மலரல்ல… மருத்துவப் புதையல்!

இந்தியாவின் தேசிய மலர் என்ற மரியாதைக்குரியது தாமரை. பார்க்க அழகான ஒரு மலர் என்றாலும் அளவில் பெரியது என்ற காரணத்தினால் மற்ற பூக்களை போல் தாமரையைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதில்லை. ஆனால், கோயில்களிலும், அலங்காரம் செய்வதற்கும் தாமரை பெரிதும் பயன்படுகிறது.

பொதுவாக இந்த விஷயங்களை தாண்டி தாமரை மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது என்பது மக்கள் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் தாமரையின் மருத்துவ பலன்கள் பற்றி இங்கே நமக்கு எடுத்துரைக்கிறார் சித்த மருத்துவர் அபிராமி.
தாமரை குளம், குட்டைகளில் வளரும். சேற்றுப்பகுதி, களிமண் பகுதி உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் அங்கே தாமரைச் செடி வளரும். மஞ்சள், நீலம் என்று உலகம் முழுவதிலும் பல தாமரை வகைகள் உண்டு என்றாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில் இளஞ்சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற நிறங்களில்தான் தாமரை வளரும்.
தாமரையின் பூ, மகரந்தம், தண்டு, கொட்டை, விதை என பெரும்பாலும் அனைத்து பாகங்களும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. குறிப்பாக, தாமரையினை மூன்று முக்கிய உள்ளுறுப்புகளுக்கு தாமரையை சித்த மருத்துவம் அதிகம் பயன்படுத்துகிறது.
தாமரைக்கும் இதயத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. பார்ப்பதற்கும் அதன் வண்ணமும் இதயம் போன்று இருப்பதாலோ என்னவோ இதயத்தைக் குறிப்பிடும்போது இதயக்கமலம் என்ற சொல்லாடலை சிலர் பயன்படுத்துவதை அறிந்திருப்போம். ஆனால், அது வெறும் சொல்லாடல் மட்டுமல்ல. செந்தாமரை இதயத்திற்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக இருக்கும்.
தாமரைப் பூவின் பலன்கள்
ஒரு முழு செந்தாமரையின் இதழ்களை உதிர்த்து 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, 10 மிளகு, ஒரு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து அந்த நீர் நான்கில் ஒரு பங்காக சுருங்கி வரும்போது இறக்கிவிட வேண்டும். வேண்டுமானால் இந்த கஷாயத்துடன் தேனோ, கல்கண்டோ சேர்த்து சாப்பிடலாம். (நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெறும் கஷாயத்தை உட்கொள்ளவும்) தேவைப்பட்டால் பால் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து 48 நாட்கள் அல்லது 60 நாட்கள் இந்த கஷாயத்தை சாப்பிட்டு வர இதய தசைகள் வலுப்பெறும். இதயத்தின் தசைகள் சோர்வில்லாமல் இயங்க, இந்த கஷாயம் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி, இதயத்தில் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சிலருக்கு மாரடைப்பு வந்த பின் நிறைய சிகிச்சைகளுக்கு ஆளாகி இருப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் இதயம் பாதிக்காமல் இருக்க இந்த செந்தாமரை கஷாயம் உதவும்.
தற்போது நவீன மருத்துவ வசதிகள் முன்பை விட அதிகரித்திருந்தாலும், பொதுவான மக்களின் ஆரோக்கியம் என்பது குறைந்தே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நிறைய பேர் தனக்குத் தெரியாமலே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், வெளியே தெரியாமல் அமைதியாக பாதிக்கப்படும் உறுப்பாக கல்லீரல் இருக்கிறது. கல்லீரல் பாதிப்பு அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. சமீப ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பு அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம் மக்களிடையே அதிகரித்திருக்கும் குடிப்பழக்கம்தான். பாதிக்கப்பட்ட கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு வெண்தாமரை சிறந்த மருந்து.
வெண் தாமரை கஷாயம்
ஒரு முழு வெண் தாமரையின் இதழ்களை உதிர்த்து 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, 10 மிளகு, ஒரு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து அந்த நீர் நான்கில் ஒரு பங்காக சுருங்கி வரும்போது இறக்கி, வேண்டுமானால் அதனுடன் தேனோ, கல்கண்டோ சேர்த்து சாப்பிடலாம். (நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெறும் கஷாயத்தை உட்கொள்ளவும்) தேவைப்பட்டால் பால் கலந்து கொள்ளலாம்.
கல்லீரலின் திசுக்களை இந்த கஷாயம் பாதுகாக்கும்.பலவிதமான நோய்களுக்கு மருந்து சாப்பிட்ட பின் சரியாகாமல் கடைசியாக தமிழ் மருத்துவத்தை நாடி பலர் வருகின்றனர். அவர்களுக்கு முன்னால் சாப்பிட்ட அந்த மருந்துகளின் தாக்கம் (பின் விளைவுகள்) இருக்கும். கல்லீரலில் அந்த தாக்கம் இருக்கும். எனவே, எங்களிடம் நிவாரணம் வேண்டி வருபவர்களுக்கு முதலில் வெண் தாமரைப்பூ கஷாயத்தை கொடுப்போம். அந்த கழிவுகளின் பாதிப்பு குறைந்த பின்னர்தான் சிகிச்சையை ஆரம்பிப்போம். 
வயதாகும்போது மூளையின் திசுக்கள் சிதைவடைய ஆரம்பிக்கும். அதனால் வயதாகும்போது மூளையின் செயல்பாடுகள் மந்தமாகும். அதனால்தான் நாம் சிறுவயதில் இருந்தது போல் வயதாகும்போது சுறுசுறுப்பாக இருப்பதில்லை. சிறு வயதில் இருக்கும் வேகமாக பதில் அளிக்கும் திறன், யோசிக்காமல் உடனடியாக கூர்மையாக பதில் சொல்வது, கற்றல் திறன் போன்றவை வயதாகும்போது குறையும்.
தாமரைப்பூ மூளை திசுக்களை பாதுகாத்து மூளையை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்கிறது. அதனால் மூளை நன்கு வேலை செய்யும். மூளையின் செல்களை புதுப்பித்து வாழ்நாளை நீட்டிக்கச் செய்யும். வெண்தாமரை மற்றும் செந்தாமரை இரண்டுமே மூளைக்கு நல்லது.
செந்தாமரை மற்றும் வெண் தாமரைப்பூவின் கஷாயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது மூளையின் சோர்வான செயல்பாட்டை மாற்றி கற்றல் திறன் மற்றும் நினைவுத்திறன் (ஞாபக சக்தி) அதிகரிக்கும். உயர் மூளைத்திறனையும் அதிகரிக்கும் சக்தி உடையது தாமரைப்பூவின் கஷாயம்.
தாமரையில் Kaempferol என்ற சத்துப்பொருள் உள்ளது. இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இது நமது செல்களில் ஏற்படும் சிதைவினை தடுக்கக்கூடிய ஆற்றல் உடையது. முக்கிய உறுப்புகளில் ஏற்படும் சேதாரத்தினை குறைக்கிறது. அதனால்தான் தாமரை ஒரு சிறந்த ஆன்டி ஏஜிங் பொருளாகவும் இருக்கிறது.
மகரந்தம்
புதிதாக மலர்ந்த தாமரையின் நடுவில் இருக்கும் அதன் மகரந்தத்தை எடுத்து நசுக்கி கஷாயம் வைத்து சாப்பிடலாம்.  மகரந்தங்களை சேகரித்து நிழலில் காய வைத்து, பொடி செய்து 200 மில்லி லிட்டர் தண்ணீரில் அரை ஸ்பூன் பொடியை போட்டு கொதிக்க வைத்தும் கஷாயமாக்கி சாப்பிடலாம். தாமரையின் மகரந்தத்தை இந்த முறைகளில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது காது நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு
சரியாகும்.
தண்டு
‘வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு’ என்ற திருக்குறளை அனைவரும் அறிவோம்.
குளத்தின் நீர் எந்தளவுக்கு உள்ளதோ தாமரையின் தண்டுகள் அந்தளவிற்கு உயர்ந்திருக்கும். இந்த தாமரைத் தண்டினை கிழங்கு என்றும் சொல்லலாம். அது தாமரையின் வேர்ப்பகுதி. குளம் வற்றினாலும் பூவும், இலையும் வாடினாலும் சேற்றினுள் இந்த தண்டு பகுதி காயாமல் இருக்கும். மறுபடி ஒரு மழை பெய்தால் அதிலிருந்து இலையும் பூவும் தோன்ற ஆரம்பிக்கும். சீன உணவுகளில் அதிகம் தாமரையின் தண்டு அதிகம் இடம்பெறுகிறது. சூப், சாலட் என நிறைய உணவுப்பண்டங்களில் தாமரை தண்டினை சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தாமரையின் தண்டினை வெட்டிப் பார்த்தால் சக்கரம் போன்று இருக்கும். தென்னிந்தியாவிலும் தாமரை தண்டு வத்தலை உணவில் பயன்படுத்துகிறார்கள். மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்வது போல் இதனை செய்து சாப்பிடலாம். சாதாரணமாகவும் இந்த வத்தலை பொரித்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. ரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் நல்லது.
விதை
தாமரைப்பூவின் கொட்டைகள் வலிமையாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதனுள் தாமரையின் விதை இருக்கும். தாமரையின் கொட்டை சித்த மருத்துவத்தில் பல விதங்களில் பயன்படுகிறது. ஆனால், அதனை பொதுமக்கள் உபயோகிக்க முடியாது.  ஆனால், அதன் விதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும். சுவை என்று பெரிதாக ஒன்றும் இருக்காது. ஆனால், ஒருவிதமான தனி வாசனை இருக்கும். வெறுமனே சாப்பிடலாம் அல்லது அவலில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது போல இதிலும் செய்து சாப்பிடலாம். தால் மக்கானி (தாமரை விதை பாயசம்) வட இந்தியாவில் பிரபலம்.
தாமரை விதையினை க்ரேவி போலவும் செய்து சாப்பிடலாம். கலோரி குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ள இதனை உப்பு சேர்க்காமல் நீரிழிவு நோயாளிகளும் ரத்த அழுத்தம் உடையவர்களும் மாலை நேரங்களில் நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது. எந்த பின் விளைவுகளும் இருக்காது. சிறுநீரகத்தின் திசுக்களை பாதுகாக்கும். எடையை குறைக்கும். ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவற்றைக் குறைக்கும். சீக்கிரம் வயதாவதை தடுக்கும்.  
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். வட இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களின் உணவில் இது கட்டாயம் இடம்பெறும். தால் மக்கானி என்று சொல்லும் இதனை அவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள்.  தாமரையின் பாகங்களை உணவுப்பதத்தில் பயன்படுத்தும்போது எந்த பின்விளைவுகளும் இருக்காது.

%d bloggers like this: