தெலங்கானாவில் ஒலிக்கும்… தமிழிசை!

தமிழிசையை ஆளுநராக நியமித்திருப்பதால் தெலங்கானாவில் வசிக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் சமூக ஊடகப்பதிவுகள் சான்றளிக்கின்றன.

தமிழிசை செளந்தரராஜன்

மிழகத்தில் இனி “தாமரை மலர்ந்தே தீரும்!’’ என்ற ஆவேசக் குரலை இன்னும் சில ஆண்டுகளுக்குக் கேட்க முடியாது. அக்கா தமிழிசை செளந்தரராஜன் மாண்புமிகு ஆளுநராகிவிட்டார். அதுவும் பக்கத்திலேயே இருக்கிற தெலங்கானாவுக்கே அவரை ஆளுநராக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி. எப்போதுமே தாமரைபோல மலர்ந்திருக்கும் தமிழிசையின் முகம் இன்னும் பெரிதாக மலர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க இடம்பெற்றிருந்த அ.தி.மு.க கூட்டணி மரண அடி வாங்கியது. கட்சியின் மாநிலத்தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனும் தூத்துக்குடித் தொகுதியில் மோசமான தோல்வியைத் தழுவினார். அப்போதே அவர் மாற்றப்பட்டுவிடுவார் என்ற பேச்சுகள் எழுந்தன. வேறு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்குவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

தேர்தலில் தோல்வியடைந்த அல்லது பரபர அரசியலுக்கு ஒத்துழைக்காத மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவியை வழங்கி அங்கீகரிப்பது காங்கிரஸ் முன்மொழிந்த வழிமுறை. அதை பா.ஜ.க வழிமொழிகிறது. ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்த சென்னாரெட்டி, ரோசய்யா, ஆந்திராவின்

டி.ஜி.பியாக இருந்த ராமமோகன்ராவ் ஆகியோர் தமிழக ஆளுநர்களாக இருந்துள்ளனர். இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த நரசிம்மன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி ஆளுநராகவும், புதிதாக உதயமான தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் இருந்துவந்தார். இப்போது அவருடைய இடத்தை மீண்டும் ஒரு தமிழராகத் தமிழிசை நிரப்பியுள்ளார். நரசிம்மனுக்குப் பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும் தமிழராக அறியப்பட்டவரில்லை. ஆனால் தமிழிசையைத் தெரியாத தமிழரே இருக்க முடியாது. அதிலும் தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு தமிழகத்தில் தமிழிசை இல்லாதது பேரிழப்புதான்.

தமிழிசையை ஆளுநராக நியமித்திருப்பதால் தெலங்கானாவில் வசிக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் சமூக ஊடகப்பதிவுகள் சான்றளிக்கின்றன. ‘‘உங்க சித்தப்பாகிட்ட சொல்லி ஹைதராபாத்தில் வசந்த் அண்ட் கோ ஆரம்பிக்கச் சொல்லுங்க மேடம்!’’ என்று அங்கே வசிக்கும் ஒரு தமிழர் முகநூலில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஆனால் எதையும் புன்னகையோடு எதிர்கொள்வார் தமிழிசை. அவரின் அசுர பலம் அதுதான்.

அவரளவுக்கு விமர்சனங்களையும் கிண்டல்களையும் புன்னகையோடும் போர்க்குணத்தோடும் எதிர்கொண்ட ஓர் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. ஓர் உதாரணமாக… கடந்த ஆண்டுக்கான விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவரிடம், ‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவர் என்ற விருதை யாருக்குக் கொடுப்பீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘அதை நானே வாங்கிக்கொள்கிறேன்!’’ என்று புன்னகையுடன் பதிலளித்தவர்.

தமிழகத்தில் பா.ஜ.கவால் காலூன்ற முடியாததற்கு மாநிலத்தலைமை ஒரு காரணமேயில்லை. அது சித்தாந்த ரீதியிலான யுத்தம். பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கும் தமிழர்களுக்கும் தூரம் அதிகம். யார் தலைவராக இருந்தாலும் பா.ஜ.க-வைத் தமிழர்கள் நிராகரிக்கத்தான் செய்வார்கள்.

தமிழிசை காலத்தில்தான் பா.ஜ.க-வின் பெயர் கொஞ்சம் பரவலானது. பெருகிவரும் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் அதற்கு முக்கியமான காரணம். தன் காலத்தில் 44 லட்சம் உறுப்பினர்களைத் தமிழகத்தில் பா.ஜ.க-வில் சேர்த்ததாகச் சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவரைப்போல இணக்கமான இன்முகமுடைய இன்னொரு தலைவர் தமிழக பா.ஜ.க-வுக்குக் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.

அடிப்படையில் தமிழிசை செளந்தரராஜனின் குடும்பம் காங்கிரஸ் பாரம்பர்யமுடையது. அவரின் தந்தை குமரி அனந்தன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். சித்தப்பா வசந்தகுமார் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்தவர். இப்போது எம்.பி-யாகவும் இருக்கிறார். அப்படியொரு குடும்பத்திலிருந்து எதிர்துருவமாகவுள்ள பா.ஜ.க-வில் அவர் எப்படி இணைந்தார், எப்படி இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்தார் என்பதற்கு அவர் பலமுறை விளக்கம் அளித்திருக்கிறார்.

‘‘தஞ்சாவூர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக நான் பணியாற்றிக்கொண்டி ருந்தபோது, மாட்டு வண்டியில்தான் பெரும்பாலான நோயாளிகள் வருவார்கள். இப்படிப் பல விஷயங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியைக்கூட காங்கிரஸ் அரசு செய்யவில்லை. எனவே, வளர்ச்சியை முன்னெடுக்கும் பா.ஜ.க-வில் இணைந்தேன்’’ என்று கூறியிருக்கிறார். இந்த அரசியல் கொள்கை முரண் காரணமாக அவரின் தந்தை, சித்தப்பா ஆகியோரிடமிருந்து விலகியே இருக்கிறார் அவர்.

அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர். அவர் கணவரும் மருத்துவர்தான். மருத்துவத்தில் மக்களுக்குச் சேவை செய்வதைவிட அரசியல் மூலமாக நிறைய சேவை செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைத் தேர்வு செய்ததாகச் சொல்லுவார். சொன்னதைப்போலவே ஏழை எளியவர்களுக்கான பல திட்டங்களை அரசின் கவனத்துக்குப் பரிந்துரைத்து அதை நடைமுறைப்படுத்தவும் வைத்துள்ளார்.

சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் டயாலசிஸ் செய்வதற்குப் பெருந்தொகை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் ஏழை நோயாளிகள் தன் மருத்துவமனையில் டயாலசிஸ் செய்வதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்தபின்பே அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலசிஸ் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள், தமிழிசைக்கு நெருக்க மானவர்கள்.

இப்போதும் சென்னையிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வாரம் ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. சென்னையில் இருந்தால் தமிழிசையே நேரடியாக நோயாளிகளைப் பரிசோதிப்பார். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டு அல்லது மூன்று மருத்துவர்கள் அந்தப் பணியைச் செய்துகொண்டிருப்பார்கள். வாரம் ஒரு முறை இலவச சட்ட உதவி முகாமும் அங்கு நடக்கிறது. இப்படிப் பலவிதங்களிலும் இயங்கிக்கொண்டே யிருப்பார்.

ஒருசில நேரங்களில் வரம்பு மீறி எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கிறார் என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், ஹெச்.ராஜா அளவுக்கு அவர் எல்லை மீறியதில்லை. மேலும் மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கும் அவர்மீது அன்பு உண்டு. ‘ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்புமகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்’ என்ற கி.வீரமணியின் வார்த்தைகள் ஓர் உதாரணம்.

இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் ஓர் அரசியல்வாதியை அதுவும் 58 வயதிலேயே ஆளுநராக நியமித்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. ஆனால் இந்தப் பதவியில் இருந்துகொண்டு அவரால் அரசியல் பேசமுடியாது என்பதுதான் தமிழிசைக்கு இருக்கும் ஒரே வருத்தமாக இருக்கும். ஆனால், தெலங்கானா மாநிலத்தின் தலைவிதியே தன் கையில் என்ற உற்சாகம், அந்த வருத்தத்தை மறக்கச்செய்யும்.

%d bloggers like this: