த பிறகும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பாததால் கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி வலுவாகக் காலூன்றிவிட்டதாக நினைத்து அமைதியாக இருக்கிறார்கள் பலர். எடப்பாடி டூர் கிளம்பிப் போன பிறகு அதிருப்தியாளர்கள் தரப்பில் கூடிப் பேச திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவியிருக்கிறது.’’

‘‘கூடிப்பேசினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லையே!’’

‘‘அதே நம்பிக்கையில்தான் எடப்பாடியும் டூர் கிளம்பப்போகிறார். இதற்கிடையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் பற்றியும் அவருக்குக் கவலை எழுந்திருக்கிறது. இரண்டு தொகுதிகளையும் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதற்கான வேலைகளையும் சீனியர் அமைச்சர்கள் சிலரிடம் ஒப்படைத்திருக்கிறார்.’’

‘‘தி.மு.க என்ன செய்யப்போகிறதாம்… நாங்குநேரியில் காங்கிரஸ்தான் நிற்கப்போகிறது என்கிறார்களே?’’

‘‘அதில் ஒன்றும் மாற்றம் வராது என்றுதான் தெரிகிறது. நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொண்டு ஜெயிக்கவைப்பதாக வசந்தகுமார் உறுதி சொல்லியிருக்கிறாராம். அதனால், அங்கே தி.மு.க ரிஸ்க் எடுக்காது. விக்கிரவாண்டியில்தான் தி.மு.க – அ.தி.மு.க நேரடி மோதல் நடக்கப்போகிறது. அங்கே வெளியூர் வேட்பாளரை நிறுத்தலாமா என்று முதலில் யோசனை நடந்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி அங்கே பலமாக இருப்பதால், அந்த முடிவைக் கைவிட்டுவிட்டு, வலுவான உள்ளூர் வேட்பாளரைத் தேடுகிறது தி.மு.க.’’

‘‘வேலூர் தேர்தலிலேயே இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு இணக்கமில்லையே?’’

‘‘இங்கே பா.ம.க-வின் ஒத்துழைப்பைப் பெரிதாக எதிர்பார்க்கிறார் எடப்பாடி. அப்படி ஒத்துழைப்பு கிடைக்காதபட்சத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க-வைக் கழற்றிவிடுவார் என்றுதான் கட்சியின் சீனியர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதனால், பா.ம.க தரப்பில் இப்போதே அங்கே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டதாகத் தகவல்’’ என்ற கழுகார்,

‘‘பாலியல் வழக்கு ஒன்றில் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும் என்று, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான சந்துரு கடந்த ஜூ.வி இதழில் கட்டுரை எழுதியிருந்தார். தொடர்ந்து, தீர்ப்பில் சொல்லியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை சம்பந்தப்பட்ட நீதிபதி திரும்பப் பெற்றிருக்கிறார்… நல்ல விஷயம்’’ என்றபடியே சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: