Advertisements

நவராத்திரி நாயகியே சரணம்!

ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.

நவராத்திரி

கில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருள்கடாட்சிக்கும் அற்புதமான காலம்தான் நவராத்திரி.

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

– என்று அம்பிகையின் அருமைபெருமைகளைப் போற்றுகிறது தேவி மஹாத்மியம். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.

வசந்த நவராத்திரி – பங்குனி மாதத்தில், ஸ்ரீராம நவமியையொட்டி கொண்டாடப்படுவது; வசந்த காலத்தில் வரும்.

 

ஆஷாட நவராத்திரி – ஆடி மாதத்தில் வருவது.

மக நவராத்திரி – மாசி மாதம் வருவது.

ஆஷாட நவராத்திரியும் மக நவராத்திரியும் இப்போது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை என்பதாலும், அம்பிகை உபாசகர்கள் மட்டுமே அநேகமாக இவற்றைக் கடைப்பிடிப்பதாலும், இவை குப்த நவராத்திரிகள் (மறைவான நவராத்திரிகள்) எனப்படுகின்றன.

சாரதா நவராத்திரி – இது, புரட்டாசி- ஐப்பசி மாதங்களில் வரும்; சரத் காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது. இதை மகா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி ஆகிய பெயர்களாலும் புராண நூல்கள் போற்றுகின்றன.

இந்தப் புண்ணிய காலத்தில், அம்பிகையின் திருக்கதைகளையும் அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் படித்தும் பாடியும் வழிபடுவது விசேஷம். அவ்வகையில், அம்பிகையின் மறக்கருணையைப் போற்றும் திருக்கதைகளை அறிவோம்.

மது-கைடப சம்ஹாரினி

துவொரு பிரளய காலம். எங்கு பார்த் தாலும் பெரும் வெள்ளம். ஸ்ரீமகா விஷ்ணுவோ அரவணையில் நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அப்போது திடுமெனத் தோன்றினார்கள் மது-கைடபர் எனும் அசுரர்கள். அவர்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் வெள்ளம். அதைக் கண்டவர்களுக்கு, அந்த வெள்ளத்தையும் அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் வஸ்துவையும் யார் படைத்திருப்பார்கள் என்று எண்ணம் எழுந்தது. அப்போது வானில் ஓர் ஒலி எழும்பியது மந்திரவடிவில். அதை உள்வாங்கிக்கொண்ட அசுரர்கள், தொடர்ந்து ஆகாயத்தில் பேரொளியைக் கண்டார்கள். தாங்கள் மனதில் வாங்கிய மந்திரத்தால், அந்தப் பேரொளியைத் தியானித்து தவமிருக்கத் தொடங்கினார்கள்.

அவர்களின் தவம், அனைத்துக்கும் ஆதாரமான ஆதி சக்தியை மகிழ்வித்தது. விளைவு… அசரீரியாகப் பேசினாள் அசுரரிடம்; “வேண்டும் வரம் கேளுங்கள்’’ என்றாள். “நாங்கள் விரும்போதுதான் மரணம் நிகழவேண்டும்’’ என்று வரம் கேட்டுப்பெற்றார்கள் அசுரர்கள். வரம் கிடைத்ததும் அவர்களின் அட்டுழீயம் ஆரம்பித்தது. பிரம்மனையே போருக்கு அழைத்தார்கள். நான்முகன் நாராயணனிடம் ஓடோடிச் சென்றார். அவரோ அரிதுயிலில் ஆழ்ந்திருந்தார். ஆகவே, பெருமாளைத் துயிலெழச் செய்யவேண்டி, யோக நித்ராதேவியை துதித்தார். அதன் விளைவாக விழித்தெழுந்த பெருமாள், அசுரரை எதிர்த்துப் போர்புரிந்தார்.

வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கமுடியாதபடி போர் நீண்டது. இந்த நிலையில் அங்கே தோன்றினாள் அம்பிகை. அவளே தங்களுக்கு வரம் தந்தவள் என்பதை அறியாத அசுரர்கள், அவள்மீது மோகம் கொண்டார்கள். இந்த நிலையில், “நீங்கள் இருவரும் பெரும் வீரர்களாக இருக்கிறீர்கள். எனவே, என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்’’ என்றார் பெருமாள்.மோகம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த அசுரர்களோ, “நாங்கள் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர்கள். வேண்டு மானால் உமக்கு வரம் தருகிறோம்’’ என்றனர். இதைத்தானே பெருமாளும் எதிர்பார்த்தார். எனவே, “நீங்கள் இருவரும் என்னால் கொல்லப்படவேண்டும்’’ என்றார்.

நவராத்திரி நாயகியே சரணம்!

அவர் கேட்டதும்தான் நிலைமையை உணர்ந்தனர் அசுரர்கள். எப்படியேனும் தப்பிக்க நினைத்து, “தண்ணீர் இல்லாத இடத்தில்வைத்து எங்களைக் கொல்லலாம்’’ என்றார்கள். அப்போதே பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்து, அசுரர்களைத் தூக்கி தன் தொடையில் வைத்து வதம் செய்தார், பெருமாள். தக்க தருணத்தில் தோன்றி அந்த அசுரர்கள் அழியக் காரணமாக இருந்ததால், அன்னையை `மதுகைடப சம்ஹாரினி’ எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் இந்தத் திருநாமத்தைத் தியானித்து, அம்பிகையை வழிபட்டால், தொழிலில் போட்டி-பகை போன்ற பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்; வாழ்வில் வெற்றிவாகை சூடலாம்.

மஹிசாசுர மர்த்தினி

டும் தவமிருந்து `பெண்ணால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும்’ என்று பிரம்மதேவரிடம் வரம் கேட்டுப்பெற்றவன், மகிஷாசுரன். ஒருவர் சகலவிதத்திலும் வல்லமை பெற்றுவிட்டால், அவரைப் பெரும் அகங்காரம் தொற்றிக்கொள்ளும். அந்த அகங்காரத்துக்கு அடிமையானால், விளைவுகள் விபரீதமாகும். மஹிஷனுக்கும் அப்படியான நிலை வாய்த்தது. அனைவரையும் அடிமைப் படுத்தினான். வழக்கம்போல் தேவர்கள் பிரம்மனிடம் வந்து புலம்ப, அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்று சரணடைந்தார் பிரம்மன். சிவனாரோ, திருமாலிடம் சென்று வழி கேட்கும்படி பணித்தார். அப்படியே அனைவரும் திருமாலின் சந்நிதானத்துக்குச் சென்றார்கள்.

“ நம் அனைவரின் சக்தியும் ஒன்றிணைந்து பெரும் சக்தியாய் அவதரிக்கும். அந்தத் தேவி யால் அவன் அழிவான். ஆனால், நம் சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெளிப்பட, பரமேஸ்வரனே சங்கல்பிக்க வேண்டும்’’ என்றார், திருமால். ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து பரமேஸ்வரனைத் துதித்தார்கள். அக்கணமே அங்கே எழுந்தருளினார் பரமன். மறுகணம் அங்கிருந்த அனைவரது சக்திகளும் ஒன்றிணைய, தேவி ஒருத்தி தோன்றினாள். அவளின் திருவடிவில் இணைந்த சக்திகள் குறித்து அற்புதமாக விவரிக்கிறார் வியாசர்.

சிவனாரின் சக்தி – திருமுகமாகவும், எம சக்தி – கேசங்களாகவும், அக்னி சக்தி – முக்கண்களாகவும், சந்தியா சக்தி – புருவங் களாகவும், குபேர சக்தி – மூக்காகவும், பிரம்ம சக்தி – பல் வரிசையாகவும், அருண சக்தி – 18 திருக்கரங்களாகவும், இந்திர சக்தி – இடையாகவும், சந்திர சக்தி – மார்புகளாகவும், வசுக்களின் சக்தி – நகங்களாகவும், வருண சக்தி – துடை மற்றும் முழங்கால்களாகவும் தேவியின் திருவடிவத்தில் இடம்பெற்றிருந்தனவாம்.

நவராத்திரி நாயகியே சரணம்!

அந்தத் தேவியிடம், மும்மூர்த்தியர் முதலாக தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதத்தை வழங்கினார்கள். அவர்களை ஆறுதல்படுத்திய அம்பிகை, மஹிஷாசுரனுடன் போர் தொடுத்து, விரைவில் அவனை அழித்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். “மஹிஷாசுர தீரவீர்ய நிக்ரஹாயை நமோ நம’’ என்று போற்றித் துதித்தார்கள். நவராத்திரியின் அடுத்த மூன்று நாள்கள் மஹிஷாசுர மர்த்தினியாய் அம்பாளைப் போற்றித் துதிப்போம்; வறுமை, நோய், தடைகள் முதலான தீவினைகளை அழித்து நம்மை ரட்சிப்பாள் அந்தத் தேவி!

சும்ப-நிசும்ப சம்ஹாரம்

ஹிஷனைப் போன்றே `பெண்ணால் மட்டுமே அழிவு’ எனும் வரம் பெற்றவர்கள் சும்ப-நிசும்பர்கள். இந்த அசுரர்களின் அக்கிரமங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, தங்களின் குரு தேவரான வியாழ பகவானின் வழிகாட்டுதல்படி, இமயமலைச் சாரலுக்குச் சென்று சக்தியைத் தியானித்து வழிபட்டார்கள் தேவர்கள். அவர்களுக்குக் காட்சி கொடுத்த அன்னை, தன் மேனியிலிருந்து காளியைத் தோற்றுவித்தாள்.

பின்னர், காளியுடன் அசுர்களின் எல்லைக்குச் சென்று தங்கினாள். அவளின் எழிற்கோலம் குறித்துக் கேள்விபட்ட அசுரர்கள், அவள் யாரென்பதை அறியாமல் அவள்மீது மோகித்தார்கள். போரிட்டாவது தங்கள் எண்ணத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார்கள். போர் மூண்டது. அலை அலையாய் வந்த அசுரப் படைகள், தேவியால் உருவாக்கப்பட்ட சக்திப்படையால் அழிக்கப் பட்டன. நிறைவில் அந்த அசுரர்களையும் அழித்தாள் தேவி சக்தி!

இந்த மூன்று சம்ஹாரக் கதைகளிலும் முதலாவதான மது-கைடப வதத்தின்போது வந்தவள் துர்கா என்றும், மகிஷாசுர சம்ஹாரத்தின்போது வந்தவள் மகாலட்சுமி அம்சம் என்றும், சும்ப-நிசும்பர் வதத்தின் போது வந்தவள் சரஸ்வதி என்றும் தேவி பாகவதம் போற்றுகிறது. இதையொட்டி நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாள்கள் திருமகளையும், கடைசி மூன்று நாள்கள் கலைவாணியையும் வழிபடவேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள்.

நாமும் முறைப்படி நவராத்திரி வழிபாடு களைச் செய்து வழிபடுவோம். வழிபாட்டு வேளையில், கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலைப் பாடி அன்னையை வணங்குவோம்; சகல நன்மைகளும் உண்டாகும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு

செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: