போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை உயர்வு! – விதிமீறலும் புதிய அபராதத் தொகையும்

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பன்மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த விதிகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றன.

Traffic violation

நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதங்களை அதிகரிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 63 திருத்தங்கள் நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. விபத்துகளைக் குறைப்பதற்கும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதைத் தடுக்கும் நோக்கிலும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

 

இதுகுறித்து பேசிய மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, `புதிய சட்டத் திருத்தங்கள் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேர் நாட்டில் உயிரிழக்கிறார்கள். புதிய சட்டத் திருத்தங்கள் பொதுமக்கள் சாலைவிதிகளை மீறுவதைத் தடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

பழைய அபராதமும் புதிய அபராதத் தொகையும்

* போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான பொதுவான அபராதத் தொகை ரூ.100லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

* ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் இதுவரை ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தத் தொகை தற்போது ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டதுடன் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்கள் வரை தகுதியிழப்பு செய்யப்படும்.

* இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் பயணித்தால், ரூ.2,000 மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும். முன்னதாக, ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

* காப்பீடு (Insurance) இல்லாத வாகனங்களுக்கான அபராதத் தொகை ரூ.1,000-த்திலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

* ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதத் தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னரும் வாகனங்களைத் தொடர்ந்து இயக்குபவர்களுக்கான அபராதமும் ரூ.5,00-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

 

Traffic violation

* சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த விதிமீறலுக்கு அபராதமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.

* அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும். இலகுரக வாகனங்களுக்கான அபராதம் ரூ.1,000 ஆகவும், நடுத்தரப் பயணியர் வாகனங்களுக்கான அபராதம் ரூ.2,000ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

* ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் விதிமுறைகளை மீறும் முகவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து ரூ.20,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

* ஆபத்தான வகையில் வாகனத்தை இயக்குவோருக்கான அபராதத் தொகை ரூ.1,000-த்திலிருந்து ரூ.5000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

உரிய வயதை அடையாத சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அவர்களின் காப்பாளர் அல்லது வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்படுவர்

சட்டம்

* மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவோருக்கான அபராதம் ரூ.2,000-த்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்படுகிறது.

* சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவோருக்கான அபராதம் ரூ.500லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

* அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றினால் ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் தலா ரூ.1,000 வீதம் அபராதம் வசூலிக்கப்படும். 

அதேபோல், போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தும் போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டால் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகை இருமடங்காக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

இந்தநிலையில், உயரதிகாரிகளிடமிருந்து போக்குவரத்துக் காவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், புதிய அபராதத் தொகை இன்று முதல் அமலாகவில்லை என்கிறார்கள் போக்குவரத்துக் காவலர்கள். அதனால், பழைய அபராதத் தொகையையே போக்குவரத்துக் காவலர்கள் வசூலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

%d bloggers like this: