தள்ளிப்போகிறதா அ.தி.மு.க பொதுக்குழு?

அடடே’ திட்டத்தில் எடப்பாடி!

கையில் கேப்பசீனோ, கழுத்தில் புதிய ரக ஹெட்செட், தலையில் ஸ்டைலாக கூலர்ஸுடன் பெல்ட் பக்கிளில் இருந்த ஸ்டார் டிசைனைச் சுற்றிக்கொண்டே ‘‘ஹாய்… ஹவ் ஆர் யூ?’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ‘‘இரண்டு

தொகுதி இடைத்தேர்தல் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. இன்னமும் பழைய கெட்டப்பில் போனால் எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. அதுதான் இப்படி மாடர்னாகத் திரிகிறேன்’’ என்றவரிடம், ‘‘இடைத்தேர்தலில் கழகங்கள் என்ன செய்கின்றன?’’ என்று கேட்டோம்.

‘‘அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளுமே வேட்பாளர்களையும், தொகுதிப் பொறுப்பாளர்களையும் அறிவித்துவிட்டன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தேர்வுசெய்யவே திணறிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தத் தொகுதிக்கும் தி.மு.க சார்பில் பொறுப்பாளர்களை அறிவித்து கதர் சட்டையினரை ஆச்சர்யபடுத்தி விட்டனர். இரண்டில் ஒரு தொகுதியை வென்றாக வேண்டும் என்று அ.தி.மு.க தரப்பினர் முழுமூச்சில் இருக்கிறார்கள். பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்டிலே 20,000 வழங்கலாம் என்று ஆலோசனை நடத்திவருகிறார்கள். தி.மு.க-வினர் முதல் ரவுண்டில் 10,000 வழங்க முடிவு செய்துள்ளார்கள்.’’

‘‘காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிப்பில் ஏன் இந்த இழுபறி?’’

‘‘வேறென்ன… கரன்சிப் பிரச்னைதான்! இதுவரையில் தேர்தல்களில் செலவை தி.மு.க பார்த்துக்கொண்டது. ஆனால், இந்த முறை முழுச்செலவையும் காங்கிரஸே பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். தன் அண்ணன் குமரி அனந்தனை விருப்பமனு கொடுக்கச் செய்த வசந்தகுமார், மறுபுறம் தன் மகனுக்கு வாய்ப்பு கேட்டு டெல்லி கதவைத் தட்டியுள்ளார். `ஊர்வசி’ சோப் செல்வராஜின் மகன் அமிர்தராஜ் சீட் வாங்கப் போராடினார். வாரிசுகளுக்கு சீட் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தீர்மானமாக இருக்கிறது. இந்தக் களேபரங்களால் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி.”

‘‘இடைத்தேர்தல் பட்ஜெட் எவ்வளவாம்?’’

‘‘இரண்டு கட்சிகளுமே தேர்தல் பட்ஜெட் ஐம்பது கோடி ரூபாய் எனக் குறித்துள்ளன. அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, ‘செலவுத்தொகையை, பொறுப்பாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல் வேலை செய்யுங்கள். ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம். ஆயுதபூஜை விடுமுறை வருகிறது என ஊருக்குக் கிளம்பிவிட வேண்டாம். நீங்கள் பணியாற்றும் இடத்திலேயே காருக்கு பூஜை போட்டுக்கொள்ளுங்கள்’ என்று கொஞ்சம் அதிரடியாகவே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் எடப்பாடி.’’

‘‘கோபமாகப் பேசினாரோ?’’

‘‘அதெல்லாம் இல்லை. ‘நாம் செய்யும் சில தவறுகள்தான் தோல்விக்குக் காரணம். திட்டமிட்டு வேலையைப் பாருங்கள். ஒவ்வொரு வாக்கும் நமக்கு மிக முக்கியம்’ என்று வகுப்பெடுத்துள்ளார்.’’

‘‘பன்னீர் என்ன சொன்னாராம்?’’

‘‘அவர் எதுவும் சொல்லும் சூழலில் இல்லை. தனக்கு நெருக்கமானவர்களிடம்கூட, ‘திட்டமிட்டு என்னை ஓரம்கட்டு கிறார்கள். எதற்கு நான் ஒருங் கிணைப்பாளராக இருக்கிறேன்’ என்று வருத்தப்பட்டுள்ளார்.’’

‘‘கே.பி.முனுசாமியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லையே?’’

‘‘கூட்டத்தில் கலந்துகொண்ட பலரின் கேள்வியும் அதுவாகவே இருந்தது. ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பாக அவர் வெளியூர் செல்லும் பயணத்திட்டத்தை வகுத்துவிட்டதால், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். ஆனால், அவரும் பன்னீரைப் போன்று மனவருத்தத்தில்தான் இருக்கிறார். சசிகலாவை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்களில் அவரும் முக்கியமானவர். இப்போது சசிகலாவுடன் எடப்பாடி தரப்பு கைகோத்திருப்பது தெரிந்து அவர் அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘என்ன சொல்ல வருகிறீர்கள்?’’

‘‘சசிகலா தரப்புக்கும் எடப்பாடிக்கும் இடையே அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் இந்த ஆண்டும் நடைபெறுவது சந்தேகம். இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் வரை பொதுக்குழுவைத் தள்ளிப்போட்டுவிட வேண்டும் என்று எடப்பாடி திட்டமிடுகிறார். சசிகலா வந்த பிறகு அவரை கட்சிக்குள் கொண்டுவந்து அவருக்கு ஒரு பதவியை பொதுக்குழுவை வைத்து உருவாக்கத் திட்டமிடுகிறார்.’’

‘‘பலே திட்டமாக இருக்கிறதே!’’

‘‘இந்த விஷயம் பன்னீருக்குத் தெரிந்துதான் கோபத்தில் இருக்கிறாராம். பொதுக்குழுவைத் தள்ளிப்போட தேர்தல் ஆணையத்திடம் காரணம் சொல்ல வேண்டும். அதற்கு கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள வழக்கை காரணமாக்கப் பார்க்கிறார்கள். இப்போது பொதுக்குழுவைக் கூட்டினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். சசிகலா வந்த பிறகு நடத்தினால் பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று ஒரு திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி.’’

‘‘இதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘உங்களுக்குத் தெரியாததா… அரசியலில் எதற்குத்தான் வாய்ப்பில்லை!’’

‘‘அப்படியென்றால் தினகரன் நிலை?’’

“சசிகலா என்ன முடிவுசெய்கிறார் என்று பார்த்த பிறகே அவரின் மூவ் தெரியும் என்கிறார்கள். ஒருபோதும் அ.ம.மு.க-வைக் கலைக்கும் எண்ணம் அவரிடமில்லை. சசிகலாவே வெளியே வந்து கலைக்கச் சொன்னால்கூட அதற்கு தினகரன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே சொல்கிறார்கள்.’’

‘‘ரஜினி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?’’

‘‘கட்சி ஆரம்பிப்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். அதற்காக பலரிடமும் அவர் ஆலோசனை பெற்றுவருகிறார். படப்பிடிப்புக்காக மகாராஷ்டிரம் போயிருந்த நேரத்தில், அங்கு உள்ள மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கெனவே மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க போன்ற கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் பணியாற்றிவருவதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது ரஜினிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”

‘‘கமலின் ரியாக்‌ஷன் என்னவோ?’’

“ரஜினியின் இந்தச் சந்திப்பை, கமல் தரப்பும் தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினியின் அரசியல் என்ட்ரி எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், யாருடன் அவர் கூட்டணி அமைப்பார் என்றெல்லாம் தீவிரமாக ஆலோசனை செய்துவருகிறார்கள்’’ என்றபடியே சிறகை விரித்தார்.

%d bloggers like this: