காசநோய் சிகிச்சையில் புதிய கூட்டு மருந்து… மருத்துவத்தில் ஒரு மைல்கல்!

இந்தப் புதிய மருந்தை, பரிசோதனை முறையில் கொடுத்ததில், 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் காசநோய் பாதித்தவர்களில், நாள்தோறும் 4,500 பேர் உயிரிழக்கின்றனர். 127 நாடுகளில், மொத்தம் 10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் 5 லட்சம் பேர்

தீவிர சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும். இந்தியாவின் நோய்ச் சுமையில் பெரும்பங்கு வகிப்பது காசநோய். இந்நோயால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகப் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன், பல லட்சம் பேர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
 

டிபி எனப்படும் காசநோய், தொற்று வகையைச் சேர்ந்தது. இந்நோய், உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதித்தாலும் நுரையீரலே அதிகமாகப் பாதிக்கப்படும். இந்நோய் பாதித்தவர்கள், நீண்ட காலம் சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும். `எம்டிஆர் டிபி’ (MDR TB) வகையால் பாதித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 6 மாதங்கள் ஊசி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். காசநோயை முழுமையாக ஒழிக்க முடியாததற்கும் பல உயிரிழப்புகள் ஏற்படவும் காரணமாக இருப்பது, `மருந்து எதிர்ப்புத் தன்மை’.

மருந்து எதிர்ப்புத் தன்மை என்பது காசநோய்க்கு பயன்படுத்தப்படும் முதல்நிலை மருந்துகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் வேலை செய்யாமல் செயலிழந்துபோவதே. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் எதிராகச் செயல்படுவதால், இதை பன்மருந்து எதிர்ப்பு (Multi drug resistance) என்கிறோம்.

‘ஐசோனைஸ்டு’ (Isonised), ‘ரிபாம்பிசின்’ (Rifampicin) மற்றும் `ப்ளூரோகுயினோலான்’ (Fluoroquinolone) மருந்துடன் இரண்டாம் நிலை ஊசி மருந்துகளான `அமிகாசின்’ (amikacin), `கானாமைசின்’ (kanamycin), `காப்ரோமைசின்’ (Cabromycin) என இந்த மூன்றில் ஏதாவது ஒரு மருந்தை எடுத்துக்கொள்வதால், மருந்து எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களை `எக்ஸ்டிஆர் டிபி’ (XDR TB) பாதிப்புள்ளவர்கள் என்கிறோம் .

“எக்ஸ் டிஆர் காசநோய்’க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு, காது கேளாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய எதிர்ப்புத்தன்மை உள்ள காசநோய்க்கு சிகிச்சை அளிப்பது, நுரையீரல் நிபுணர்களுக்கு சவாலாக உள்ளது. இந்தச் சவாலை போக்கும் வகையில் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக டிபி அலையான்ஸ் என்ற நிறுவனம், `ப்ரீடோமானிட்’ (PRETOMANID) என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

 

40 ஆண்டுகளில், காசநோய்க்கு இந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள மூன்றாவது மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர மற்றும் அதிதீவிர காசநோயை முற்றிலும் குணப்படுத்த இயலாத நிலைதான் இதுவரை இருந்துவருகிறது. ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய சிகிச்சை முறைப்படி `ப்ரீடோமானிட்’ மருந்துடன் `பீடாகுலின்’ (Bedaquiline), `லைன்ஸோலிட்’ (Linezolid) சேர்த்து, கூட்டு மருந்தாகக் கொடுக்கப்பட உள்ளது” என்கிறார், நுரையீரல் மற்றும் காசநோய் நிபுணர் சபரிநாத் ரவிச்சந்தர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “பரிசோதனை முறையில் இச்சிகிச்சையை மேற்கொண்டதில், 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். `பிபிஏஎல்’ (BPAL) என்ற மூன்று மருந்துகளை உள்ளடக்கிய முக்கூட்டு சிகிச்சையை 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாலே நோயைச் சரிப்படுத்தலாம். இந்த முக்கூட்டு மருந்தைக் கொடுக்கும்போது, காசநோய்க்கான பிற மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த மருந்து பெரியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்படவில்லை. நுரையீரலைத் தவிர, பிற உறுப்புகளில் வரும் காசநோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட மாட்டாது.

இதுவரை தினமும் 6 மாத்திரைகளாக இரண்டு வருடமும், ஆறுமாதம் ஊசி மருந்துகளாகவும் கொடுக்கப்படுகின்றன. புதிய சிகிச்சை முறைப்படி, அது மூன்று மாத்திரைகளாகக் குறைக்கப்பட உள்ளது. இந்த முக்கூட்டு மருந்தும் ஒரே மாத்திரையாகக் கொடுக்கப்படும் காலம் விரைவில் வரும்.
 

இந்த ஆண்டு இறுதியில், அமெரிக்காவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் அரசின் காசநோய் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள மருந்தைப் போற்றும் நாம், புதிய கண்டுபிடிப்பாக வந்துள்ள மருந்தையும் வரவேற்போம்” என்கிறார், மருத்துவர் சபரிநாத்.
%d bloggers like this: