கறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி

வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு, வெயிலுக்கு இதமாக ஜில்லென லெமன் ஜூஸ் கொடுத்து உபசரித்தோம். குடித்து முடித்து ஆசுவாசமான கழுகாரிடம், ‘‘தி.மு.க-வில் மீண்டும் சி.பி.ஐ பீதி கிளம்பியுள்ளதுபோல?’’’ என்ற கேள்வியைத் தொடுத்தோம்.

‘‘எனக்குத் தெரிந்து பீதியைக் கிளப்பிவிட்டதே பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்கள்தான் என்கின்றனர். எட்டு ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப்பொறுப்பில் இல்லை. மத்தியில் ஆட்சியில் அங்கம்வகித்தும் ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. இப்போது புதிதாக அவர்கள்மீது எந்தப் புகாருக்கும் முகாந்திரமில்லை. ஆனால், அவர்களை அப்படியே விட்டுவிட பி.ஜே.பி தலைமை விரும்பவில்லை. தி.மு.க புள்ளிகளை வளைக்க முயலும் பி.ஜே.பி பற்றி, ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இதுவும்.’’

‘‘சொல்லும்!’’

‘‘மோடியின் 100 நாள் ஆட்சியில், இந்தியாவில் உள்ள தலைவர்களில் மோடியை அதிகம் விமர்சித்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான். அந்தக் கோபம் அமித் ஷா, மோடி இருவரிடமும் இருக்கிறது. மற்றொருபுறம், தி.மு.க இரண்டாம்கட்ட தலைவர்கள் மூலம் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்றும், தி.மு.க மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் திட்டமிடுகிறார்கள். இந்தத் திட்டத்தையெல்லாம் மத்திய அரசுக்கு வகுத்துக்கொடுப்பது பி.ஜே.பி-க்கு வேண்டிய தமிழக ஆடிட்டர் ஒருவர்தான்.’’

‘‘அப்படியா?’’

‘‘இந்தத் திட்டத்துக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். தி.மு.க தலைமையை டேமேஜ் செய்தால் மட்டுமே, அடுத்த தேர்தலில் அவர்களின் வெற்றியைத் தடுக்க முடியும். இரண்டாவது, ரஜினி–பி.ஜே.பி கூட்டணி அமைந்தால், அதற்குப் போட்டியான வலுவான கட்சியாக தி.மு.க இருந்துவிடக் கூடாது என முடிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க மீது ஏற்கெனவே சி.பி.ஐ வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, 2ஜி வழக்கு இப்போது மேல்நீதிமன்ற முறையீட்டில் உள்ளது. அந்த வழக்கில் ஏதும் சிக்கலை ஏற்படுத்த முடியுமா என ஆராய்ந்து வருகிறார்கள். இது தெரிந்து தி.மு.க தலைமையும் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறது.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதுமட்டுமல்ல… தி.மு.க தலைவர்களின் வாரிசுகள் குறித்த சில விவரங்களையும் ஒரு டீம் தயார் செய்துவருகிறது. தி.மு.க மீது பிஜே.பி எந்த அளவுக்கு கண்வைத்துள்ளதோ, அதே அளவுக்கு அ.தி.மு.க-வையும் கண்காணித்துவருகிறது. குறிப்பாக, எடப்பாடியின் சமீபத்திய நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.’’

‘‘என்ன நடவடிக்கைகள்?’’

‘‘சசிகலா தரப்புடன் அவர் காட்டும் நெருக்கம், கட்சியின் ஒற்றைத்தலைமையாக அவர் மாற விரும்புவது போன்றவற்றையை பி.ஜே.பி தரப்பு ரசிக்கவில்லை. ‘அ.தி.மு.க-வின் வாக்குவங்கி சரியும்போது, அது தங்களுக்குச் சாதகமாக மாறவேண்டும். ஆனால் மீண்டும் சசிகலா, ஒற்றைத்தலைமை என்று அ.தி.மு.க வலுவாகி விட்டால், தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு குதிரைகளே தேர்தல் பந்தயத்தில் ஓடும் நிலை ஏற்படும். அதை மாற்றவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையில் இருந்த போட்டியை பி.ஜே.பி – திரிணாமூல் காங்கிரஸ் போட்டி என மாற்றியதைப்போல, தமிழகத்தில் திராவிடம் – தேசியம் என்கிற பதத்தோடு தி.மு.க – பி.ஜே.பி என்று எதிர்காலம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பி.ஜே.பி-யின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் மேற்பார்வையில்தான் இந்தத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.’’

‘‘ம்!’’

‘‘அவர், அ.தி.மு.க மீது மத்திய அரசு சில தாக்குதல்களைத் தொடுத்து அந்தக் கட்சியை வீக் செய்துவிட வேண்டும். பன்னீரை தங்கள் பக்கம் கொண்டுவந்து பி.ஜே.பி தலைமையில் ஓர் அணியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அமைத்துவிட வேண்டும் என நினைக்கிறாராம். இந்தக் கணக்கு எந்தளவுக்கு வொர்க்-அவுட்டாகும் எனத் தெரியவில்லை.’’

‘‘தி.மு.க-வுக்குள்ளேயே கலகம் களைகட்டியிருக் கிறதாமே… கனிமொழி ரொம்பவே கவலையில் இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

‘‘உண்மைதான்… அவரைப் புறக்கணிப்பது ரொம்பவே பகிரங்கமாக நடக்கிறது. கருணாநிதி மறைந்த முதலாமாண்டு தினத்தில் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த நடந்த ஊர்வலத்தில் ஸ்டாலினுக்கு அருகில் கனிமொழி செல்ல முயன்றபோதே, மருத்துவர் அணி பெண் பிரமுகர் ஒருவர் உள்ளே புகுந்து கனிமொழியைத் தள்ளிவிட்டு ஸ்டாலினுக்கு இணையாக நடந்துபோயிருக்கிறார். அதை ஸ்டாலின் கண்டுகொள்ளவேயில்லை. இதேபோல்தான் எல்லா விவகாரங்களிலும் அவர் புறக்கணிக்கப் படுகிறார், ஸ்டாலின் கண்டுகொள்வ தில்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.’’

‘‘இதுதான் ஏற்கெனவே தெரியுமே!’’

‘‘அடுத்ததைக் கேளும்… நினைவஞ்சலிக் கூட்டத்திலும் கனிமொழியை மேடையேற்ற வில்லை. மேடையில் வீற்றிருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நினைவுப்பரிசாக கனிமொழிக்கு சேலை ஒன்றை வழங்க முன்வந்தார். மேடையில் தேடிப்பார்த்தார், காணவில்லை. பார்வையாளர்கள் வரிசையிலிருந்து அதை வந்து வாங்கினார் கனிமொழி. அப்போதே ‘அவரும் தலைவரின் மகள்தானே… அவருக்கு மேடையில் இடம் தரக் கூடாதா?’ என்று கட்சியின் சீனியர்களே முணுமுணுத்தனர்.’’

‘‘அதுவும் தெரியுமே!’’

‘‘முக்கியமான விஷயத்தைக் கேளும்… மோடி அரசு மீண்டும் பதவியேற்று 100 நாள்கள் ஓடிவிட்டன. இன்னும் துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் எம்.பி-க்கள் அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு இல்லாததால், யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பதவியை பி.ஜே.பி தரலாம். அந்த வகையில் துணை சபாநாயகர் பதவியை கனிமொழிக்குத் தர வேண்டுமென்று நினைக்கிறது பி.ஜே.பி தலைமை. ஆனால், முடிவெடுக்காமல் தி.மு.க மௌனம் காக்கிறது. தலைமை கண் அசைத்தால், கனிமொழிக்கு அந்தப் பதவி கிடைக்கும். ஆனால் தலைமை, கண் மூடிக்கொண்டிருக்கிறது.’’

‘‘கனிமொழி எதிர்பார்க்கிறாரா?’’

‘‘அது தெரியவில்லை… ஆனால், ஏற்கெனவே எம்.பி-க்களுக்கான கமிட்டி உறுப்பினர் பதவி நியமன விஷயத்தில் கனிமொழியை தி.மு.க தலைமை கலந்தாலோசிக்கவில்லை என்கின்றனர். கட்சியின் நாடாளுமன்ற எம்.பி-க்கள் குழுத் தலைவராக கனிமொழி நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. அங்கேயும் துணைத்தலைவர் பதவிதான் கிடைத்தது.’’

‘‘வேலூர் பிரசாரத்துக்கும் அவர் வரவில்லையே?’’

‘‘வரவிடவில்லை. அறிவாலயத்தில் உள்ள சிலர்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள். வெற்றியில் பங்குக்கு வந்துவிடுவார் என்ற ஒரே காரணத்துக்காக ஓரங்கட்டினார்களாம். தொகுதியைத் தவிர வேறெங்கும் போகவேண்டாம் என்று அவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக் கிறதாம். அதேபோல கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் கனிமொழியைக் கூப்பிடக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு ரகசிய உத்தரவே போயிருக்கிறதாம். அதனால் கொதித்துப்போன கனிமொழி ஆதரவாளர்கள், ‘வேண்டுமானால் வெளிப்படையாகத் தடை போடட்டும். அதுவரை நீங்கள் போங்கள்!’ என்று கனிமொழியை உசுப்பேற்றிவருகிறார்கள். அவர்தான் பொறுமை காக்கிறார். அதேசமயம், தன் எதிர்காலத்தை நினைத்து பெரும்கவலையில் இருக்கிறார்.’’

‘‘இதெல்லாம் எதில் போய் முடியும்?’’

‘‘நிச்சயமாக பிரச்னை வரும். சமீபத்தில் கட்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பதவி தரப்பட்டிருக்கிறது; முரசொலியில் முக்கியத்துவம் தரப்படுகிறது; அவரை அழைத்துக் கூட்டம் நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போயிருக்கிறது. இதனால், உதயநிதி ஸ்டாலின் பெரும்உற்சாகத்தில் இருக்கிறார். இதுவே கனிமொழி தரப்புக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தான் பயன்படுத்தப் பார்க்கிறது பி.ஜே.பி தலைமை. அவர்களுடைய திட்டத்துக்கு இசைந்துபோனால் துணை சபாநாயகர் பதவி தரப்படும். இல்லாவிட்டால், பழைய வழக்குகளைத் தூசித்தட்டுவார்கள். இந்த மிரட்டலைவைத்தே தி.மு.க-வுக்குள் கலகத்தை ஏற்படுத்துவதுதான் பி.ஜே.பி-யின் திட்டம் என்கிறார்கள்.’’

‘‘அமெரிக்கன் ரிட்டர்ன் சி.எம்-க்கு சிறப்பான வரவேற்பு கொடுத்திருக்கிறார்களே?’’

‘‘ஆமாம். உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் எடப்பாடி. கோட்-சூட் போட்டோக்கள், முதலீட்டு ஒப்பந்தங்கள் என அவருடைய ‘கிராஃப்’ எகிறிக்கொண்டுபோகிறது. தனிப்பெரும் தலைவனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அவருடைய முதல் வெற்றி என்று இந்தப் பயணத்தைச் சொல்கிறார்கள்.’’

‘‘அவருடைய அடுத்த மூவ்?’’

‘‘அமைச்சரவை மாற்றமாக இருக்கலாம் என்று கோட்டை வட்டாரங்கள் சொல்கின்றன. மணிகண்டன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் கவனித்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன. அந்தப் பொறுப்புகளை மூவருக்குப் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறாராம் எடப்பாடி. தூத்துக்குடி எஸ்.பி.சண்முகநாதன், ராதாபுரம் இன்பதுரை ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.’’

‘‘ஓ… அடுத்த தமிழக பி.ஜே.பி தலைவர் யாரென்று முடிவாகிவிட்டதா?’’

‘‘அங்கேயும் கடும் போட்டிதான். 35 வயதுக்கு கீழான இளைஞர்கள், மாற்றுக் கட்சியிலிருந்து பி.ஜே.பி-க்கு வந்து துடிப்பாகச் செயல்படுபவர்கள், அறிமுகம் இல்லாத புதியவர்கள் என மூன்று வகையாக பட்டியல் தயாரிக்கப்பட்டு, அமித் ஷா வசமுள்ளதாம். கொங்கு மண்டலம், தென் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய பெருந்தலைகள் இருவர் தலைவர் பதவிக்கு முட்டிமோதியுள்ளனர். ஆனால், ‘கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும், பழைய ஆட்கள் வேண்டாம்’ என டெல்லி மேலிடம் திருப்பி அனுப்பிவிட்டதாம்’’ என்ற கழுகார், சிறகுகளை விரித்து மறைந்தார்.

%d bloggers like this: