பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்!

நன்றி -விகடன்

ஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கும் நிஜ வாழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததில், அவர்மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின்மீது அ.தி.மு.க தொண்டர்களுக்கு பெரும்கோபமும் இருக்கிறது. அந்த வழக்கு முடிவுக்கு வரும் முன்னே, ஜெயலலிதாவின் வாழ்வும் முடிவுக்கு வரும் என, யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வளவு அவப்பெயரை வாங்கித் தந்த அந்தச் சொத்துகளை அனுபவிக்க, இப்போது ஜெயலலிதா இல்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அந்தச் சொத்துகள் அனைத்தும் யாருக்குப் போகப் போகின்றன என்ற கேள்விதான் பெரிதாக எழுந்திருக்கிறது.

அன்றைய சொத்து… இன்றைய மதிப்பு!

ஜெயலலிதா கடைசியாகப் போட்டியிட்ட 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல்செய்த வேட்புமனுவில், தன் கையில் இருப்பதாக அவர் குறிப்பிட்ட தொகை வெறும் 41,000 ரூபாய் மட்டுமே. அவர் பெயரில் சென்னை, நீலகிரி, செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 வங்கிக் கணக்குகளும் நிதி நிறுவனக்கணக்குகளும் இருந்தன. சொத்துக்குவிப்பு வழக்கின்போது, ஒன்பது கணக்குகள் முடக்கப்பட்டன. மீதம் உள்ள வங்கிக்கணக்குகளில் மொத்தம் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் இருந்தது.

வேதா இல்லம்

வேதா இல்லம்

கொடநாடு எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் ஆகிய ஐந்து கம்பெனிகளில் பங்குதாரராக இருந்த ஜெயலலிதாவுக்கு, அவற்றில் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்தில் பங்கு இருந்தது. அவற்றைத் தவிர்த்து 21,280 கிராம் தங்கம், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் இருந்ததாக வேட்புமனுவில் கூறியிருந்தார் ஜெயலலிதா.

அவரிடம் ஒன்பது வாகனங்கள் இருந்தன. ஹைதராபாத் – ஜீடிமெட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஹைதராபாத்தில் 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சென்னை மந்தைவெளியில் ஒரு வணிகக் கட்டடம், சென்னை பார்சன் மேனரில் வணிகக் கட்டடம், போயஸ் கார்டனில் 10 கிரவுண்டு வீடு மற்றும் இரண்டு இடங்கள் என ஜெயலலிதா பெயரில் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அன்றைய மதிப்பு 113 கோடி ரூபாய்.

பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து... சதுரங்க வேட்டை ஸ்டார்ட்!

இவற்றின் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு, இவற்றை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், ஜெயலலிதா சொத்துக்குவிப்பின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவோ, `‘அந்தச் சொத்துகளின் இன்றைய மதிப்பு 5,000 கோடி ரூபாய்’’ என்கிறார்.

யாருக்கு உரிமை?

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சொத்துகள் யாருக்குப் போகும் என்பதுதான், தமிழக மக்களின் மண்டையைச் சூடாக்கும் கேள்வி. ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர் பாகத் தாக்கலாகியுள்ள வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று உரிமைகோரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது, “ஜெயலலிதாவுக்கு நாங்கள்தான் வாரிசு என்று கோரி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தபோது, மூன்று மாதங்கள் இழுத்தடித்து இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் என்பதால் நீதிமன்றம் மூலம் சான்று வாங்கிக்கொள்ளுமாறு துறை அதிகாரிகள் சொல்லிவிட்டனர். அதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது’’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு பங்களா

கொடநாடு பங்களா

அவர்களிடம், ‘‘ஜெயலலிதா, ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று கூறியவர். அவரது சொத்தில் ஒரு பங்கை மக்களுக்குக் கொடுத்தால் என்ன?’’ என்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கேட்டனர். அதற்கு அவர்கள் தரப்பு, ‘‘என் அத்தை ஜெயலலிதாவுக்கும் அதுவே விருப்பமாக இருந்தது. அதனால் எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என்று பதிலளித்தார்.

வேதா இல்லத்தில்தான் தாங்கள் பிறந்ததாகக் கூறிவரும் தீபாவும் தீபக்கும், போயஸ் கார்டன் வீட்டை விட்டுத்தருவதில்லை என்பதிலும் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. “இந்து வாரிசுச் சட்டப்படி, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளுக்கு தீபக், தீபா இருவரும் வாரிசு உரிமைக் கோருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்கின்றனர் தீபாவுக்கு நெருக்கமானவர்கள். சசிகலா வெளியில் வருவதற்குள் இந்தச் சொத்துகளை ஏதாவது ஒரு வகையில் அடைந்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான இவர்களைத் தவிர, அதிகார வட்டத்தில் உள்ள சிலரும் மிகத்தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

‘‘இது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி!’’

ஜெயலலிதா சொத்து என்றதும் எல்லோருக்கும் போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட், பையனுார் மற்றும் சிறுதாவூர் பங்களா ஆகியவை மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால், ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் எண்ணிக்கை 306. வழக்கு முடிவுக்கு வந்தபோது, ஒருவேளை அ.தி.மு.க அரசு இல்லாமலிருந்திருந்தால், இந்நேரம் இந்தச் சொத்துகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அது நடக்கக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆறப்போட்டிருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

சிறுதாவூர் பங்களா

சிறுதாவூர் பங்களா

சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் பட்டியலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களிலும் ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், இந்தச் சொத்துகள் அனைத்தையும் அரசு பறிமுதல்செய்து ஏலம்விட்டு, அதில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 130 கோடி ரூபாயைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

‘தீபாவும் தீபக்கும் வாரிசுகள் அல்லர்’ என்று தீர்ப்பு வரும்பட்சத்தில், வாரிசு இல்லாத சொத்து களாக இவை மாறும். அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் இவற்றை நிர்வகிக்க வழிவகை செய்கிறது சட்டம். இதன்படி, ஜெ. சொத்துகளை, பொது நிர்வாகி மற்றும் அலுவல் அறங்காவலர் நிர்வகிக்க வேண்டும். இதை வலியுறுத்திதான் தற்போது கே.கே.நகர் புகழேந்தி வழக்கு தொடுத்துள்ளார்.

அவரிடம் பேசினோம். ‘‘1991-96 காலகட்டத்தில், ஜெயலலிதா சம்பாதித்த சொத்துகளை பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம் பட்டியலிட்டு, ஜெயலலிதா பெயரில் 55.2 கோடி ரூபாய் மதிப்புக்குச் சொத்துகள் இருப்பதை உறுதிசெய்தது. இதன் இன்றைய மதிப்பு 913 கோடி ரூபாய்! போயஸ் கார்டன் பங்களாவின் ஒரு பகுதி, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்ட நிலங்கள் எனப் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள், தற்போது சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது அப்பட்டமான அபகரிக்கும் முயற்சி. இந்தச் சொத்துகளை மீட்டு, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

பல்லாயிரம் கோடி ஜெ. சொத்து... சதுரங்க வேட்டை ஸ்டார்ட்!

தீபா பேரவையில் நான் நிர்வாகியாக இருந்திருக்கிறேன். அவர்கள் இருவராலும் அந்தச் சொத்துகளை நிர்வகிக்க முடியாது. அவர்களிடம் சொத்துகளை ஒப்படைத்தாலும்கூட, அடுத்த கணமே சசிகலாவுவிடம் விற்றுவிடுவார்கள். ஆனால், ஜெயலலிதாவின் சொத்துகளை அரசே ஏற்று நடத்தினால், அதிலிருந்து வரும் வருமானத்தை பொதுநலக் காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும்” என்றார்.

ஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்காமல் இருப்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலாதான். அந்த நன்றிக்காகத்தான், சசிகலாவசம் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்து களை அவர் கைப்பற்றவில்லை. அவர்களும் எடப்பாடியைத் தொந்தரவு செய்வதில்லை. பரஸ்பரப் புரிதல் இருப்பதால்தான், எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

‘‘போயஸ் கார்டனில்தான் சசிகலா வசிப்பார்!’’

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை தொடக்கத்தில் கவனித்த வழக்கறிஞர் ஜோதியிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கிலிருந்து நான் விலகிவிட்ட நிலையில், அதுகுறித்து எதுவும் பேச விரும்பவில்லை. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அதிகாரபூர்வ முதலமைச்சர் இல்லமாக மாற்ற வேண்டும். அரசாங்கத்தை இயக்குவதற்குத் தேவையான தொழில்நுட்ப, அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இதுவே முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்றினால், அது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘‘ஜெயலலிதா இறந்தபோது அவர் நிரபராதியாகவே இறந்தார். அதேபோல், அந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு ஊழியராக இருந்தவர், ஜெயலலிதா மட்டுமே. அவர் மறைவுக்குப் பிறகு மற்ற மூவருக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதற்கு முன் மூவரிடமும் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டிருக்க வேண்டும். நூறு கோடி ரூபாய் அபராதத்தொகையை ஜெயலலிதாவின் சொத்துகளை விற்றுக் கட்டவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் குறைதீர் மனுவைத் தாக்கல்செய்தது. ஆனால், இறந்தவரின் சொத்துகளை விற்க முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே காரணத்தை முன்வைத்தே சசிகலாவின் சீராய்வு மனுவும் இப்போது உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்றார்.

சசிகலாவுக்கு நெருக்கமானவர்களோ, ‘‘ஜெயலலிதாமீது தி.மு.க ஆட்சியில் வழக்கு தொடர்ந்த பிறகு, அவர் பெயரில் எந்தச் சொத்தையும் வாங்கவில்லை. சிறுதாவூர், கொடநாடு, பையனூர் உள்ளிட்ட சொத்துகள் ஜெயலலிதா பெயரில் இல்லை; கம்பெனி பெயரில்தான் இருக்கின்றன. அதேநேரம் ஜெயலலிதா பெயரில் போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட சில சொத்துகள் இருக்கின்றன. அனைத்துமே இப்போதும் சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்கு வசதியாகவே போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு எதிரில் சசிகலா வசிப்பதற்கு தனியாக வீடு கட்டப்படுகிறது. சசிகலா முப்பது ஆண்டுகள் போயஸ் கார்டனில் வாழ்ந்துவிட்டதால், அந்த ஏரியாவைவிட்டு வெளியே செல்ல அவர் விரும்பவில்லை என்பதால் இந்த ஏற்பாடு நடக்கிறது’’ என்கின்றனர்.

இவற்றை தவிர்த்து சசிகலாவுக்கும் தெரியாமல் பினாமிகள் பெயரில் எக்கச்சக்க மான சொத்துகள் இருந்தன என்றும், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை யில் இவற்றின் ஆவண ஆதாரங்களும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு பல தரப்பும் குறிவைத்து சதுரங்க வேட்டை நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அரசு மெளனம் காப்பதைப் பார்த்தால், சசிகலாவுக்கு இந்தச் சொத்துகளைக் காப்பாற்றிக் கொடுக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அதுவே இன்னொரு தர்மயுத்தத்துக்கு அடிகோலும் என்பது நிச்சயம்.

‘அட்டாச்மென்ட்’ என்றால் என்ன?

சட்டப்படிப் பார்த்தால் ‘அட்டாச்மென்ட்’ செய்வது ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையாகும். ஒரு சொத்தை பொது ஏலத்துக்கு விடுவதற்கு முன் ‘அட்டாச்மென்ட்’ செய்ய வேண்டும். உதாரணமாக, இப்போது விஜய் மல்லய்யாவின் சொத்துகள் அட்டாச்மென்ட் செய்யப்பட்டிருப்பதால், அவை பொது ஏலம் விடுவதற்குத் தயாராக உள்ளன. கார்த்தி சிதம்பரத்தின் பெயரில் உள்ள சொத்துகளும் அட்டாச்மென்ட் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ஜெயலலிதா வழக்கில் ஒரு சிக்கல் இருப்பதை சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குமாரசாமி தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதா மறையும்போது குற்றவாளி அல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல்முறையீடு, இறந்துபோன ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது. சசிகலா உயிருடன் இருந்ததால் தண்டனைத் தீர்ப்பு அவரையே கட்டுப்படுத்தும். இதனால் ஜெயலலிதா பெயரில் மட்டும் இருக்கும் சொத்துகளை அரசு எதுவும் செய்ய முடியாது. ஆனால், சசிகலாவின் பெயரும் சேர்ந்திருந்தால் அந்தச் சொத்துகள் ‘அட்டாச்மென்ட்’ ஆகிவிடும். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துகளை அரசு பொது ஏலத்துக்கு விடலாம்.

‘‘அரசுடைமை ஆக்காமல் இழுத்தடிக்கிறது அ.தி.மு.க அரசு!’’

ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் எஸ்.பி-யாக இவர் பணிபுரிந்தபோதுதான் ஜெயலலிதாமீதான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முதல் அதற்கான ஆவணங்களைத் தயார்செய்தது வரை அனைத்தையும் இவர் தலைமையிலான குழுவே மேற்கொண்டது. கடந்த 1997-ல் ஓய்வுபெற்ற பிறகு கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இந்த வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கிவந்தார். ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை ஏ டு இசட் அறிந்தவரான அவரிடம் பேசினோம்.

‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததான புகாரை விசாரித்தோம். சுமார் 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தோம். அந்தச் சொத்துகளின் மதிப்பு இப்போது ஐந்தாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும். இந்தச் சொத்துகளை அப்போதே அட்டாச்மென்ட் செய்துவிட்டோம். உச்ச நீதிமன்றம் வரை குற்றத்தை உறுதிபடுத்திவிட்டது. பல வருடங்கள் கடந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசுதான் நடவடிக்கை எடுத்து அரசுடைமை ஆக்கவேண்டும். அதற்கான பூர்வாங்க வேலைகள்கூட நடந்தன. ஒரு சாதாரண சட்டச் சம்பிரதாயம்தான் பாக்கி. ஆனால், அதைத்தான் இப்போதுள்ள அ.தி.மு.க அரசு செய்யாமல் இழுத்தடிக்கிறது.

கர்நாடக அரசு வழக்கை நடத்தி முடித்துவிட்டது. அவர்கள்வசம் உள்ள வழக்கின் ஆவணங்களை தமிழக அரசு கேட்டு வாங்கவேண்டும். அதையும் செய்யாமல் இருக்கிறார்கள். வழக்கின் தீர்ப்பில் 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்திருக்கின்றனர். அடையாளம் காணப்பட்ட சொத்துகளைத் தவிர மேலும் சொத்துகள் இருப்பது தெரியவந்தால், அபராதத்தொகைக்காக அதையும் அரசாங்கமே எடுத்துக்கொள்ளலாம். இப்போதுகூட, ஜெயலலிதா பெயரில் எங்கெங்கே சொத்துகள் இருக்கின்றன என்று விசாரித்துக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது’’ என்கிறார்.

%d bloggers like this: