முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்… கோட்டையைச் சுற்றும் கேள்விகள்!

முதலீடுகளுக்காகச் சென்றவர்கள் அதற்குத் தகுதியான ஆட்களை உடன் அழைத்துச் செல்லாதது ஏன் என்றும் கோட்டையில் கேள்விகள் பறக்கின்றன.

கழுகார் உள்ளே நுழைந்ததும் ஆவி பறக்கும் கொழுக்கட்டை களை அவர்முன் வைத்தோம். திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவரிடம், ‘‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் விசேஷச் செய்திகள் உண்டா?’’ என்ற கேள்வியை வீசினோம்.

 

‘‘விசேஷம் இல்லாமலா? ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்… கேளும்!’’ என்றபடி தகவல் களைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘எடப்பாடியின் வெளிநாட்டுப் பயணத்தில் சில விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன. லண்டனில் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனை, தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. `அந்த மருத்துவமனை பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது’ என, புகழ்பெற்ற ‘கார்டியன்’ இதழ் கடந்த ஏப்ரல் மாதமே செய்தி வெளியிட்டது. ‘அந்த மருத்துவமனையின் பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் முதலீடு செய்யும் திட்டத்தில் இருக்கின்றனர். இதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்’ என்று சிலர் மத்திய அரசுக்குக் கொளுத்திப் போட்டுள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள விபு நாயர் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலிருந்து நிதி பெற்றுத் தரும் பொறுப்பில் இருந்துள்ளார். ஆனால், அவரை இந்தப் பயணத்தில் அழைத்துச் செல்லவில்லை யாம்.’’

‘‘அப்படியா?’’

‘‘முதலீடுகளுக்காகச் சென்றவர்கள் அதற்குத் தகுதியான ஆட்களை உடன் அழைத்துச் செல்லாதது ஏன் என்றும் கோட்டையில் கேள்விகள் பறக்கின்றன. முதல் நாள் லண்டன் பயணத்தில் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதுகுறித்த விரிவான தகவல்களை, இதுவரை செய்தித் துறை வெளியிடவில்லை. `நாடாளுமன்றக் குழுவுடன் எடப்பாடி சந்திப்பு’ என்று மட்டும் செய்தியைப் பகிர்ந்தனர். இவையெல்லாம்தான் இப்போது சர்ச்சை ஆகியிருக்கின்றன.’’

‘‘ஆனால், அமைச்சர்கள் சிலரும் பயணத்தில் உடன் சென்றுள்ளனரே?’’

‘‘தமிழக அரசு வரலாற்றிலேயே இத்தனை அமைச்சர்களும் ஒரே நேரத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை என்கிறார்கள். இதுவரை 15-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அரசு முறைப் பயணமாக வெளி நாட்டுக்குச் சென்றுள்ளனர். சில அமைச்சர்கள் சொந்த வேலையைக் கூட அரசுமுறைப் பயணமாக மாற்றிச் சென்ற கதையும் உண்டு.

‘‘ஓஹோ!’’

‘‘இதனாலேயே `அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்குக் கிடைத்த முதலீடு மற்றும் திட்டங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று எதிர்க்கட்சியினர் கேட்க இருக்கின்றனராம்.’’

‘‘தி.மு.க-வில் புகைச்சல் உருவாகியுள்ளதாமே?’’

‘‘ஆமாம். அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் ஆகிய இருவருக்கும் மாநில அளவில் பொறுப்பு வழங்கியுள்ளார் ஸ்டாலின். ஆனால், இருவருமே அந்தப் பொறுப்புகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.’’

‘‘ஏனாம்?’’

‘‘தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க-வுக்கு வரும் முன்பு, அவருக்கு மாவட்டச் செயலாளர் அல்லது மாவட்டப் பொறுப்பாளர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்தார் களாம். அதேபோல், கலைராஜனுக்கு மாநில அளவில் செயலாளர் பொறுப்பு தரப்படும் என்று சொன்னார்களாம்.’’

‘‘ம்!’’

‘‘கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்ததில் தங்க தமிழ்ச்செல்வனுக்குத் திருப்தியில்லையாம். ‘பன்னீரை எதிர்த்து அரசியல் செய்ய தி.மு.க பக்கம் வந்தேன். இப்போது, இப்படியாகிவிட்டதே!’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாக தகவல். `செயலாளர் பதவிக்குப் பதில், இணைச் செயலாளர் பதவியைத் தந்துள்ளார்களே!’ என்று கலைராஜனுக்கும் வருத்தமாம். இருவரிடமும் ஸ்டாலின் தரப்பு, ‘சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் நிச்சயம் சீட் வழங்கப்படும். உங்களுக்கு வேறு பொறுப்பு தந்தால், இப்போது அது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும்’ என்று சொல்லி சமாதானப்படுத்தியுள்ளதாம்.’’

‘‘ப.சிதம்பரம் விவகாரத்தில் என்ன நடக்கிறது?’’

‘‘அவருடைய காவலை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்த முறை, சிதம்பரத்தின் விருப்பத்துடன் காவல் நீட்டிப்பு நடந்துள்ளது. காரணம், திகார் சிறைக்குச் செல்ல சிதம்பரம் விரும்பவில்லை என்பதுதான். ஜாமீன் மனுவுக்கு நீதிமன்றம் இசைவு தெரிவிக்க வாய்ப்பில்லை. மறுபுறம், சி.பி.ஐ காவல் முடிந்து விட்டால், அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டிய நிலை வந்துவிடும் என்பதால், சிதம்பரம் தரப்பே சி.பி.ஐ காவலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.’’

‘‘விசாரணையில் வேறு என்ன விசேஷம்?’’

‘‘சிதம்பரம்மீது சில வில்லங்கப் புகார்களையும் மத்திய அரசு கிளப்பிவருகிறது. குறிப்பாக, இந்திராணி வாக்குமூலம் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. விரைவில், அதுவும் பூதாகரமாக வெடிக்கும் என்கின்றனர்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட மூன்று முக்கிய தொழில் அதிபர்களைப் பற்றியும் தனது வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள்மீது சி.பி.ஐ கண் வைக்காமல் கரிசனம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுகிறது. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கடன் வழங்கிய சில பெரிய நிறுவனங்களின் விவரங்களை சி.பி.ஐ தரப்பு ஃபைலாகத் தயார்செய்து, ஒவ்வொரு கேள்வியாக அவரிடம் கேட்டுவருகிறதாம்.’’

‘‘சிதம்பரம் பதில் என்னவாம்?’’

‘‘பல கேள்விகளுக்கு ‘எனக்குத் தெரியாது’ என்ற வார்த்தைகளையே உதிர்க்கிறாராம். சில ஆவணங்களைக் காட்டி கேள்வி எழுப்பினால், ‘இதில் என்ன முறைகேடு இருக்கிறது? அமைச்சராக என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்துள்ளேன். ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’ என்று சி.பி.ஐ அதிகாரிகளைக் கதறவிடுகிறாராம் சிதம்பரம்.’’

‘‘சரிதான்!’’

‘‘இதனால் ஒவ்வொரு கேள்விக்கும், அதற்குத் துணையாக சில ஆதாரங்களை சி.பி.ஐ தொடர்ந்து தேடிவருகிறது. சிதம்பரத்தின் இந்த அணுகுமுறையால்தான் சி.பி.ஐ தரப்பில் இன்னும் ஆதாரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்க முடியாமல்போகிறது என்கிறார்கள்.’’

‘‘விவகாரம் இன்னும் நீளுமோ?’’

‘‘ஆமாம். இன்னும் இரண்டு மாதங்கள் இழுபறி நீடிக்கும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்!”

“சமூகச் செயற்பாட்டாளரான பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப் பதைக் கவனித்தீரா?”

“பியூஸ் மானுஷ் சேலம் பி.ஜே.பி அலுவலகத் துக்குப் போனது; கேள்வி கேட்டது தவறு என்றும், தவறு இல்லை என்றும் இருவிதமான விவாதங்கள் தொடர்கின்றன. அதற்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அங்கு நடந்த விஷயம், எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது; இன்னொரு வகையில் வருத்தமாக இருக்கிறது. நான் அங்கு இருந்தால் அவர் அலுவலகத்தைவிட்டு ஊர்ந்துதான் போயிருப்பார்’ என்று வன்முறையை நியாயப்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் பேசியிருக் கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசியிருப்பது அனைத்து தரப்பினரை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.

%d bloggers like this: