தமிழகத்தில் தாமரை… மிஷன் 234

த்து வருடங்களுக்கு முன்னர், ஹரியானா மாநிலத்தில் சிறு கட்சியாக மட்டுமே இருந்தது பா.ஜ.க. 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த

ஐந்து வருடங்களில் அமைப்புரீதியாக அங்கு பா.ஜ.க செய்த மாற்றங்களும், ஜாட் சமூகம் அல்லாத பிற சமூகத் தலைவர்களையும் கட்சிக்குள் கொண்டுவந்த ‘ஹைஜாக்’ நடவடிக்கைகளும் 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை 33.3 சதவிகித வாக்குகளுடன் ஆட்சியைப் பிடிக்கவைத்தன. அக்டோபர் 21-ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று தெம்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது பா.ஜ.க!

இதற்கே பிரமித்தால் எப்படி? ஹரியானாவில் பி.ஜே.பி எடுத்தது சிங்கிள்ஸ் மற்றும் டபுள்தான்… ஆனால், திரிபுராவில்தான் அடித்ததெல்லாம் சிக்ஸர் மட்டுமே! அங்கு நடைபெற்ற 2008, 2013 சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 1.5 சதவிகித வாக்குவங்கியை வைத்திருந்த பா.ஜ.க., போட்டியிட்ட 50 தொகுதிகளில் 49-ல் டெபாசிட் இழந்தது. 2013-க்குப் பிறகு கட்சியை அமைப்புரீதியாக பலப்படுத்தியவர்கள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொண்டனர். 25 வருட கம்யூனிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, தங்களால் மட்டுமே முடியும் என மக்களிடம் கருத்தை விதைத்தனர். 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 52 மத்திய அமைச்சர்கள் பிரசாரத்துக்காக திரிபுராவுக்கு அனுப்பப்பட்டனர். விளைவு, அந்தத் தேர்தலில் 43.4 சதவிகித வாக்குகளைப் பெற்று பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. ஐந்தே வருடங்களில் 34,000 வாக்குகளிலிருந்து பத்து லட்சம் வாக்குகளாக பி.ஜே.பி வளர்ச்சி பெற, திரிபுராவில் அவர்கள் முன்னெடுத்த தந்திர அரசியல்தான் பிரதான காரணம்.

இதே வழிமுறையைத்தான் தமிழகத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. முதற்கட்டமாக அமைப்புரீதியாகக் கட்சியைப் பலப்படுத்துவது அவர்களின் திட்டம். அம்பேத்கரைப் பற்றி பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் (இதுவரை 18 முறை) புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களின் வாக்குவங்கி 17 சதவிகிதமாக உள்ள நிலையில், மோடியின் அம்பேத்கர் புகழுரை அந்தச் சமூகத்தினரிடையே கட்சியின் செல்வாக்கு வேரூன்ற உதவும் என்பது அவர்களின் திட்டம். இதுபோக வன்னியர், நாடார், முத்தரையர் சமூகத்தினரையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பின்னால் கவுண்டர்களும், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் பின்னால் முக்குலத்தோரும் அணிதிரளும்பட்சத்தில், அந்தச் சமூகத்தைத் தவிர்த்த, பிற சமூக வாக்குவங்கிகளையும் ஒருங்கிணைக்க நினைக்கிறது பா.ஜ.க.

இரண்டாவது, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிற கட்சிகளில் வலுவாக உள்ளவர்கள் மற்றும் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களை, தங்கள் கட்சிக்குள் இழுக்கத் திட்டமிட்டுள்ளனர். தர்மபுரி முல்லைவேந்தன், முன்னாள் அமைச்சர் கே.பி.ராமலிங்கம், தொட்டியம் ராஜசேகர், தஞ்சாவூர் செல்வராஜ், அ.தி.மு.க-வின் ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர், ஓர் ஆன்மிகவாதி என பி.ஜே.பி-யின் பட்டியலில் உள்ளவர்கள் ஏராளம். இதுபோக… திரிபுரா பாணியில், ஏற்கெனவே உள்ள மற்றொரு கட்சியின் கட்டமைப்பு, ஆள்பலத்தையும் தனதாக்கிக்கொள்ளும் திட்டமும் கையில் இருக்கிறது.

மோடி, அமித் ஷா

மோடி, அமித் ஷா

இன்னொரு பக்கம் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் 60 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குள் 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிப்பது ஆகியவற்றை திட்டங்களாக வைத்துள்ளனர். இந்த ஏழு வருட செயல்திட்டத்துக்கு, குறிப்பிட்ட சிலரை தளகர்த்தர்களாக நியமித்து வேலையை ஆரம்பித்துள்ளது பி.ஜே.பி மேலிடம்.

பி.ஜே.பி ஏற்பாடு செய்த தேச ஒற்றுமைப் பிரசாரக் கூட்டம், சமீபத்தில் ஓசூரில் நடைபெற்றது. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில் பேசிய கிருஷ்ணகிரி முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி நிர்வாகியுமான நரசிம்மன், ‘அடுத்த தேர்தலில் பி.ஜே.பி-தான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். பாலகிருஷ்ணன் போன்றோர் பி.ஜே.பி-க்கு வந்து மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்’ என்று பேசியுள்ளார். நரசிம்மனின் இந்தப் பேச்சு அ.தி.மு.க-வில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் பி.ஜே.பி செயல்தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துவிட்டு வந்த நரசிம்மனிடம் பேசினோம். ‘‘சீனப் பிரதமரை மாமல்லபுரத்துக்கு அழைத்துவந்து, தமிழர்களின் கலைத்திறனையும், தொழில்வளத்தையும் உலகறியச் செய்கிறார் மோடி. ரஷ்யாவுடன் போடப்பட்டுள்ள கடல்வணிக ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகம் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில், தமிழில் பேசி நமது மொழிக்கான அங்கீகாரத்தை வழங்குகிறார். முத்ரா திட்டம், க்ளீன் இந்தியா திட்டம், மக்கள் மருந்தகத் திட்டம் என மத்திய அரசின் எவ்வளவோ சமூகநலத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன.

ஆனால், இங்கு உள்ள தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவறான பிரசாரத்தைக் கட்டமைக்கின்றன. இனி எங்களுக்கு வேலையே, மோடி அரசின் திட்டங்களை 234 தொகுதிகளிலும் எடுத்துச் செல்வதுதான். தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மூலமாக பிரசாரம் செய்ய

விருக்கிறோம்” என்றவரிடம், தமிழகத்தில் நிலவும் பா.ஜ.க எதிர்ப்பு அலை குறித்து கேட்டோம்.

‘‘அது ஊடகங்களால் கட்டப்பட்ட பிம்பம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மேற்குவங்கத்தில் பா.ஜ.க பெரிய கட்சி கிடையாது. 2011 வரை 35 வருடங்கள் கம்யூனிஸ்டுகள்தான் அந்த மாநிலத்தை ஆண்டனர். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆள்கிறது. 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், வெறும் 4.1 சதவிகிதமாக இருந்த பி.ஜே.பி-யின் வாக்குவங்கி, 2016-ம் ஆண்டு தேர்தலில் 10.3 சதவிகிதமாக உயர்ந்தது. மூன்று எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்துக்கு அனுப்பினோம். நடந்து முடிந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.23 சதவிகித வாக்குகள் மூலம், 18 எம்.பி-க்களைப் பெற்றுள்ளது. கடந்த ஒன்பது வருடங்களில், அந்த மாநிலத்தில் அமைப்புரீதியாக நாங்கள் செய்த மாற்றங்கள், இன்று பலன் அளிக்கின்றன.

திரிபுராவில் பூஜ்ஜியம் நிலையிலிருந்து, இன்று 35 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியைப் பிடித்துள்ளோம். திரிபுரா, ஹரியானா, மேற்குவங்க மாநிலங்களில் எங்களின் திட்டம் வெற்றியடையும்போது, எங்களது ‘மிஷன் 234’ ஏன் தமிழ்நாட்டில் வெற்றி அடையாது? தமிழக மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம். இதை மக்களிடம் புரியவைத்தாலே போதும். எங்களுக்கு நல்லவர்களுடன் வல்லவர்களும் அவசியம். தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஆட்சியமைக்கும். வரும் காலங்களில் திராவிட, தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தில் எடுபடாது” என்றார்.

திட்டம்போட்டு ஜெயிப்பதில் கில்லாடி என்பதை நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறது பா.ஜ.க. ஆனால், தமிழகத்தில்தான் அதன் பாச்சா இதுவரையில் பலிக்கவில்லை. அதேசமயம், இனிமேலும் பலிக்காது என்றே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் சூழலில், பா.ஜ.க அடுத்தடுத்து நகர்த்தவிருக்கும் காய்கள்தான் அதை தீர்மானிக்கும்!

%d bloggers like this: