Advertisements

முதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்!

ன்றைக்கு 50 வயதில் இருக்கும் குடும்பஸ்தர்களிடம் மனம்விட்டுப் பேசிப் பாருங்கள். பெரிய அளவில் சொத்து எதையும் சேர்க்காமல், ஓய்வுக்காலத்தை என்ன செய்து சமாளிக்கப்போகிறோம் என்கிற கவலை அவர்களின் மனதில் அப்பிக் கிடப்பதைத் தெளிவாக உணரமுடியும். முதலீடு,

இன்ஷூரன்ஸ் தொடர்பான விஷயங்களில் அவர்கள் செய்த மெகா தவறுகள்தான் அவர்கள் இன்று வருத்தப்படுவதற்கு முக்கியமான காரணம். அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பதை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொண்டால், 50 வயதாகும்போது எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். அந்த வகையில், இன்றைய இளைஞர்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து மெகா தவறுகள் இனி…

1. கூட்டு வட்டியின் சக்தியை உணராதது

பள்ளிப்படிப்பை முடித்த எல்லோருமே கூட்டு வட்டியின் சூத்திரத்தைச் [A = P (1 + r/n) nt] சட்டென்று சொல்லிவிடுவார்கள் ஆனால், அதன் சக்தியைச் சரியாகப் புரிந்துகொண்டார்களா என்றால், இல்லை என்பதே பதில். மக்கள் ஆரம்பம்தொட்டே முதலீடு செய்யத் தொடங்காததற்குக் காரணம், கூட்டு வட்டியின் மகத்துவம் அவர்களுக்குத் தெரியாமல் போனதால்தான்.

கூட்டு வட்டி பற்றிச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், வட்டிக்கு வட்டி சேர்வதுதான். கூட்டு வட்டியின்மூலம் கிடைக்கும் லாபம் என்பது ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும், காலம் செல்லச் செல்ல நம்பமுடியாத அளவுக்கு மலைபோலத் திரண்டு நிற்கும். 35 வயதிலிருந்து 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 சேமிக்கத் தொடங்கினால், அவருடைய 60 வயது முடிவில் (ஆண்டுக் கூட்டு வருமானம் 10%), அவருக்குத் தோராயமாக ரூ.36 லட்சம் கிடைக்கும். அதே 3,000 ரூபாயை 25 வயதிலிருந்து 60 வயது வரை சேமிக்கத் தொடங்கி, அதே 10% ஆண்டு வருமானம் என்று கணக்கிட்டால், சுமார் ரூ.1 கோடி அவருக்குக் கிடைக்கும். இதற்குக் காரணம், கூட்டு வட்டி செய்யும் மாயம்தான். எனவே, கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கவேண்டுமானால், வருமானம் ஈட்டத் தொடங்கும்போதே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும்.

2. இலவச டிப்ஸைப் பயன்படுத்தி பங்குகளை வாங்குதல்

ஆயிரம் தடைகள் இருந்தாலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் பென்னி ஸ்டாக்ஸ் போன்ற மிகக் குறைந்த விலை யில் விற்கப்படும் பங்குகளை வாங்காதீர்கள். துரதிர்ஷ்டவசமாக, நிறைய பேர் இதுமாதிரியான பங்குகளை வாங்கி, கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தை இழக்கிறார்கள். பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால், ஒரு பங்கு நிறுவனத்தைப் பற்றி, அந்த நிறுவனம் செய்யும் தொழில் பற்றி, அந்த நிறுவனம் சார்ந்த துறை பற்றி, அரசின் விதிமுறைகள் பற்றி என எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது நல்லது. உங்களால் எந்தவொரு பங்கு நிறுவனத்தையும் அலசி ஆராய்ந்து முடிவுக்கு வரமுடியவில்லை எனில், மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்வதே சரி.

3. எதிர்காலத்தைப் பாதிக்கும் பணவீக்கத்தைக் கவனிக்காதது

பணவீக்கம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் ஆனால், எதிர்காலத்தில் அது நம் வாழ்க்கையில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. பணவீக்கம் என்பது நமது வருமானம் அதிகரிக்கும்போது செலவும் அதிகரிப்பது. இன்றைக்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதச் செலவு ரூ.20,000 எனில், 20 ஆண்டுகள் கழித்து சுமார் ரூ.70,000 தேவைப்படும். இந்தக் கணக்குத் தெரியாமல், வெறும் வங்கி டெபாசிட்டில் அல்லது தங்கத்தில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால், நம்முடைய வருமானம் பணவீக்க வளர்ச்சிக்கேற்ப வளராது.

தவிர, நமக்கு வருமானம் உயரும்போது அல்லது ஊக்கத் தொகை பெறும்போது, கடனை அடைக்க நாம் அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதில்லை. ஓய்வுக்காலத்துக்காகச் சேமித்து வைப்பதும் இல்லை. கூடுதலான வாடகைக்கொண்ட வீட்டிற்கு மாறுவது, மொபைல், பைக், கார் போன்றவற்றைப் புதுப்பிப்பது போன்ற புது சுமைகளை ஏற்றிக்கொள்கிறோம். இதனால் கூடுதல் சுமைதான். நீங்கள் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் பணத்தை எண்ணி செலவு செய்யப் பழகுங்கள். மிச்சமாகும் பணத்தை, பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், வாங்கும் முன்பே அந்தப் பொருள் அவசியமா என்று யோசியுங்கள். வாங்கும் முடிவைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள்.

4. சரியான காப்பீடுகள் எடுக்காதது

ஒவ்வொரு வீட்டிலும் நான்கைந்து மொபைல் போன்கள் இருப்பதுபோன்றே ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், திடீர் மருத்துவச் செலவுகளில் இருந்து காப்பாற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்து வைத்திருக்கும் குடும்பங் களை, விரல்விட்டு எண்ணி விடலாம். வேலை மாறுதலும் வேலை இழப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகிப் போன இந்தக் காலத்தில் தன் அலுவலகத்தில் எடுக்கப் பட்டிருக்கும் குழு மருத்துவக் காப்பீட்டை நம்பி மட்டும் பலர் இருக்கிறார்கள். குழு மருத்துவக் காப்பீடானது, அந்த நிறுவனத்தில் தொடரும் வரை மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் என்பதையும் அந்த நிறுவனத்தை விட்டு, நீங்கள் வெளியே வந்துவிட்டால், அதற்கும் உங்களுக்குமான தொடர்பு அற்றுப் போகும் என்பதையும் மறந்துவிடுகிறார்கள். எனவே, தன் குடும்பத்திற்காகத் தனியாக எடுத்துக்கொள்ளும் மருத்துவக் காப்பீடு மட்டுமே உதவுமென்பதை நினைவில் வையுங்கள்.

5. ஆஃபருக்கு ஆசைப்படுதல்

தொலைக்காட்சி அதிக பயன்பாட்டில் இல்லாத காலங்களில் ‘இந்தப் படம் இன்றே கடைசி’ என்ற விளம்பரப் பதாகையுடன் மாட்டு வண்டி செல்வதைப் பார்த்திருப்போம். நல்ல படமென்றால் நாமும் குடும்பத்துடன் சென்று வந்திருப்போம். அதனால் ஏற்பட்ட செலவுகூட, நம் குடும்ப சந்தோஷத்திற்குதானே என்ற கணக்கில் வந்துவிடும். ஆனால், இன்று நம் ஒவ்வொரு மாத பட்ஜெட்டிலும் துண்டுவிழும் அளவிற்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரங் களிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பர செய்திகள் மக்களைத் தூண்டுகின்றன.

எந்தவிதமான கவர்ச்சிகர விளம்பரமும் மக்களை அடிமைப்படுத்தும் என்பதை அடிக்கடி கண்கூடாகப் பார்க்கலாம். சமயங்களில் சிக்கிக் கொண்ட முதல் ஆளாகக்கூட நாம் இருந்தி ருப்போம். ஆடித் தள்ளுபடி விற்பனை, அட்சய திருதியை சிறப்பு விற்பனை, தீபாவளி மெகா தள்ளுபடி ஆஃபர் இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாக ஆன்லைன் தள்ளுபடி விற்பனைகள் பெரிய சாதனைகளைத் தொடுவதற்கு, சத்தமில்லாமல் நம் சேமிப்பை இழந்து (Online Transactions) நாம் உதவி செய்திருக்கிறோம் என்பது கசப்பான ஓர் உண்மை. அப்படி நாம் தள்ளுபடி விற்பனையில், அவசர அவசரமாக வாங்கிக் குவித்த பொருள் களெல்லாம், தள்ளுபடி முடிந்ததும் விலை உயர்ந்து விற்பனை ஆகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. பிறகு எதற்கு இதுபோன்ற தள்ளுபடி மோகத்தில் நாம் சிக்கி, பணத்தை இழக்கவேண்டும்?

அதற்குப் பதிலாக, எந்தவொரு பொருளையும் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், வாங்கும் முன்பே அந்தப் பொருள் அவசியமா என்று யோசியுங்கள். வாங்கும் முடிவைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள். அப்போதும் அந்தப் பொருள் உங்களுக்குத் தேவை என்றால் கட்டாயம் வாங்குங்கள். இப்படியில்லாமல், இன்று அநாவசிய பொருள்களை வாங்கினால், நாளைக்கு அவசிய மான பொருள்களை வாங்க நம்மிடம் நிச்சயம் பணம் இருக்காது.

இந்த ஐந்து மெகா தவறுகளையும் இன்றைய இளம்தலைமுறையினர் செய்யாமல் இருந்தாலே போதும், ஐம்பது வயதுக்குப்பிறகு நம்மிடம் போதிய அளவு பணம் இல்லையே என்கிற கவலையில்லாமல் இருக்கலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: