தனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்!

உண்மைதான். வி.ஐ.பி- களுக்கு ஒதுக்கப்படும் அறையில் தான் சிதம்பரம் இருக்கிறார். ஆனால், மனரீதியாக மிகவும் உடைந்து போயிருக்கிறாராம்.

லுவலகத்துக்குள் கழுகார் நுழைந்ததும் சூடாக சுக்கு காபி கொடுத்து உபசரித்தோம். குடித்து முடித்ததும், ‘‘திகார் சிறையிலி ருக்கும் சிதம்பரத்துக்குச் சிக்கல்கள் அதிகரித் துள்ளதாமே?’’ என்ற கேள்வியை வீசினோம்.

 

‘‘உண்மைதான். வி.ஐ.பி- களுக்கு ஒதுக்கப்படும் அறையில் தான் சிதம்பரம் இருக்கிறார். ஆனால், மனரீதியாக மிகவும் உடைந்து போயிருக்கிறாராம். வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதி இருந்தாலும், அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, சிறை உணவையே உட்கொள் கிறாராம். ‘74 வயதாகும் சிதம்பரத்துக்கு ஒன்பது வகையான நோய்கள் இருக்கின்றன. எனவே, அவரின் வயதையும் நோயையும் கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘ஒருவேளை நீதிமன்றம் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினாலும், அடுத்தகட்டமாக அவரை விசாரணைக்கு அழைக்க அமலாக்கப் பிரிவு தயாராக இருக்கிறது. அமலாக்கத்துறையிடம் சரணடைய சிதம்பரமும் தயாராகவே இருக்கிறார். அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தால், பகல் நேரம் அமலாக்கப் பிரிவின் அலுவலகத்தில் விசாரணை நடக்கும்; இரவில் லோதி கார்டன் காவல்நிலையத்தில் உள்ள செல்லில் சிதம்பரம் அடைக்கப்படுவார். சிறையில் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தான் நன்றாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு மனரீதியாகவே அவர் உடைந்துபோய்விட்டார்.’’

‘‘வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு வந்த கையோடு முதல்வரின் அடுத்தப் பயணம் தயாராகிவிட்டது போலிருக்கிறது?’’

‘‘வெளிநாட்டுப் பயணமே இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. குறிப்பாக, 13 நாள் சுற்றுப்பயணத்தின் முடிவில், எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு ஒப்பந்தங்களைப் பெற்றுவந்துள்ளதாக எடப்பாடி கூறியிருந்தார். தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த முதலீடே முழுவதும் வந்துசேரவில்லை. இதில் எட்டாயிரம் கோடி எங்கிருந்து வரப்போகிறது என்று கமென்ட் அடிக்கிறார்கள் தி.மு.க-வினர். எடப்பாடியின் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கப்போகிறது தி.மு.க என்று நான் முன்பே சொல்லியிருந்தேன். அதன்படி ஸ்டாலின் ‘வெள்ளையறிக்கை வேண்டும்’ என்று கேட்டும்விட்டார்.’’

‘‘ம்!’’

‘‘ஆனால், எதற்கும் அசராத எடப்பாடி, அடுத்த டூர் பிளானைத் தயார் செய்துவிட்டார். சொட்டுநீர் பாசனத்தில் கொடிகட்டிப் பறக்கும் இஸ்ரேல் நாட்டுக்குப் பயணப்படப் போகிறார். நீர் மேலாண்மை பற்றி இந்தப் பயணத்தில் விரிவாக ஆலோசனை நடக்கும் என்கிறார்கள்.’’

‘‘வேறென்ன விசேஷம்?’’

‘‘வெளிநாட்டிலிருந்து வந்த தனக்கு, அந்த இரவு நேரத்திலும் சிறப்பான வரவேற்பு கிடைத்ததில், எடப்பாடிக்கு ஏக மகிழ்ச்சி. ஆனால், இப்போது அவரிடம் மூத்த அமைச்சர்கள்கூட எளிதாக நெருங்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள். மேலும் ‘சிலரின் கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி சென்றுவிட்டார்; அவர்களின் மாய வலையில் சிக்கிவிட்டார்’ என்று புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. எடப்பாடிக்கு வலது கரமாக இருந்த சேலத்து பிரமுகரே இப்போது, ‘எடப்பாடி என்னைத் தள்ளி வைத்துவிட்டார்’ என்று புலம்புகிறாராம்.’’

‘‘தி.மு.க-வில் என்ன நடக்கிறது?’’

‘‘பி.ஜே.பி தரப்பு தி.மு.க மீது கடும் வருத்தத்தில் இருப்பதைக் கண்டு அதைச் சரிகட்ட முயற்சி செய்ததாம் சபரீசன் தரப்பு. தமிழக ஆளும் புள்ளிகளுக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரைச் சமீபத்தில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாம் சபரீசன் தரப்பு. ஆனால், ‘தமிழ்நாட்டு விவகாரத்தில் இப்போது நான் அதிகம் தலையிடுவதில்லை’ என்று அவர் சொல்ல, ‘ப்யூஸ்’ போன பல்பாக அடுத்து பெண் மத்திய அமைச்சர் ஒருவரைத் தொடர்புகொண்டுள்ளதாம் சபரீசன் தரப்பு. அவரும் பிடி கொடுக்கவில்லையாம். இந்த டென்ஷனில் வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாராம் சபரீசன். அவர் திரும்பி வந்த பிறகே அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கவுள்ளது தி.மு.க தலைமை.’’

‘‘என்ன ஆலோசனையாம்?’’

‘‘கனிமொழி தரப்புக்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து ஏதும் அழுத்தம் வருகிறதோ என்கிற சந்தேகம் ஸ்டாலின் தரப்புக்கு இருக்கிறதாம். ‘கறுப்பு சிவப்பு கழகம்’ என்ற அட்டைப்படக் கட்டுரையுடன் கடந்த ஜூ.வி இதழ் வெளியான அன்று, கனிமொழியும் ஸ்டாலினும் சிவகாசிக்குத் திருமணம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். திருமண மண்டபத்தில் வைத்தே கனிமொழியிடம் கடுகடுவென பேசினாராம் ஸ்டாலின். ‘எதற்காக என்மீது அண்ணன் இத்தனை கோபமாக இருக்கிறார்? நான் என்ன கட்சிக்கு எதிராகவா செயல்படுகிறேன்? அவருக்குக் கட்டுப்பட்டுதானே இருக்கிறேன்’ என்று தனக்கு நெருக்கமான ஒரு பெண் நிர்வாகியிடம் கனிமொழி புலம்பினாராம்.’’

‘‘ம.தி.மு.க சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொள்ளப் போகிறாரா?’’

‘‘ம.தி.மு.க நடத்தும் அண்ணா பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். வைகோவை தி.மு.க-விலிருந்து நீக்கியதற்காகத் தீக்குளித்து உயிரிழந்த ஆறு பேரின் உருவப்படங்களும் மேடையில் திறக்கப்பட உள்ளன. ‘ஸ்டாலினின் வளர்ச்சிக்காகத்தான் வைகோவைக் கட்சியைவிட்டு நீக்கினார்கள். அதனால்தான், இந்த ஆறு பேர் தீக்குளித்து உயிர் துறந்தனர். இப்போது ஸ்டாலினையே மேடையேற்றி, ஆறு பேரின் உயிர்த் தியாகத்தை அர்த்தம் இல்லாமல் செய்யப் பார்க்கிறார் வைகோ’ என்று புகைச்சல் எழுந்துள்ளது.’’

‘‘சரிதான்!’’

‘‘வேலூர் எம்.பி-யாகியுள்ள கதிர் ஆனந்த், தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கான நாடாளு மன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன் மகனை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று துரைமுருகனே அனைத்து எம்.பி-க்களையும் போனில் அழைத்துப் பேசியுள்ளார். இதில் டி.ஆர்.பாலுவுக் குக் கடும் வருத்தமாம். ‘நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் இருக்கிறேன், கட்சியின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இவர் யாரிடமும் கேட்காமல் முடிவு செய் கிறாரே!’’ என்று டென்ஷனாகி விட்டாராம். சமீப காலமாகவே துரைமுருகன் தன்னிச்சை யாகச் செயல்படுகிறார் என்று தலைமை யிடம் பற்றவைத்தும் உள்ளதாம் ஒரு டீம்’’ என்ற கழுகார், ‘‘ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவும் இந்தச் சமயத்தில், டொயோட்டா கார்களின் முக்கிய டீலரான, லான்சன் டொயோட்டா நிறுவனத்தின் இணைத்தலைவர் ரீட்டா ஜானகி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொழில்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தொழில் பிரச்னையோடு குடும்பப் பிரச்னையும் சேர்ந்து கொண்டதுதான் தற்கொலைக்குக் காரணம் என்று காவல்துறை வட்டாரத் தில் சொல்கின்றனர்’’ என்றபடி சிறகை விரித்தார்.

%d bloggers like this: