ஆக்டோபஸ்’ அரசியல்! – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்

கழுகார் உள்ளே நுழைந்ததும், சூடான இஞ்சி டீயும் மொரமொர பிஸ்கட்டும் கொடுத்து உபசரித்தோம். ரசித்துச் சாப்பிட்டு முடித்தவுடன், விறுவிறுவென தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்

‘‘2021-ல் தமிழகத்தில் பி.ஜே.பி ஆளுங்கட்சியாக அமையாவிட்டாலும், பி.ஜே.பி அங்கம்வகிக்கும் ஆட்சியாவது அமையவேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவை டெல்லி பி.ஜே.பி தலைமை எடுத்துள்ளது. இந்த அஜெண்டாவைச் செயல்படுத்தப்போவது தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் அல்ல. பி.ஜே.பி-யின் சூத்திரதாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது என்கின்றனர் அந்தக் கட்சியின் உள்விவரங்களை அறிந்தவர்கள்.’’

‘‘தமிழக பி.ஜே.பி தலைவர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றப்பட்டதற்கு இதுதான் காரணமா?’’

‘‘மாற்றப்பட்டாலும், கௌரவமான பதவிக்குச் சென்று விட்டாரே. ‘தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை, நானே டி.வி-யில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று தமிழிசை சொல்லிவந்தாலும், தமிழக பி.ஜே.பி தலைவர் பதவி போனால் வேறு பதவி வேண்டும் என்று டெல்லி பி.ஜே.பி-யிடம் அழுத்தம் கொடுத்துவந்தார். ஒரு வாரம் முன்பே தெலங்கானா ஆளுநர் ஆகும் தகவல் அவர் காதுக்குச் சென்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள் பி.ஜே.பி வட்டாரத்தில்.’’

‘‘ம்…’’

‘‘தமிழிசை மற்றும் பொன்னார் இருவருக்கும் துணைநிலை ஆளுநர் பதவியைக் கொடுத்து ஆட்டத்தை முடிக்கவே பி.ஜே.பி நினைத்துள்ளது. தமிழகத்தில் நாடார் சமூகத்தினர் மத்தியில் பி.ஜே.பி-க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால், தமிழிசைக்கு இன்னும் உயர்ந்த பதவி தர வேண்டும் என்று ரிப்போர்ட் போகவே, கடைசி நேரத்தில் தமிழிசை பெயர் கவர்னர் பட்டியலுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு, பொன்னாருக்கு ஏக டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். கவர்னர் பதவியை அவர்தான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு துணைநிலை ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.’’

‘‘பி.ஜே.பி-யின் தமிழகத் தலைமைக்கான அறிவிப்பு எப்போது வருமாம்?’’

‘‘இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம். ஆனால், பெரும்பான்மையான ஒரு சமூகத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள். குறிப்பாக, முக்குலத்தோர் சமூகத்தில் நயினார் நாகேந்திரனும் கொங்கு சமூகத்தில் வானதி சீனிவாசனும் தங்களுக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஃபார்முலாவே தமிழக பி.ஜே.பி-க்குத் தெரியாமல் இருக்கிறது. அவர்கள் ஒருவரை பதவியிலிருந்து எடுக்கும் முன்பே, அங்கு யாரை நியமிப்பது என்பதையும் முடிவுசெய்துவிடுவார்கள். அதன்படி,

ஆர்.எஸ்.எஸ் மாநிலப் பொறுப்பாளர் கேசவிநாயகத்திடம் மூன்று பெயர்களைக் கேட்டுள்ளதாகச் சொல்கிறர்கள். அவரிடம் வந்த பட்டியலின்படி குப்புராம், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன் மூவரில் ஒருவருக்குத் தலைவர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள்.’’

‘‘சரி… தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-யை வைத்து பி.ஜே.பி நடத்தப்போகும் அஜெண்டாவைப் பற்றிச் சொல்லுங்கள்!’’

‘‘அதன் பெயர் ‘ஆபரேஷன் டெக்கான்’ என்கிறார்கள். அதாவது, தக்காணப் பீடபூமியைக் குறிவைத்து நடக்கவுள்ள ஆபரேஷன். இதில், தமிழகம்தான் பிரதானம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பட்டைத்தீட்டப்பட்டு, மோடி – அமித் ஷாவிடம் அரசியல் பயின்ற ஒரு டீம் தமிழகத்துக்குள் வந்துள்ளது. அந்தக் குழுவிடம் மாவட்டவாரியாகவும் நகரவாரியாகவும் தமிழகத்தின் வரைபடமும் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. எந்த மாவட்டத்தில் எந்தச் சமூகம், எவ்வளவு உள்ளார்கள், திராவிடக் கட்சிகளின் பலம் என்ன, ஒவ்வொரு கட்சியின் சமூகத்தின் ஓட்டு வங்கி எவ்வளவு என்றெல்லாம் ஆராய்ந்துவருகிறார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இரண்டாம்கட்ட தலைவரான கான்பூரைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த ஆபரேஷனின் தலைவராம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட ஒரு டீம், தமிழகத்தை மண்டல வாரியாகப் பிரித்து பணியில் இறங்கியுள்ளது.’’

‘‘என்ன பணி என்றே சொல்லவில்லையே?’’

‘‘கட்சியை வளர்க்க வேண்டும். அதற்கு வெறும் உறுப்பினர் சேர்க்கை மட்டும் போதாது. மாற்றுக் கட்சித் தலைவர்களையும் ஆக்டோபஸ்கணக்காக வளைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பே, தமிழக பி.ஜே.பி தலைவர்களை வைத்து இதற்கு முன்னோட்டம் பார்த்துள்ளார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர்களின் இழுவைக்கு பிற கட்சியினர் இறங்கி வராததால், நேரடியாக நாக்பூர் தலைமையே இதை கையில் எடுத்துள்ளது.’’

‘‘அப்படியா?’’

‘‘தி.மு.க-வில் இரண்டாம்கட்ட தலைவர்களாக இருந்து இப்போது ஓரங்கட்டப்பட்டவர் களைத்தான் முதலில் குறிவைத்துள்ளனர். குறிப்பாக, பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும், தி.மு.க தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களின் பட்டியலை இந்தக் குழு கையில் எடுத்துள்ளது. யாரை வைத்து அவர்களிடம் பேசினால் வழிக்குக் கொண்டுவர முடியுமோ, அவர்கள் மூலம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர். புறக்கணிப்பட்ட தி.மு.க-வினர்கள் பட்டியலில் வன்னியர் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தினர்தான் முதல் இடத்தில் இருக்கிறார்களாம்.’’

‘‘யாரெல்லாம் பட்டியலில் இருக்கிறார்களாம்?’’

‘‘பொன்.முத்துராமலிங்கம், முல்லைவேந்தன், சுகவனம், பவானி ராஜேந்திரன், கே.எஸ்.ராதா கிருஷ்ணன், கே.பி.ராமலிங்கம், ஏ.ஜி.சம்பத், முத்துசாமி என, பட்டியல் வாசிக்கின்றனர்

பி.ஜே.பி-யினர். இவர்களில் பலர் பி.ஜே.பி தரப்புக்கு இணக்கமாகவே வந்துவிட்டனர் என்கிறார்கள். சிலர் மட்டும், ‘திராவிடச் சித்தாந்தத்தில் ஊறிவிட்டோம். உங்கள் சித்தாந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது கடினம்’ என்று சொல்லியுள்ளனர்.’’

‘‘ஓஹோ!’’

‘‘பி.ஜே.பி தரப்பிலோ, ‘இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருந்தும் உங்களுக்குக் கிடைக்காத மரியாதை, புதிதாக கட்சிக்குள் வருபவர்களுக்குக் கிடைக்கிறது’ என்று அந்தத் தி.மு.க புள்ளிகளை உசுப்பேற்றுவதுடன், ‘மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடும் என்று நீங்கள் அமைதியாக இருக்காதீர்கள். பி.ஜே.பி-யின் அடுத்த இலக்கே தி.மு.க-தான். அமித் ஷா, கண்டிப்பாக தி.மு.க-வுக்கு செக் வைக்காமல் விட மாட்டார்’ என்று எச்சரிக்கையும் விடுக்கின்றனராம். அடுத்த தேர்தலுக்குள் பி.ஜே.பி-யின் நிழல் தமிழகத்தில் இருந்தாக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க-வில் இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு வலைவிரிப்பதுபோலவே, அ.ம.மு.க-வில் இருப்பவர்களையும் வளைக்க, பேச்சுவார்த்தை நடக்கிறது.’’

‘‘அ.தி.மு.க-வினர் யாரையும் இழுக்க வில்லையா?’’

‘‘பி.ஜே.பி-யின் பிளானே அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணியில் ரஜினி இணைய வேண்டும் என்பதுதான். அப்படியிருக்கும்போது அங்கிருந்து ஆட்களை இழுப்பார்களா? இந்த டீமின் ஆலோசனைக்குப் பிறகுதான் தமிழகத் தலைவர் மாற்றம் முதல் அனைத்தும் இருக்கப்போகின்றன என்கிறார்கள். சத்தமில்லாமல் இந்தப் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.’’

‘‘ரஜினி என்ன மனநிலையில் இருக்கிறாராம்?’’

‘‘மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் பி.ஜே.பி-யை எதிர்க்கும் மனநிலையை கைவிட்டுவிட்டார். கடந்த ஐந்தாண்டுகளில் மத்திய உளவுத்துறை மூலம் தனக்கு வந்த அழுத்தம் பற்றியும், தான் மத்திய அரசுக்கு ஆதரவாகச் சொன்ன கருத்துகளுக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது பற்றியும் தனக்கு நெருக்கமான இயக்குநரிடம் மனம்விட்டு பேசியுள்ளார் ரஜினி. இப்போது ‘பி.ஜே.பி தலைவர் ரஜினி’ என்று பரப்பப்படும் செய்தி களுக்குப் பின்னால், மத்திய அரசு இருக்கிறது என்று ரஜினி தரப்பு நினைக்கிறதாம். கட்சி ஆரம்பிப்பதையே ஒத்திப்போடலாமா என்றும் அவர் தரப்பில் யோசித்துள்ளார்கள். ஆனால், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவரை நேரடி அரசியலுக்குள் கொண்டுவந்துவிடும் முடிவில் உறுதியாக இருக்கிறது பி.ஜே.பி தரப்பு. இந்தத் திட்டத்தைத் தெரிந்துதான் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவருகிறாராம் ரஜினி.’’

‘‘ஓஹோ!’’

‘‘ரஜினி எப்படியும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்று உறுதியாக நம்புகிறது பி.ஜே.பி தரப்பு. ஆனால், ரஜினி தலைமையில் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்ளாது என்பதால், அதைச் சரிக்கட்டவும் சில வேலைகள் நடக்கின்றனவாம்.’’

‘‘பி.ஜே.பி-யின் இந்தத் திட்டமெல்லாம் தி.மு.க-வுக்குத் தெரியுமா?’’

‘‘பி.ஜே.பி தரப்பால் தொடர்புகொள்ளப்பட்ட தி.மு.க பிரமுகர்களே, இந்தத் தகவல்களை தலைமையிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். ஆனால், அதைப் பற்றி தி.மு.க தலைமை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லையாம். இதன் வீரியம் இன்னும் சில மாதங்களில் தி.மு.க-வுக்குத் தெரியும் என்கிறார்கள். ஏற்கெனவே தி.மு.க மீதுள்ள வழக்கு விவரங்களை சத்தமில்லாமல் ஆராய்ந்துவருகிறது ஒரு டீம். இனி, மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க அணி திரட்டினால், அந்தக் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தும் வேலைகளும் நடந்துவருகின்றன. ப.சி-யை வைத்து தி.மு.க-வை சிக்கலுக்குள் கொண்டுவர முடியுமா என்றும் யோசித்துவருகின்றனர்.’’

‘‘ப.சி விவகாரம் என்ன நிலையில் உள்ளது?’’

“ஐ.என்.எக்ஸ் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணையில் இருந்த ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ‘சிறையில் அடைக்க வேண்டாம்’ என்ற அவரின் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம், செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து நடத்திவருகிறது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அதற்கு ஜாமீன் தர நீதிமன்றம் முன்னதாகவே மறுப்பு தெரிவித்திருந்தது. சி.பி.ஐ வழக்கில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ‘அமலாக்கத் துறை வழக்கில் சரணடையத் தயார்’ என்று சிதம்பரம் தரப்பு தெரிவித்தது. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. சிதம்பரத்தை ஒரு நாளாவது சிறையில் அடைக்க வேண்டும் என்ற பி.ஜே.பி தரப்பின் எதிர்பார்ப்பு இதன்மூலம் நிறைவேறிவிட்டது’’ என்றபடி சிறகை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: