உள்ளாட்சி கோல்மால்?… 50 ஆயிரம் போஸ்டிங்… பழனிசாமியின் பலே திட்டம்!

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ இதழிலேயே இதை முதன்முறையாக அறிவித்திருக்கிறார்களோ?

கழுகார் நுழைந்தபோது, கையோடு அ.தி.மு.க-வின் ‘நமது அம்மா’ நாளிதழைக் கொண்டுவந்திருந்தார். அதைப் புரட்டிய கழுகார், ‘‘இதைப் பார்த்தீரா… அம்மாவின் அரசியல் வாரிசு ஆகிவிட்டார் எடப்பாடி. இவருக்கு நெருக்கமான சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், முழுப்பக்க விளம்பரம் தந்திருக்கிறார்’’ என்றார்.

 

‘‘அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ இதழிலேயே இதை முதன்முறையாக அறிவித்திருக்கிறார்களோ?’’

‘‘ஆமாம். ஆனால், இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் சிறிதாகத்தான் இடம்பெற்றிருக்கிறது. பெயர் இல்லவே இல்லை. சமீபகாலமாக எல்லா விளம்பரங்களும் இப்படித்தான் வருகின்றன. இப்படியேபோனால், இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் எடப்பாடியை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துவிடுவார்கள் என்ற பேச்சு, கட்சிக்குள் அடிபடுகிறது.’’

 

‘‘பன்னீர் தரப்பு அமைதியாகவே இருக்கிறதே!’’

‘‘அப்படியில்லை. ‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் ஏதாவது முக்கிய முடிவெடுப்பார். அதுவரை அமைதியாகவே இருப்பார் என்பதுதான் நமக்குக் கிடைத்த தகவல். ஆனால், அவருக்காக சிலர் சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். முதல்வருக்கு நெருங்கிய சில சீனியர் அமைச்சர்களின் துறைசார்ந்த ஊழல்கள், சொத்துக்குவிப்புகள் பற்றி ஏகப்பட்ட விவரங்களைத் திரட்டியிருக்கின்றனர். அவற்றை அமித் ஷா வசம் ஒப்படைக்கவும் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.’’

‘‘எல்லா அமைச்சர்களின் ஜாதகங்களும் பி.ஜே.பி வசம் இருப்பதாகச் சொல்கிறார்களே!’’

‘‘அவற்றையும் தாண்டி சீக்ரெட்டான பல விஷயங்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, குப்பை அள்ளுவது முதல் கோபுர விளக்கு விளம்பரம் வைப்பது வரை ஓர் அமைச்சரின் பினாமி நிறுவனங்கள்தான் எல்லா வேலைகளையும் செய்கின்றன என்ற விவரங்களை எடுத்திருக்கின்றனர். ஏழெட்டு மாநிலங்களில் பல்வேறு முகவரிகளில் கிட்டத்தட்ட 120 பினாமி நிறுவனங்களை தன்னுடைய ஆட்களைவைத்து அந்த அமைச்சரே உருவாக்கி, எல்லா டெண்டர்களையும் எடுத்துவிடுவதை ஆதாரபூர்வமாக எடுத்திருக்கிறார்களாம்.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு அந்த அமைச்சர்தான் காரணம் என்பதையும் நுணுக்கமான சில விஷயங்களை முன்வைத்து நிரூபிக்கப்போகிறதாம் அந்த குரூப். இது எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான வருமானமின்றி கஷ்டத்திலும் அதிருப்தியிலும் இருக்கும் அ.தி.மு.க-வினரைக் குஷிப்படுத்த பலே திட்டம் ஒன்றை எடப்பாடி பழனிசாமி தயாரித்துக் கொடுத்திருக்கிறார். வெளிநாட்டுக்குப் போவதற்கு முன்பே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்.’’

 

‘‘அப்படி என்ன பலே திட்டம் அது?’’

‘‘தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஆண்டுக்கு 150 நாள்களுக்கு 1.25 கோடி பேருக்கு வேலை தரப்படுகிறது. 5,500 கோடி ரூபாய்க்குமேல் இந்த ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைத்தான் ஆளுங்கட்சியினருக்கு மடைமாற்றிவிட்டு, அதைவைத்து அடுத்து வரும் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு வாக்குகளை அறுவடைசெய்யவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்!’’

‘‘இந்தத் திட்டத்தில் வேலைக்கு வருபவர்களில் சீனியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சூப்பர்வைசர்போல நியமிப்பார்கள். பணித்தளப் பொறுப்பாளர்கள் என்ற அந்தப் பதவியில் இருப்பவர்கள்தான் ஊராட்சி செயலர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே இணைப்புப் பாலம்போல இருப்பார்கள்; யாரை வேலைக்கு அழைப்பது, என்ன வேலை கொடுப்பது என்பதை முடிவுசெய்வார்கள். நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதும் இவர்கள் முடிவுசெய்வதுதான்.’’

‘‘ஓ… பவர்ஃபுல்லான போஸ்ட்டிங்தான் போலிருக்கிறது.’’

‘‘ஆமாம்… அதைத்தான் இப்போது அ.தி.மு.க-வினருக்கு அள்ளிக் கொடுத்து திட்டத்தின் நிதியைச் சுரண்டவும் வேலைக்கு ஆட்களை அழைப்பதைவைத்து ஆளுங்கட்சியின் வாக்குவங்கியை பலப்படுத்தவும் திட்டம் போட்டிருக்கிறார்கள். `ஆளுங்கட்சிக்கு ஓட்டு, ஆளுங்கட்சியினருக்கு நோட்டு’ என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டு, இதற்காக கிராமப்புற அ.தி.மு.க-வினரிடம் விண்ணப்பங்கள் வாங்கும் வேலை வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 50,000 அ.தி.மு.க-வினரை இந்தப் பதவிகளில் அமர்த்தப்போகிறார்கள்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் வரும் பின்னே… ஊரக வளர்ச்சியில் பதவி வரும் முன்னே. அப்படித்தானே?’’

‘‘ஆமாம்… நகர்ப்புறங்களில் இருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் சம்பாதிப்பதற்கு டாஸ்மாக், சின்னச் சின்ன டெண்டர், போலீஸ் பஞ்சாயத்து என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆளுங்கட்சியினர்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை இந்தத் திட்டம் குஷிப்படுத்திவிடும் என்று எடப்பாடி நம்புகிறாராம்.’’

‘‘ஆகஸ்ட் 26 அன்று டெல்லி சென்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்திருக்கிறாரே?’’

‘‘ஆமாம். உள்ளாட்சித் துறைக்கு வர வேண்டிய 4,077 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்கக் கோரிக்கை வைத்திருக்கிறார்.’’

‘‘தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் தடல்புடலாக நடந்ததாமே?”

‘‘நாம் ஏற்கெனவே சொன்னதுபோலவே கார்ப்பரேட் கம்பெனி மீட்டிங்போல, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி, நிர்வாகிகளை குஷிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. கூட்டத்தில் ஆலோசனையைவிட விருந்துக்குதான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. சைவம், அசைவம் என்று களைகட்டியிருக்கிறது.’’

ராகுல் காந்தியுடன் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள்...

ராகுல் காந்தியுடன் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள்…

“ஏதாவது பேசியிருப்பார்களே?”

‘‘12 தீர்மானங்களை வாசித்திருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க தீர்மானமே, இளைஞரணியில் உறுப்பினராகும் வயதை 30-லிருந்து 35-தாக உயர்த்தியதுதான். இதற்குக் காரணமே பல தலைவர்களின் வாரிசுகளின் அரசியல் என்ட்ரியே 30 வயதைத் தாண்டித்தான் இருக்கிறது. அதேபோல இப்போது இளைஞரணியில் பொறுப்பாளராக இருக்கும் பலரும் நாற்பது வயதைக் கடந்தவர்கள். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.’’

‘‘வேறு ஏதாவது சர்ச்சை உண்டா?’’

‘‘தி.மு.க-வில் செல்வாக்கான அணியாக விளங்குவது இளைஞரணிதான். பல மாவட்டங்களில் இளைஞரணி நிர்வாகிகள் தனி ஆவர்த்தனம் செய்வது வழக்கம். உதயநிதி செயலாளர் ஆன பிறகு, இந்தப் போக்கு அதிகரித்துவிட்டது என்று பல மாவட்டங்களில் புகைச்சல் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. உதயநிதி பேசும்போது, ‘மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். எந்தப் புகாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் இளைஞரணிக்கு அதிகமான சீட்களை வாங்க வேண்டுமென்று சிலர் பேசியிருக்கிறார்கள்.’’

‘‘அதற்கு உதயநிதி என்ன சொன்னாராம்?’’

‘‘ ‘இளைஞரணி, கட்சியின் மிகப்பெரிய பலம் என்று கட்சிக்கும் தெரியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று சீட்களை வாங்கி ஜெயித்தோம். இங்கே இப்போதே நான்கு எம்.எல்.ஏ-க்கள், மூன்று எம்.பி-க்கள் இருக்கிறார்கள். அதேபோல சட்டமன்றத் தேர்தலிலும் தகுதியான நபர்களுக்குத் தலைமையிடம் பேசி சீட் வாங்கித் தருவேன்’ என்று பேசியிருக்கிறார் உதயநிதி.’’

‘‘ஆனால் 40, 50 சீட்கள் இளைஞரணிக்கு வாங்குவேன் என்று அவர் பேசியதாக வெளியில் தகவல் பரவியிருக்கிறதே?’’

‘‘அப்படி எதுவும் அவர் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால், அதிகமான சீட்களை வாங்குவோம் என்று அவர் கொடுத்த உறுதி, இளைஞரணி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி யிருக்கிறது. அதே நேரத்தில், கட்சியின் சீனியர்கள் மத்தியில் இந்தப் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. மூத்த நிர்வாகிகள் சிலர், உள்ளே இருந்த தங்கள் ஆட்கள் மூலம் உதயநிதியின் பேச்சை செல்போனில் லைவ்வாகக் கேட்டிருக்கிறார்கள். இதுபற்றி சீனியர்கள் சிலர் கலந்து பேசும் முடிவில் இருக்கிறார்களாம்.’’

‘‘ராகுல் காந்தியின் காஷ்மீர் விசிட் தோல்வியடைந்துவிட்டதே!’’

‘‘டெல்லியில் தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மறுநாள்… காலை 11.50 மணி விஸ்தாரா விமானத்தில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, டி.ராஜா உள்ளிட்ட 12 பேருக்கு டிக்கெட் முன்பதிவுசெய்யப்பட்டது. ரகசியமாக வைத்த இந்தத் தகவல் கசிந்துவிட ‘யாரும் தற்போது ஸ்ரீநகர் வர வேண்டாம்’ என்று அன்றிரவே மீடியா மூலம் தகவல் அனுப்பியது ஜம்மு காஷ்மீர் நிர்வாகம். ஆனால், திட்டமிட்டபடி அனைவரும் ஸ்ரீநகர் புறப்பட்டனர்.’’

‘‘டெல்லியிலேயே அவர்களைத் தடுத்திருக்கலாமே?’’

‘‘அலைக்கழிப்புதான். இவர்கள் ஸ்ரீநகர் விமானநிலையம் சென்று சேர்ந்தவுடன்தான், அரசு தனது வேலையைக் காட்டியது. ராகுல் உள்ளிட்ட யாரையும் மீடியாக்களைப் பார்க்கவிடவில்லை. வேறு வழியின்றி அவர்கள் டெல்லி திரும்ப வேண்டியதாயிற்று. அங்கேதான் காட்டமாக பேட்டி தந்தார் ராகுல். விமானத்தில் ராகுலிடம் ஒரு பெண் குமுறும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டு பரபரப்பாக்க முயன்றனர். ஆனால் அருண் ஜெட்லி மரணத்தால் அதுவும் கவனிக்கப்படவில்லை.’’

‘‘பிற மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டிக்கு அறிவிக்கவில்லையே?’’

‘‘விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதை வைத்து இப்போதே தி.மு.க-வில் கலகம் ஆரம்பித்துவிட்டது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் சீட் வாங்கிவிடும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சம்பத். கிராமம் கிராமமாகச் சென்று வன்னிய பிரமுகர்களைச் சந்தித்து, ‘பொன்முடி வந்த பிறகு வன்னியர்களை முழுமையாக ஒழித்துவிட்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் எனக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், சுயேச்சையாக நிற்கப்போகிறேன். நம் சமூகம் நமக்கு ஆதரவு அளித்தால்தான், எதிர்காலத்தில் இந்தக் கட்சியில் நமக்கு முக்கியத்துவம் இருக்கும்’ என்று தூபம் போட்டுவருகிறார். இந்தத் தகவல் தெரிந்த பொன்முடி தரப்பு, ‘தே.மு.தி.க போய்விட்டு, அழகிரி பின்னால் படையெடுத்தவருக்கு வாய்ப்பு எப்படி கிடைக்கும்?’ என்று நக்கலடிக்கிறது. காங்கிரஸின் வசந்தகுமார் எம்.பி ஆகிவிட்டதால் நாங்குநேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால், அதை காங்கிரஸுக்குத்தான் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், தி.மு.க தரப்பிலிருந்து இன்னமும் பதில் ஏதுமில்லை’’ என்ற கழுகார், சட்டென சிறகுகள் விரித்தார்.

%d bloggers like this: