10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே!

இன்றைய இளம் தலைமுறையினர், பீட்ஸா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். என்றாலும், மற்ற உணவுகளை அவர்கள் தவிர்ப்பதில்லை. ஆனால், இந்த ஏ.ஆர்.எஃப்.ஐ.டி- யால் பாதிக்கப்பட்டால், ஜங்க் ஃபுட்ஸ் தவிர்த்து வேறு உணவுகளை சாப்பிடத் தோன்றாது.

Junk Food

இங்கிலாந்தில், 17 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டுவந்ததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பார்வை பறிபோய், காதுகேளாமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். பிரிஸ்டல் என்.ஹெச்.எஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மருத்துவப் பல்கலையைச் சேர்ந்த டெனிஸ் அதான் என்பவர், சிறுவனின் நிலைகுறித்து `அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’ எனும் பத்திரிகையில் எழுத, பெற்றோர்கள் பலரை அதிரவைத்திருக்கிறது இந்தச் செய்தி.

தொடர்ந்து, இந்தச் செய்தி ‘பிரிஸ்டல் லைவ்’ எனும் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. சிறுவனின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், இந்தப் பிரச்னை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதால், சிறுவனின் பெற்றோரின் அனுமதியோடு இச்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

 

கடந்த 10 ஆண்டுகளாக பீட்ஸா, பர்கர், சிப்ஸ் வகை உணவுகளையே தொடர்ந்து சாப்பிட்டுவந்துள்ளான் அந்தச் சிறுவன். பள்ளியில், தனது மதிய உணவை சாப்பிடாமல் அப்படியே திரும்ப வீட்டுக்கு எடுத்துவருவதும் அவனுக்கு வாடிக்கையாக இருந்துள்ளது. பிறந்ததிலிருந்து ஏழு வயது வரை முறையான உணவுப் பழக்கத்தில்தான் இருந்திருக்கிறான். பிறகு, ஆரோக்கியமான உணவுகளிலிருந்து வெளியேறி, ஜங்க் ஃபுட்ஸ் மட்டுமே சாப்பிடத் தொடங்கியுள்ளான். ஒருகட்டத்தில், அவனுக்கு பழங்கள் மற்றும் பிடிக்காமல் போயிருக்கிறது. இந்த விஷயத்தை மருத்துவர்களிடம் சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.

14 வயதிலேயே சிறுவனுக்கு உடல்நலப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, 17 வயதில் பிரச்னையின் தீவிரம் கூடியிருக்கிறது. அவன், உணவு உட்கொள்வதைத் தவிர்க்கும் `அவாய்டன்ட்ரெஸ்ட்ரிக்டிவ் ஃபுட் இன்டேக் டிஸ்ஆர்டர்(Avoidantrestrictive food intake disorder)’ என்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளான் என்பது தெரியவந்திருக்கிறது. இது, சுருக்கமாக ஏ.ஆர்.எப்.ஐ.டி. (ARFID) என்று அழைக்கப்படுகிறது.

 

இந்தியாவிலும்கூட, சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலர் ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிடும் கலாசாரம் அதிகரித்துவருகிறது. தொடர்ச்சியாக ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டு வந்தால், பார்வைக் கோளாறு, காதுகேளாமை பிரச்னைகள் ஏற்படுமா? ஏ.ஆர்.எப்.ஐ.டி-யை தடுப்பது எப்படி?

பேராசிரியரும் இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணருமான எல்.ஆனந்த்திடம் பேசினோம்.

“ஏ.ஆர்.எப்.ஐ.டி என்பது குறிப்பிட்ட ஒருவகையான டிஸ்ஆர்டர். இது, மிகவும் அரிதாகவே ஏற்படும். இதன் பாதிப்பால்தான் சிறுவன் ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிட்டி ருக்கிறான். மற்ற வகையான பழங்கள், காய்கறிகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த வகையான டிஸ்ஆர்டரால் பாதிக்கப்படுபவர்கள், பெரும்பாலும் குறிப்பிட்ட அமைப்பு, வாசனை, சுவை, தோற்றம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பார்கள். குறிப்பிட்ட சில ஜங்க் ஃபுட்ஸை மட்டும் சாப்பிடுவார்கள்.

தொடர்ந்து ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டதால், சில நுண்ணிய சத்துகள் சிறுவனின் உடலில் சேரவில்லை. இதன் காரணமாக, கண்களுக்கு செல்லக்கூடிய நரம்புகளும் காதுகளுக்குச் செல்லும் நரம்புகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான் சிறுவனுக்கு பார்வை பறிபோய், காதும் கேட்காமல் போயுள்ளது.

நாள்தோறும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சீராக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த டிஸ்ஆர்டர் பாதிப்புள்ளவர்கள், குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் விரும்பி உண்பார்கள். இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காததால் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். முதலில் உடல் எடையை இழப்பார்கள். பிறகு சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடுவோமோ என்கிற பயம் ஏற்படும். அந்தப் பயத்தாலும் சாப்பிடுவதைத் தவிர்க்க ஆரம்பிப்பார்கள்.

இந்த மாதிரியான பிரச்னைகள் உள்ளவர்களை முதலில் அவர்களுக்கு உணவு உண்பதில் பிரச்னைகள் ஏதும் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். உணவுக்குழாய், சிறுகுடலில் ஏதேனும் பிரச்னையா என்பதை கவனிக்க வேண்டும். இரைப்பையில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இரைப்பையில் புண், இரைப்பையில் சுருக்கம் மற்றும் ஒவ்வாமை உள்ளதா போன்றவற்றையும் பரிசோதிப்பது அவசியம்.

மேலே சொன்ன பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, பசியின்மை, குறைவாகச் சாப்பிடுவது, சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு `எண்டோஸ்கோபி’ பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். சோதனையில், குடல் சார்ந்த பிரச்னைகள் ஏதும் இல்லை என்பது உறுதியானால், பின்னர் சம்பந்தப்பட்டவரை மனநல மருத்துவரிடம் அனுப்பி, அவருக்கு `ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். அதேபோல ஓர் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையும் தேவைப்படும்.

 

இயல்பாகவே, சாப்பிடும் பழக்கத்தில் ஆர்வம் குறைந்துபோய், சாப்பிட்டால் வாந்தி வந்துவிடுமோ என்று பயம் கொண்டவர்களாக இருப்பவர்கள், மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். அவர்களுக்கு உணவு உட்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் `சப்போர்ட்டிவ் தெரபி’யும் தேவைப்படும்.

ஏ.ஆர்.எப்.ஐ.டி என்பது குறிப்பிட்ட ஒருவகையான டிஸ்ஆர்டர். இது, மிகவும் அரிதாகவே ஏற்படும். இதன் பாதிப்பால்தான் சிறுவன் ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறான். பழங்கள், காய்கறிகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த வகையான டிஸ்ஆர்டரால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட அமைப்பு, வாசனை, சுவை, தோற்றம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பார்கள்.

இரைப்பைக் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் எல்.ஆனந்த்

பதற்றம், மனஅழுத்தம் இருந்தால் அதற்குரிய சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஊட்டச்சத்து நிபுணரின் உதவியுடன் அவர்களை வெவ்வேறு வகையான உணவுகளை உட்கொள்ளச் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க ஆரம்பிக்கும். சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியும். 

இன்றைய இளம் தலைமுறையினர் பீட்ஸா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸை அதிகமாக விரும்பிச் சாப்பிடுகின்றனர். என்றாலும், மற்ற உணவுகளை அவர்கள் தவிர்ப்பதில்லை. ஆனால், இந்த ஏ.ஆர்.எப்.ஐ.டி-யால் பாதிக்கப்பட்டால், ஜங்க் ஃபுட்ஸ் தவிர்த்து வேறு உணவுகளை சாப்பிடத் தோன்றாது. இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்துகொண்டு, பதற்றமில்லாமல் பிரச்னையை அணுக வேண்டும்” என்கிறார் எல்.ஆனந்த்
%d bloggers like this: