ஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு

அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தான் அரசின் பயன்கள் அனைத்தும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. எனவே 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு மிகப்பெரிய பணியாக இருக்கப்போகிறது.

2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பானது காகித முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்.

140 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு நடைபெறவுள்ளது இதுவே முதன்முறையாகும். ஒவ்வொருவரின் மொபைல் உதவியுடன் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு தனிநபரின் பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும்.

அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவைப்படுகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை மூலம் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

%d bloggers like this: