என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

கடலை எண்ணெயில் கடலையையே காணோம்… நல்லெண்ணெயில் எள்ளையே காணோம்!
எண்ணெய்
எண்ணெய்

தேவை அதிக கவனம்
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

கலப்படம் இல்லாத உணவுப் பொருள்களே இல்லை என்பதுதான் இன்றைய நிலை. குறிப்பாக, எண்ணெய். சமீபத்தில் மதுரை கீழமாசிவீதி மார்க்கெட்டிலுள்ள 23 கடைகளில் நல்லெண்ணெய், கடலெண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்தனர் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள். அந்த 63 மாதிரிகளை சென்னையிலுள்ள அரசு ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததில், 61-ல் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 23 கடைகளில் ஒரேயொரு கடைக்காரர் மட்டுமே கலப்படம் இல்லாத எண்ணெயை விற்றுள்ளார்.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

இதோடு, சமீபத்தில் கோவையில் கலப்பட எண்ணெய் தயாரிக்கும் ஆலையைக் கண்டு பிடித்தார்கள். இப்படிச் செய்திகளில் வந்த மதுரை, கோவையில் மட்டுமல்ல… தமிழகம் முழுக்கவே கலப்பட எண்ணெய்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘`தமிழகத்தில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் எண்ணெய் முதல் லோக்கல் எண்ணெய்வரை பலவற்றிலும் கலப்படம் உள்ளது. அண்மைக்காலமாகப் பிரபலமாகிவரும் செக்கு எண்ணெயிலும் கலப்படம் செய்கிறார்கள்’’ என்று அதிர்ச்சித் தகவலோடு ஆரம்பிக்கிறார் உணவுப்பொருள் விற்பனை பிரதிநிதி ஒருவர்.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

“மலேசியா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பாமாயிலை இறக்குமதி செய்து, சமையல் எண்ணெய்களுடன் கலந்து விற்கின்றன. நுகர்வோர் வேண்டுமானால் குறிப்பிட்ட பிராண்டு பெயரைச்சொல்லி கடைகளில் கேட்டு வாங்கலாம். ஆனால், எல்லா பிராண்டுகளும் ஒரே மாதிரியானவைதாம். நிறத்தைக் கொஞ்சம் மாற்றிவிடுவார்கள் அவ்வளவுதான்.

நம்மூரிலுள்ள ஆயில் மில்களிலும் தரமான முறையிலோ, வேதிப்பொருள் கலக்காமலோ எண்ணெய் உற்பத்தி செய்யப் படுவதில்லை. அதிக லாபநோக்கில்தான் தயார் செய்கிறார்கள். குறிப்பாக நல்லெண்ணெய் தயார் செய்யும்போது எள்ளுடன் கருப்பட்டியைக் கலக்க வேண்டும். கருப்பட்டி விலை அதிகம் என்பதால் மொலாசஸ்ஸையும் சில ரசாயனப் பொருள்களையும் கலந்தே தயாரிக்கிறார்கள். எல்லா ஆயில் மில்களிலும் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நின்று கண்காணிக்க முடியாது. எண்ணெய் நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளுக்குத்தான் மனசாட்சி வேண்டும்’’ என்கிறார் அவர்.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

சமீபத்தில் ஆய்வு நடத்தி கலப்படத்தைக் கண்டுபிடித்த மதுரை உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் பேசினோம். ‘`எண்ணெய்க் கடைகளில் சோதனை செய்து மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியதில் 98% அளவுக்குக் கலப்பட எண்ணெயையே விற்பனை செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. பாமாயில் லிட்டர் 25 ரூபாய். அதை கடலை எண்ணெய், நல்லெண்ணெயுடன் கலந்து, மூன்று, நான்கு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பாக்கெட்டுகளில் அடைத்துவரும் பிரபல நிறுவனங்களின் எண்ணெய்களும் அப்படித்தான் உள்ளன. இது நம்பிக்கைத் துரோகம். காலம்காலமாக தங்கள் கடையில் பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களைக் கூடுதல் லாபத்துக்காக ஏமாற்றுகிறார்கள். பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், மரச்செக்கு எண்ணெய் என்று விளம்பரப்படுத்துபவர்கள் எனப் பலரும் இதில் விதிவிலக்கல்ல.

மதுரையில் ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் வாங்கும் சமையல் எண்ணெயின் தரம் பற்றி அறிவதுடன், எண்ணெய் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களையும் கவனிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுவதோ வேறுவிதமாக இருக்கிறது. “எண்ணெயில் கலப்படம் செய்கிறார்கள் என்று கூறுவது தவறு. தரத்தைக் குறைக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். கலப்படம் என்றால், அரசு அனுமதிக்காத, இறக்குமதி செய்ய தடை விதித்திருக்கிற, உடலுக்குக் கேடு விளைவிக்கிற பொருள்களை கலந்து விற்பனை செய்வது. ஆனால், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெயுடன் கடலை எண்ணெய், நல்லெண்ணெயைக் கலந்து விற்பதையும், அதன் விவரத்தை லேபிளில் தெரியப்படுத்துவதையும் எப்படி கலப்படம் என்று சொல்ல முடியும்? பிரபல நிறுவன காபியில் `70 சதவிகிதம் காபி, 30 சதவிகிதம் சிக்கரி’ என்று கலந்துதான் விற்பனை செய்கிறார்கள். ‘சிக்கரியின் படத்தையும் பாக்கெட்டில் அச்சிட வேண்டும்’ என்று தொடரப்பட்ட வழக்கில், ‘அது தேவையில்லை; அதை பாக்கெட்டில் எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ என்று அவ்வழக்கு தள்ளுபடியானது. அதுபோலதான் சமையல் எண்ணெயில் பாமாயில், சோயா போன்ற எண்ணெய்கள் குறிப்பிட்ட அளவு கலக்கப்படுகின்றன.

சமையல் எண்ணெயை அனைத்துப் பொருளாதார நிலையில் உள்ள மக்களும் வாங்கும் வகையில், குறிப்பிட்ட எண்ணெயுடன் பாமாயில் அல்லது சோயா எண்ணெய் கலக்கப்பட்டு, அதற்கேற்ற விலையில் விற்கப்படுகிறது. பாமாயில் என்பது மக்கள் உட்கொள்ளக்கூடாத எண்ணெய் என்று யாராவது சொல்வார்களா? அரசே பொது விநியோகத் திட்டத்தில் அதைத்தானே விற்பனை செய்கிறது.

நம் நாட்டை பொறுத்தவரையில் பாமாயில் இல்லாமல் சமையல் எண்ணெயை விற்பனை செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம். காரணம்… நம் நாட்டில் எள், நிலக்கடலை போன்றவற்றின் விவசாய உற்பத்தி குறைந்து சூடான், எத்தியோப்பியா போன்ற நாடுகளிலிருந்தே அவற்றை இறக்குமதி செய்கிறோம்.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற சமையல் எண்ணெயில் 2 சதவிகிதம் ஆலிவ் எண்ணெய், 2 சதவிகிதம் சோயா எண்ணெய்… மற்ற அனைத்தும் பாமாயில்தான். இதற்காக அரசுக்கு ஆண்டுதோறும் 30,000 கோடி ரூபாய் வரி செலுத்துறோம். பாமாயில் இறக்குமதி இல்லையென்றால் நம் நாட்டில் சாதாரண மக்கள் எண்ணெய்க்கான விலையைக்கொடுத்து வாங்க முடியாது. காரணம், ஒரு லிட்டர் எண்ணெய் விலை ஆயிரத்தைத் தாண்டிவிடும்.

‘உணவுக்கலப்பட தடை சட்டம்-1957’க்கு மாற்றாக, 2011-ல் உணவுப் பாதுகாப்புத் தரச் சட்டம் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டது. இதில் கலப்படம் எனக் குறிப்பிடாமல், பாதுகாப்பற்ற, தரமற்ற உணவுப்பொருள்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படியே உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்கிறார்கள். ‘அக்மார்க்’ லைசென்ஸ் வாங்கிய சில எண்ணெய்த் தயாரிப்பாளர்கள், குறிப்பிட்ட அளவை மீறி கட்டுப்பாடில்லாமல் எண்ணெய் வகையுடன் பாமாயிலைக் கலப்பதைத்தான் இவர்கள் ஆய்வுசெய்து கண்டறிந்திருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன், இது கலப்படம் அல்ல; தரக்குறைவு. ‘கலப்பட எண்ணெயைப் பிடித்தோம்’ என்று அதிகாரிகள் சொல்வது ஒட்டுமொத்த எண்ணெய் வியாபாரத்திலும் தொய்வை ஏற்படுத்திவிடும்.

இன்று மார்க்கெட்டில் பிராண்டு எண்ணெய் வகைகள் விற்கும் விலைக்கு எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்த முடியாது. அவை லிட்டர் 150 முதல் 200 ரூபாய் வரை விற்கின்றன. அதே நேரம் பாமாயில் கலந்த எண்ணெய் 100 ரூபாய்க்குள் கிடைக்கிறது. 100 கிலோ எள்ளுடன் 20 கிலோ மொலாசஸ் கலந்து ஆட்டினால் 35 கிலோ நல்லெண்ணெய் கிடைக்கும். எள்ளுப் பிண்ணாக்கு கிலோ 20 ரூபாய்க்கு போகும். இதுபோலத்தான் கடலை எண்ணெய் தயாரிப்பும். `எடிபில் வெஜிடபிள் ஆயில்’ என்றுதான் விற்பனை செய்கிறார்கள். இதில் உடல்நலத்துக்கு எந்தக் கேடும் இல்லை’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
என்னதான் இருக்கிறது நீங்கள் வாங்கும் எண்ணெயில்?

சமையல் எண்ணெயில் கலப்பதாகச் சொல்லப்படும் பாமாயில், சோயா எண்ணெயின் தன்மை என்ன? அவற்றால் ஆரோக்கியத்துக்குக் கேடு ஏற்படுமா? மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை பொது மருத்துவ ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

‘`உணவை ருசியாகச் சாப்பிட எண்ணெயை சேர்த்துக்கொள்ள மக்களிடம் தொடங்கிய பழக்கம் ஓர் அளவோடு நின்றிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அளவுக்கு மீறும்போது அமிர்தமும் நஞ்சாகிவிடுகிறது. நம் உடலுக்கு எண்ணெய் அவசியம்தான். மூளை, நரம்புகளுக்கு தேங்காய், நெய், எண்ணெய்கள் மூலம் கிடைக்கும் நல்ல கொழுப்பு தேவையாக உள்ளது. ஆனால், அது ஓர் அளவுக்குத்தான், எண்ணெயில் கலப்படம் செய்யும் போது நல்ல கொழுப்பு கிடைக்காது. கலப்பட எண்ணெயைத் தொடர்ந்து உட்கொண்டால் அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் முதலில் வாந்தி ஏற்படும். பிறகு வயிற்றில் வலி ஏற்பட்டு ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும். பேதியாகும். உடலின் முக்கிய உறுப்பான கணையம் மிகவும் பாதிக்கப்படும். கலப்படமில்லாத சுத்தமான எண்ணெயையே அதிகம் உபயோகித்தால் உடலுக்குக் கேடு உண்டாக்கும் என்று சொல்கிறோம். எனில், கலப்பட எண்ணெயால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

எண்ணெயின் தரத்தைச் சோதிக்க ஒரு வழியைப் பின்பற்றலாம். நார்மல் டெம்ப்ரேச்சரில் எண்ணெய் உறையக் கூடாது. அப்படி உறைகிற எண்ணெய் உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும்.

சமையலுக்கு ஒரே எண்ணெயைப் பயன்படுத்தாமல், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். அதே நேரம், எண்ணெயை அளவோடு உபயோகிக்க வேண்டியதும் மிக அவசியம்’’ என்றார் மருத்துவர் பி.கிருஷ்ணமூர்த்தி.

%d bloggers like this: