கராத்தே வீசிய அஸ்திரம்… ஆடிப்போன ஸ்டாலின்!

அவசர வேலை இருக்கிறது. சுருக்கமாகப் பேசிவிட்டுச் செல்கிறேன்’’ என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். அவரிடம், ‘‘தி.மு.க எம்.பி-க்களை, இனி புத்தகங்களோடுதான் பார்க்க முடியும் போலிருக்கிறது?’’ என்ற கேள்வியை வீசினோம்.

‘‘ஓ… தி.மு.க எம்.பி-க்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயத்தைப் பற்றி கேட்கி றீரோ? கட்சித் தலைவர் ஸ்டாலின், எம்.பி-களிடம் ‘லைப்ரரிக்கு அதிகம் செல்லுங்கள். நிறைய படித்து குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகே நாடாளுமன்றத்தில் பேசுங்கள்’ என்று அறிவுரை சொல்லியுள்ளார். அத்துடன், ‘கிராமம் தோறும் செல்லுங்கள். மக்களின் குறைகளைக் கேட்டறியுங்கள். கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்’ என்றெல்லாம் அட்வைஸ் செய்துள்ளார். டி.ஆர்.பாலு, சில வருத்தங்களை தனிப்பட்ட முறையில் ஸ்டாலினிடம் பகிர்ந் துள்ளார். ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டாராம்.’’

ஸ்டாலின், கராத்தே தியாகராஜன்

‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளாரே!’’

‘‘ ‘நான் முதலீட்டாளர்களைச் சந்திக்கச் செல்கிறேன். ஸ்டாலின் எதற்காக வெளிநாடு செல்கிறார்’ என்று முதல்வர் கேட்டது, ஸ்டாலினுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால்தான், நீண்டநெடிய அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு அ.தி.மு.க தரப்பிலிருந்து பதில் வரும் என எதிர்பார்த்தால், கராத்தே தியாகராஜனிடமிருந்து வெளியானது. அதை ஸ்டாலினே எதிர்பார்க்கவில்லையாம்.’’

லண்டனில் எடப்பாடியுடன் விஜயபாஸ்கர்

‘‘சொல்லும்!’’

‘‘ஸ்டாலின் தனது அறிக்கையில், ‘சொந்த பயணத்தை, அரசுமுறைப் பயணமாகச் செல்லும் எடப்பாடி ஒப்பிடுவது அழகா?’ என்று கேட்டிருந்தார். கராத்தே தியாகராஜன் தனது அறிக்கையில், ‘துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, தன் நண்பருடன் அரசு தரப்புக்கே தகவல் சொல்லாமல் பாங்காங் போனாரே’ என்று புதிய திரியைக் கொளுத்திப்போட்டார். இது அ.தி.மு.க தரப்புக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸிலிருந்து கராத்தே சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, தொடர்ந்து தி.மு.க-வுக்கு எதிராக அஸ்திரம் ஏவிவருகிறார். அ.தி.மு.க பக்கம் அவரை இழுக்கும் வேலைகள் நடப்பதன் அறிகுறிதான் இது என்கின்றனர்.’’

‘‘உற்சாகமாக வெளிநாடு கிளம்பியுள்ளாரே முதல்வர்?’’

‘‘ஜெ. பாணியில் பிரமாண்ட வரவேற்பு, காலில் விழும் வைபவம் என எடப்பாடியைக் குளிரவைத்துவிட்டனர். எடப்பாடியுடன் அவருடைய செயலாளர்கள் நான்கு பேருமே சென்றுள்ளனர். அமைச்சர்களில் விஜயபாஸ்கர் மட்டுமே சென்றுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி அமெரிக்காவுக்கு ஒரு டீம் செல்கிறது. அதில்தான் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செல்கின்றனர். லண்டனில் வேஷ்டி-சட்டைக்கு குட்பை சொல்லிவிட்டு, கோட்-சூட்டுடன் வலம் வருகிறார் எடப்பாடி. லண்டனில் சர்ச்சைக்குரிய முக்கிய தொழிலதிபர் ஒருவரை எடப்பாடி தனியாகச் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். அப்படியொரு சந்திப்பு நடந்தால், அதை அம்பலப்படுத்த தி.மு.க தரப்பும் உளவுபார்த்து வருகிறது. முதல்வரின் பயணத்திட்டத்தில் முதலில் துபாய் இடம்பெறவில்லை. ஆனால், கடைசியாக அந்த நாடும் இடம்பெற்றுள்ளது.’’

‘‘அப்படியா?’’

‘‘சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ பிடி இறுகுகிறதே!’’

‘‘சி.பி.ஐ விசாரணையில் அவர்களையே கதறவிடுகிறாராம் சிதம்பரம். மறுபுறம், நீதிமன்றத் தில் அமலாக்கப் பிரிவு, ‘சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கினால், இந்த வழக்கையே விசாரிக்க முடியாது’ என்று வாதிட்டுள்ளது. அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படும் என்றே சொல்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘சிதம்பரம் சிறைக்குச் செல்ல காரணம், முன்ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்ததுதான். அந்தத் தீர்ப்பை வழங்கிய 48 மணி நேரத்தில் பணி ஓய்வுபெற்றுள்ளார் நீதிபதி கவுர். அவருக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தீர்பாயத்தின் தலைவர் பதவியை அளித்துள்ளது மத்திய அரசு. தீர்ப்புக்குக் கிடைத்த பரிசு என்று சமூக வலைதளங்களில் பொங்கிவருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்’’ என்ற கழுகார் சிறகை விரித்தார்.

%d bloggers like this: