ஈஸ்ட்ரோஜன் என்னும் கேடயம்!

ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வீட்டில் உள்ள அனைவருமே திடகாத்திரமாக இருக்க முடியும். ஒவ்வொருவருக்கும் என்ன உணவு என்று பார்த்து பார்த்து சமைத்து தருவது மட்டும் இல்லாமல், அவர்களின் உடல் நலன் குறித்தும் கவனம் கொள்வாள். இவ்வாறு மற்றவர்களின் நலனை மட்டுமே கவனிக்கும் பெண்களின் முக்கிய அரண் ஈஸ்ட்ரோஜன். இது பெண்களின் கவசமாக செயல்படும் ஹார்மோன்.

‘‘இந்த கவசம் பெண்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுப்பது மட்டும் இல்லாமல் அவர்களை ஆரோக்கியமாக செயல்பட உதவி செய்கிறது. இதனால்தான் அந்த காலத்தில் பெண்களுக்கு மாரடைப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அவர்களின் உடல் நலத்தை பாதிக்கவில்லை.
ஈஸ்ட்ரோஜன் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் உடல் உழைப்பும் அதற்கு ஒரு கைக் கொடுத்து உதவி வந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேலைக்கு பெண்கள் சென்றாலும் அவர்களுக்கு போதிய உடல் உழைப்பு என்பது இல்லை. எல்லாமே இயந்திர மயமாகி விட்டது.
உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளை சரியாக இவர்கள் கடைப்பிடிப்பதில்லை. இதன் காரணமாக பெண்கள் சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக சிறுநீரக பிரச்னை, சர்க்கரை நோய், குழந்தையின்மை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்’’ என்கிறார் மகப்பேறு நிபுணர் ஷீலா நகுசா.
‘‘பெண்களின் உடல் நலனுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தற்போது அவர்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால், பெண்கள் இனிவரும் காலங்களில் தவறாமல் ஹெல்த் செக்கப் செய்து கொள்வதை அவசியமாக கொள்ள வேண்டும். குழந்தையின்மை பிரச்னைக்காக பெண்கள் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
அந்த சிகிச்சையால் அவர்கள் கருத்தரிக்கும்போது சர்க்கரை நோய் உருவாகிறது. அது குழந்தைையயும் பாதிக்கிறது. இதனால் சர்க்கரை நோயின் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகளுடனோ அல்லது உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.
இன்றைய தலைமுறையினர் சாப்பிடும் உணவுகள் தான் இது போன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சரியான ஆரோக்கியமான உணவுகள் உண்ணாத காரணத்தாலும், பூப்பெய்திய பின்னர் மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது ரத்த அளவினை பாதிக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப் போக்கு ஏற்படும், அந்த சமயத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போது தான் இழந்த ரத்தத்தினை அவர்கள் மீட்டு எடுக்க முடியும். சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால் பெண்கள் கருத்தரிக்கும் சமயத்தில் ரத்தசோகை ஏற்படும். இது கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும்’’ என்றவர் கர்ப்பகாலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
‘‘கர்ப்ப காலத்தில் டாக்டர் பரிந்துறைக்கும் அனைத்து நோய் தடுப்பு ஊசிகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பன்றி காய்ச்சல் நோய் கிருமிகள் எளிதில் கர்ப்பிணிகளை தாக்கும் அபாயம் இருப்பதால் அதனைப் போட்டுக்கொள்வது அவசியம். கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தும்மல், சளி போன்றவை வந்தால் எளிதில் குணமாகாது. எனவே அந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
கர்ப்பகாலத்தில் சாதாரண எடையை விட அவர்கள் 10-15 கிலோ அதிகரிக்க வேண்டும். அதற்கு அவர்கள் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்திற்கு பின் பெண்கள் மீண்டும் பழைய எடைக்கே வருவது அவசியம். சிலர் சிசேரியன் செய்த காரணத்தால் தங்களுக்கான வேலைகளைக் கூட சரியாக செய்வதில்லை.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பிரசவத்திற்கு பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். பாலி சிஸ்டிக் பிரச்னை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்னை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்’’ என்றவர் புற்றுநோயின் பாதிப்பு இப்போது பெண்களிடமும் அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.
‘‘பெண்கள் அதிகளவில் மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிறப்பு பரிசோதனைகள் உள்ளன. ஐந்து வருடம் ஒரு முறை இதற்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியம். புற்றுநோயின் பாதிப்பு இருந்தால், ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தலாம்.  இதைத் தொடர்ந்து வருடம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதை 35 வயதிற்கு மேற்பட்டுள்ள எல்லா பெண்களும் கடைப்பிடிக்க வேண்டும். உணவில் உப்பு, காரம் சாப்பிடுவதை குறைத்து காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்வது அவசியம்.
மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு எலும்புகள் தேய்மானம் ஏற்படும். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. காரணம் அந்த சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது முற்றிலும் நின்றுவிடும் என்பதால், இவர்கள் சத்துள்ள ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சில பெண்கள் எப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறுவயதில் இருந்தே சரியாக சாப்பிடாமல் டயட் இருப்பார்கள். இது பிற்காலத்தில் காசநோய் (டிபி) நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை அதிரிக்குமே தவிர, உடல் எடை குறையாது. முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற் பயிற்சி மூலம் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். பாலீஷ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, கொழுப்பு குறைவான உணவுகளை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு சேராமல் பாதுகாக்கலாம். இறைச்சி, உலர்ந்த பருப்பு வகைகள், தானியங்கள், முட்டை, சீஸ், ஆப்பிள், ஆரஞ்சு, பச்சை கீரைகள், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கான ஆரோக்கிய கேடயத்தை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்’’ என்றார் மகப்பேறு நிபுணர் ஷீலா நகுசா.

%d bloggers like this: