கழுத்துவலியைத் தவிர்க்க என்ன செய்யலாம்?!

பாரதத்தின் பழம்பெரும் மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவமுறை மனித இனத்திற்கு நோய் வராமல் காப்பாற்றி, நோய் வந்தால் அவற்றை விரைவில் குணப்படுத்தி மீண்டும் வராமல் காப்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டது.

இது ஒரு முழுமையான மருத்துவமுறை என்பதற்கு சான்றாக மனித உடலின் அமைப்புகளை உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை குறித்தும் மிகத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. அவற்றில் கழுத்தை குறித்து கூறும்போது கழுத்திற்கு கீரிவா என்றும், இது 20 அங்குலம் அளவு மற்றும் 9 எலும்புகள், 8 வித  ரத்தக்குழாய்கள் 16 மர்ம புள்ளிகள் கழுத்துப் பகுதியில் இருக்கின்றன என்று ஆயுர்வேத மருத்துவ புத்தகங்களில் குறிப்புரை காணப்படுகிறது.
உடல் செயல் இயக்கங்களுக்கு காரணமான வாதம், பித்தம், கபம் இவற்றில் கபம் என்ற தோஷம் கழுத்துப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தமிழில் கழுத்து என்ற சொல்லுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. உடலையும், தலையையும் இழுத்துப் பிடித்து இருப்பதால் இதற்கு கழுத்து என்று பெயர் உண்டு. கழுத்து வலி எதனால் ஏற்படுகிறது என்பதற்கு ஆயுர்வேதம் மிக நீண்ட காரணங்களையும், வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகளையும் ஆயுர்வேதம் கூறியுள்ளது.
வலி என்று சொன்னால் அது வாதம் என்ற வாயுவின் பங்களிப்பு இல்லாமல் ஏற்பட்டது என்கிறது. இதற்கு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நாம் உண்ணும் தவறான உணவு பழக்க வழக்கங்களாலும், தவறான வாழ்க்கை நடைமுறைகளாலும் ஏற்படுவது. மற்றொன்று வெளிக்காரணிகளால் ஏற்படக்கூடிய பிரச்னை. அடிபடுதல், விபத்து, பிறர் நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குதல் போன்றவற்றால் வாதம் என்ற வாயு நம் உடலில் அதிகரிக்கும்.
கழுத்து வலியைப் பொறுத்தவரை அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உட்கொண்டாலும், இயற்கை உபாதைகளைத் தடுத்து நிறுத்தினாலும் கழுத்துவலி ஏற்படும். இதைவிட கழுத்து வலிக்கு முதன்மைக் காரணம் தற்போது இருக்கும் நவீன உபகரணங்கள், சமூக வலைதளங்கள்.
தற்போது பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு அதிகப்படியான நேரங்களில் கைபேசியுடன்தான் அதிகம் உறவாடுகின்றனர். இதனால் எப்போதும் தலைகுனிந்து இருப்பதாலும் கழுத்து வலி ஏற்படுகிறது. அதிக வாகன பிரயாணங்களாலும், தலையில் அதிகம் பாரம் தூக்குவதாலும், அடிபடுவதாலும் கழுத்தில் வலி ஏற்படும்.
இதற்கு என்ன தீர்வு இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்!
ஆயுர்வேத மருத்துவத்துறையில் பொதுவான ஓர் சிகிச்சை முறை கூறப்பட்டுள்ளது. அது யாதெனில்,‘நிதான பரிவர்த்தனமே சிகிச்சை’. அதாவது நோய்க்கான மூலகாரணத்தை முற்றிலும் அறுத்து எறிதலே சிகிச்சையின் முதன்மை தத்துவம். எனவே, கழுத்து வலியின் காரணத்தை கண்டறிந்து அதனை தடுத்து பின்பு அதனால் ஏற்பட்ட உபாதைக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே சிறந்தது.
எடுத்துக்காட்டாக கைபேசி அதிகம் பயன்படுத்துவதால் கழுத்து வலி ஏற்பட்டால் அதனை தடுக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் கழுத்தில் உள்ள எலும்புகள் பாதிக்கப்பட்டு வலி ஏற்பட்டால் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு செறிவூட்டப்பட்ட எண்ணெய்கள் ஆயுர்வேத மருத்துவத்துறையில் பல இருக்கின்றன. அவைகளை ஒவ்வொருவருக்கும் உள்ள உடல்வாகு, நோயின் தாக்கம் போன்றவற்றை பொறுத்து ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைப்பார்.
மேற்கண்ட இரண்டு சிகிச்சை மேற்கொண்ட பின் நஸ்யம்(மூலிகை மருந்துகளை மூக்கில் இடும் சிகிச்சை முறை) என்ற சிகிச்சையை மேற்கொள்வார். இது கழுத்து வலிக்கு என்று பிரத்யேக சிகிச்சை முறை.
இதன்மூலம் கழுத்தில் ஏற்பட்ட இடர்பாடுகளை களையலாம் மற்றும் தடுக்கலாம். இதைத்தவிர பல்வேறு மூலிகை மருந்துகள் உட்பிரயோகத்திற்கு நிறைய இருக்கின்றன. இவற்றையும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.
யோகா மருத்துவரின் அறிவுரையின்கீழே உடற்பயிற்சி போன்றவைகளும் கழுத்து வலிக்கு தீர்வைத் தரும். மிக முக்கியமாக கழுத்தில் வலி அல்லது பிடிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுளுக்கு எடுத்தல், எண்ணெய் தேய்த்தல் போன்ற காரியங்களில் ஈடுபடாமல் சாலச் சிறந்தது.
ஏனென்றால் உடலில் கழுத்து மிக முக்கியமான பகுதி. மூளைக்குச் செல்லக்கூடிய ரத்தக்குழாய் நரம்புகள் எல்லாம் கழுத்து வழியாகத்தான் சென்று வர வேண்டும். எனவே, கழுத்தை முறையாக பராமரிக்காமல் அல்லது தொந்தரவுகளை அலட்சியப்படுத்தி அல்லது தவறான வழிகாட்டுதலின் பேரில் சிகிச்சை மேற்கொள்ளுதல் நல்லதல்ல. எனவே, கழுத்தை கவனமாக கவனித்து உடலையும், தலையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

%d bloggers like this: