எப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’

புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில் என்ன ஸ்பெஷல்?!

Android 10

பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் ‘வெறித்தன’ ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவின் பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு

வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக ‘ஆண்ட்ராய்டு 10’தான் இந்த வெர்ஷனின் பெயர் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு, செப்டம்பரில் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத்தொடங்கியது. அப்படி ஒரு பிக்ஸல் மொபைலில் ஆண்ட்ராய்டு 10 பயன்படுத்திப் பார்த்ததில், எங்களைக் கவர்ந்த சில வசதிகளை இங்கே விரிவாகக் காண்போம்.

டார்க் தீம்

Dark Theme

மாற்றங்கள் பல இருந்தாலும் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது டார்க் மோடுதான். மக்கள் வெகுகாலமாகக் கேட்டுவரும் இந்த வசதி, நேட்டிவாக ஆண்ட்ராய்டு 10-ல் இருக்கும். இதனால், ஒரு க்ளிக்கில் மொத்த மொபைல் இன்டர்ஃபேஸிலும் கறுப்பு அதிகம் இருக்கும் டார்க் தீமிற்குக் கொண்டுசெல்லும். OLED ஸ்கிரீன்களில் கறுப்பு பிக்ஸல்களை டிஸ்ப்ளே செய்ய, கூடுதல் ஒளி(backlight) தேவையில்லை என்பதால் பேட்டரியை சேமிக்கும். பார்க்க, டார்க் மோடு ஸ்டைலிஷாகவே இருக்கிறது. இது, ஆண்ட்ராய்டு 10-ல் வந்திருக்கும் ஒரு முக்கிய அப்டேட்.

ஸ்மார்ட் ரிப்ளை

Smart Reply

ஜிமெயில் ஆப்பில் மட்டும் இருந்த இந்த வசதி, ஆண்ட்ராய்டு 10-ல் அனைத்து மெசேஜிங் ஆப்களுக்கும் கிடைக்கும். வரும் குறுஞ்செய்திகளை வாசித்து, அதற்குப் பொருத்தமான ரிப்ளை மற்றும் எமோஜிகளை நோட்டிஃபிகேஷன் பாரிலேயே பரிந்துரைக்கும், இந்த வசதி. இத்துடன் வரும் மெசேஜ்களில் வெப் லிங்க், அட்ரஸ் போன்ற விஷயங்கள் இருந்தால், அதை ஓப்பன் செய்யும் ஆப்களையும் இத்துடன் பரிந்துரைக்கும். இந்த வசதி பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

ஜெஸ்சர் நேவிகேஷன்

Gesture Navigation

வீடியோ மற்றும் கேமிங்கிற்கான டிஸ்ப்ளே முடிந்த அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என இன்றைய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் முன், பின் வருவதற்கு பட்டன் வைப்பதெல்லாம் இன்று மிகவும் ஓல்டு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்காக ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் தங்கள் ஓஎஸ்ஸில் விதவிதமான ஜேஸ்சர் வசதிகள் வைத்திருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஆண்ட்ராய்டே இன்பில்ட்டாக இந்த ஜேஸ்சர் நேவிகேஷன் வசதியை ஆண்ட்ராய்டு பை-யில் கொடுத்தது. ஆனால், அதில் சரிவர முன்,பின் செல்ல சிக்கல்கள் இருப்பதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றுக்கு காதுகொடுத்திருக்கும் ஆண்ட்ராய்டு வடிவமைப்புக் குழு, இம்முறை ஐபோன்களில் இருப்பதுபோன்ற ஜெஸ்சர் நேவிகேஷனுடன் களம் கண்டுள்ளன. பீட்டா வெர்ஷன் தொடங்கி அதிகாரபூர்வ வெளியீடு வரை இதில்தான் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு மெருகேற்றும் பணி நடந்தது. இறுதியாக, இப்போது இருக்கும் ஜெஸ்சர் நேவிகேஷன், எங்கள் பயன்பாட்டில் மிகவும் எளிதாகவும் எந்த ஒரு பிரச்னையுமின்றி இருப்பதாகவே தெரிகிறது. பின் செல்ல, வலது அல்லது இடது பக்கத்திலிருந்து ஸ்வைப் செய்ய வேண்டும். இது, சில நேரங்களில் குழப்பம் ஏற்படுத்தலாம் என்பதால், இதன் சென்சிடிவிட்டியை மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

பிரைவசி கன்ட்ரோல்ஸ்

Privacy Controls

டெக் நிறுவனங்களுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலி, பிரைவசி சர்ச்சைகள்தான். பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவில்லை என்று பல நிறுவனங்கள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன, சில நிறுவனங்கள் நீதிமன்றங்களும் ஏறி இறங்கின. இதனால், பிரைவசி பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது. ஆப்களுக்கு தரப்படும் அனுமதிகள் தொடங்கி, அனைத்து பிரைவசி தொடர்பான தகவல் மற்றும் வசதிகளும் இனி செட்டிங்ஸில் Privacy என்ற ஒரே பிரிவின்கீழ் இருக்கும். இது பாமர மக்களும் பிரைவசி சார்ந்த விஷயங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

லொக்கேஷன் செட்டிங்ஸ்

Location Settings

லொக்கேஷன் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதுதான் பிரைவசி பிரச்னைகளில் தலையாய பிரச்னையாக இருக்கிறது. இதற்கும் ஆண்ட்ராய்டு 10-ல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செட்டிங்ஸில் location எனத் தனிப் பிரிவு தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இனி ஆப்களுக்கு லொக்கேஷன் டேட்டா கொடுப்பதிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். அதாவது, இனி மூன்று வகைகளில் ஆப்களுக்கு உங்களால் லொக்கேஷன் டேட்டாவை அனுப்ப முடியும். “Allow all the time” என்று கொடுத்துவிட்டால், உங்களது லொக்கேஷன் தகவலை எப்போது வேண்டுமானாலும் அந்த ஆப்பால் பெற்றுக்கொள்ளமுடியும்.”Allow only while using the app” என்று கொடுத்துவிட்டால், அந்த ஆப்பை பயன்படுத்தும்போது மட்டுமே உங்களது லொக்கேஷன் தகவலைப் பெறமுடியும். “Deny” என்று கொடுத்துவிட்டால், லொக்கேஷன் தகவலைப் பெறவே முடியாது. மேலும், லொக்கேஷன் ஹிஸ்டரி போன்றவற்றை எளிதாக செட்டிங்ஸில் இருக்கும் இந்தப் பிரிவிற்குச் சென்று பார்க்கவும் நீக்கவும் முடியும்.

ஃபோகஸ் மோடு

Focus Mode

பிரைவசிக்கு அடுத்தபடியாக டெக் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தும் ஏரியா, ‘டிஜிட்டல் வெல்பீயிங்’. ஆரோக்கியமான முறையில் மொபைல் பயன்படுத்த உதவும் இது சார்ந்த வசதிகளின் சின்னச் சின்ன மேம்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஃபோகஸ் மோடு என்ற வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன் ப்ளஸில் வரும் ஜென் மோடு வசதியைப் போல இருக்கும் இந்த வசதியைக்கொண்டு கவனம் சிதறவைக்கும் ஆப்களைக் கட்டுப்படுத்த முடியும். ஒரு முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டியதிருக்கும்போதுதான் நம் கவனத்தை சிதறடிக்கும் நோட்டிஃபிகேஷன்கள் ஏதேனும் வரும். இல்லை, நாமே சோஷியல் மீடியா பக்கம் சென்று நேரத்தை வீணடிப்போம். இப்படி நடக்காமல் இருக்க உதவுகிறது இந்த வசதி. இதில் குறிப்பிட்ட ஆப்களை தேர்வு செய்துகொண்டால் அவற்றிலிருந்து நோட்டிஃபிகேஷன்கள் வராது, அவற்றை ஓப்பன் செய்யவும் இயலாது. மீறி செய்யவேண்டுமென்றால், எச்சரிக்கைச் செய்தி உங்களுக்கு காட்டப்படுகிறது. டிஜிட்டல் வெல்பீயிங் பீட்டா டெஸ்டராக இருப்பதால், இதை எங்களால் சோதித்துப்பார்க்க டிந்தது. விரைவில் ஆண்ட்ராய்டு 10 பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் இது வந்துசேரும்.

லைவ் கேப்ஷன்

வீடியோ, ஆடியோ என மொபைலில் ப்ளே ஆகும் அனைத்திற்கும் ஒரே க்ளிக்கில் சப்டைட்டில் கொண்டுவரும் வசதி இது. இணைய சேவை இல்லாமலேயே இது ஆண்ட்ராய்டு 10-ல் வேலை செய்யுமாம். இதனால் முக்கிய நேரங்களில் ஆடியோ இல்லாமல் வீடியோக்கள் பார்ப்பது, கேட்கும் திறனில் பாதிப்பு இருப்பவர்களும் சோஷியல் மீடியா தொடங்கி அனைத்து வீடியோக்களையும் எளிதாக பார்க்க முடிவது என இதில் பலன்கள் ஏராளம். இப்போதைய அப்டேட்டில் இல்லையென்றாலும் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி ஆண்ட்ராய்டு 10-க்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக, மொபைல் பயன்படுத்தும் குழந்தைகளைப் பெற்றோர்கள் எளிதாகக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் Parental கன்ட்ரோல்ஸ் போன்ற மற்ற வசதிகளும் ஆண்ட்ராய்டு-10-ல் இருக்கிறது. Innovation, Privacy, Digital Wellbeing என மூன்றையும் முதன்மையாகக்கொண்டு களமிறங்கியிருக்கிறது, ஆண்ட்ராய்டு 10. இது, மக்களிடம் பத்துக்குப் பத்து வாங்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

%d bloggers like this: