பிறரை எளிதில் கவர்வது எப்படி? உளவியல் ரகசியங்கள்!

பல சமயங்களில் நாம் என்ன பேசுகிறோம் என்பதையோ, எதற்காக இவரை சந்திக்கிறோம் என்பதையோ மறந்து விட்டு, சிரித்து பேசி விடைபெற்று, வீட்டிற்கு வந்ததும் சென்ற வேலை முடியவில்லையே

என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். நம்முடைய உடல் மொழி உட்பட நாம் எதிரில் இருப்பவர்களிடத்தில் நமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறரை எளிதில் கவர்வதற்கான சில சைக்காலஜிக்கல் டிப்ஸ்களை வாசகர்களுக்காக இங்கே பகிர்ந்திருக்கிறோம். இந்த சைக்காலஜிக்கல் விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது, எந்தவொரு சூழலிலும் ஒருவரை பற்றி அறிந்து நடந்துக் கொள்வதற்கு பயன்படும்!

யாரை சந்தித்தாலும், யாருடனும் பேசும் போது எதிரில் இருப்பவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுங்கள்.

நம்மைப் பார்த்தவுடன், எளிதல் புன்னகைப்பவர்களை கூட நாம் எளிதில் நம்பி விடலாம். ஆனால் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பவர்களை அத்தனை எளிதில் நம்பி செயலில் இறங்காதீர்கள் என்கிறது உளவியல் தத்துவம். அவர்கள் அழுத்தமானவர்கள் மட்டுமல்ல… எப்போது வேண்டுமானாலும் உங்களை கைகழுவி செல்ல தயங்கமாட்டார்கள்.
ஒருவரிடத்தில் பேசத் தொடங்கும் முன்பாக கூடுமானவரையில் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே உரையாடலைத் துவங்குங்கள். சிரிப்பதினால் உங்கள் முகத்தில் 17 தசைகள் இயங்கி, உங்களுக்குள் புத்துணர்ச்சியை வரவழைக்கிறது. உங்கள் பேச்சைக் கேட்பவர்களிடமும் உற்சாகத்தைக் கொடுத்து, நீங்கள் பேசுவதை கவனமாக கேட்க வைக்கிறது. உரையாடலில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே இது புத்துணர்ச்சியைத் தரும். எவ்வளவு கடினமான விஷயங்களைப் பேசினாலும், அதை எளிதாக செயல்படுத்த வழிவகுக்கும்.
நீங்கள் பேசுவதை எதிரில் இருப்பவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார் எனில், அவர் அதன் சாதக பாதகங்களை உள்மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். பேசி முடிக்கும் வரையில் அமைதி காக்கிறார் எனில், எந்த ஒரு விஷயத்திலும் இறங்கும் முன்பு, தீர்மானமாக அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விடுபவர். ஆனால், பிரச்சனை ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதியாக இருப்பது, அவர் தவறு செய்ததற்கான அறிகுறி என்றோ, அல்லது பிரச்சனைகளில் இருந்து லாவகமாக எப்படி தப்பித்துச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் எளிதில் தெரிந்துக் கொள்ளலாம்.

பெரும்பாலும் கண் பார்வை குறைவுடையவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். கண் பார்வைக்கும் மூளையின் ஆற்றலுக்குமான சம்பந்தம் இருப்பதே இதற்கு காரணம். இயல்பானவர்களை விட அவர்களின் மூளை இன்னும் அதிக வேகத்தில் செயல்படும். எளிதில், நம் மனதை இவர்களால் படிக்க முடிவதும், விஷயங்களை யூகிக்க முடிவதும் இதனால் தான். அவர்களிடத்தில் கற்பனை சக்தியும் அதிகளவில் இருக்கும்.

ஒருவரிடத்தில் பேசும் போது, அவர்களின் வலது காதில் கேட்கிற மாதிரியான திசையில் நின்று கொண்டு, நீங்கள் என்ன கூறினலும் பெரும்பாலும் அவர்கள் அதை கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பார்கள். வலது காது வழியே கேட்கிறவைகளை நிறைவேற்றி வைக்கவே வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மூளை பெரும்பாலும் கட்டளையிடுகிறது.

பெண்கள் எளிதில் தவறுகளை மன்னித்து விடுவார்கள். ஆனால், அத்தனை சீக்கிரத்தில், எத்தனை வருஷங்கள் ஆனாலும் அந்த தவறை மறக்கவே மாட்டார்கள். இதே விஷயத்தில் ஆண்கள் தவறுகளை அத்தனை சீக்கிரத்தில் மன்னிக்க மாட்டார்கள். ஆனால், அந்த தவறை கூடிய விரைவில் மறந்து விடுவார்கள். ஆண்களுக்குள் பிரச்சனைகள் அதிகமாக வருவதற்கான காரணம் இது தான். பெண்கள், தங்களுக்கு அந்த செயல் பிடிக்கவில்லை என்றாலும், சிரித்து, மழுப்பி, தவறை மன்னித்து, அதே சமயம் மறக்காமல் அந்த சம்பவத்தை கடந்து செல்கிறார்கள்.
நாம் உண்மையை பேசும் போது இயல்பாகவே கொஞ்சம் குரலை உயர்த்தி சொல்வோம். அதே சமயம் நமது கை விரல்களை அசைத்து அசைத்து கதை சொல்வதைப் போன்றே சொல்வோம். அதே சமயத்தில் நாம் சொல்கிற விஷயம் பொய் என்றால், நம் கைகள் அசையாது வார்த்தைகள் மட்டுமே வெளிப்படும். கண்களை நேருக்கு நேராகவும் அத்தனை எளிதில் நம்மால் பார்க்க முடியாது. நாம் சொல்வது பொய் என்று நமது மூளைக்குத் தெரிந்ததினால் இவ்வாறு நிகழ்கிறது.
எல்லோருடைய வாழ்க்கையில் பெரும்பாலான சிக்கல்கள் இரண்டே இரண்டு காரணங்களால் தான் ஏற்படுகின்றன. ஒன்று நீங்கள் சிந்திக்காமல் செயல்படுவீர்கள் அல்லது செயல்படாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

நாம் எல்லோரையுமே முக்கியமான நபர்கள் யாராவது திட்டினால் அன்று முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்கு ஒருபோதும் நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அந்த வார்த்தைகளை உச்சரித்த நபருக்கே முக்கியத்துவம் கொடுத்து மனம் வருந்திக் கொண்டிருப்போம். உறவுகளை நாம் சரியாக கையாளத் தெரியாமல் செய்யும் தவறுகள் தான் இதற்கு காரணம்.
யார் யாருக்கெல்லாம் அதிகமான அளவு ஐக்யூ இருக்கிறதோ அவர்கள் அனைவருமே இரவில் தாமதமாக தான் உறங்குவார்கள். ஏனெனில் அப்போது தான் அவர்கள் மூளை அதி வேகமாக செயல்படும்.

ஒருவரிடம் கைக்குலுக்கும் போது, மேம்போக்காக அவர்களின் கைகளைப் பிடித்து குலுக்கக் கூடாது. உங்கள் கைக்குலுக்கலில் நல்ல அழுத்தம் இருக்க வேண்டும். இது உங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வெளிப்படுத்தும். மாறாக, கடமைக்காக கைக்குலுக்கினால், நீங்கள் பேசும் விஷயத்தில் நீங்களே நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.

கூடுமானவரை ஒருவரிடம் பேசும் போது, நன்றாக நிமிர்ந்து நின்று, கம்பீரமாகவும், இயல்பாகவும் பேசுங்கள். இந்த உளவியல் தத்துவங்களை நினைவில் வைத்திருந்தால் எளிதில், எதிரில் நிற்பவரின் மனதில் இடம் பிடிக்கலாம்!

%d bloggers like this: