அவசரக்கால நிதி அனைவருக்கும் மிக அவசியம்… ஏன் தெரியுமா?

இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத

சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள் எப்போது உருவாகும் என்றே கணிக்க முடியாது. ஆனால், திடீரென ஏற்படும் இந்த அவசர செலவுகளைச் சமாளிக்க நம் ஒவ்வொருவரிடமும் அவசர கால நிதி (Emergency Fund) கட்டாயம் இருக்க வேண்டும்.

ஏன் அவசியம்?

எதிர்பாராமல் ஏற்படக்கூடிய திடீர் செலவுகள் ஒருவரைக் கடனில் தள்ளாமல் இருக்கவும், நீண்ட நாள் முதலீட்டைப் பதம் பார்க்காமல் இருக்கவும் இது மிகவும் அவசியம். மேலும், பணிபுரியும் நிறுவனம் திடீரென மூடப்பட்டாலோ வேலை இழப்பு ஏற்பட்டாலோ, அடுத்த வேலையில் சேரும் வரை குடும்பச் செலவு பாதிக்காமல் இருக்கவும் இந்த அவசர கால நிதி (எமர்ஜென்ஸி ஃபண்டு) அனைவருக்கும் அவசியம்.

பாலிசிகள் மட்டுமே கைகொடுக்காது!

எதிர்பாராத திடீர் விபத்து மற்றும் உடல்நலப் பாதிப்பின்போது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும் என்றாலும், அதை நம்பி மட்டுமே இருந்துவிட முடியாது. காரணம், ஒரு ஹெல்த் பாலிசியில் அனைத்து நோய் பாதிப்புகளுக்கும், அனைத்துச் செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பொதுவான ஹெல்த் பாலிசிகளில் பற்களில் ஏற்படும் பாதிப்புகள், பிரசவச் செலவுகள் போன்றவற்றுக்கு கவரேஜ் இருக்காது. அவசரகால நிதி வைத்திருக்கும் பட்சத்தில், இந்தத் தேவைகளை எளிதாகப் பூர்த்திசெய்துகொள்ளலாம்.

நிதிப் பராமரிப்பு!

அவசர கால நிதியிலிருந்து, இடையிடையே ஏதாவது பணத்தை எடுத்துச் செலவுசெய்தால், மீண்டும் அதே அளவில் பராமரிப்பது அவசியம். உதாரணத்துக்கு, ஒருவர் அவசர காலச் செலவுக்கென சேர்த்துவைத்திருந்த 1,00,000 ரூபாயில் 25,000 ரூபாயைத் திடீரென ஏற்பட்ட மருத்துவச் செலவுக்கு செலவிட்டிருந்தால், அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அந்த 1,00,000 ரூபாயை உயர்த்திட வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஏதாவது நிதிப் பிரச்னை வந்தால், சிரமம் இல்லாமல் அதைச் சமாளிக்க முடியும்.

லிக்விட் ஃபண்டு திட்டங்கள்!

அவசர கால நிதிக்கான தொகை மொத்தமாகச் சேர்ந்தவுடன், அதில் சுமார் 20% தொகையை வங்கிச் சேமிப்புக் கணக்கு, மீதியை லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதுவைக்க வேண்டும். இதில், 5% முன்பின் இருக்கலாம். அப்போதுதான் இந்த அவசர கால நிதி மூலமும் சிறிய வருமானத்தை ஈட்ட முடியும்.

தற்போது, லிக்விட் ஃபண்டு திட்டங்களில் டெபிட் கார்டு வசதி வந்துவிட்டன. இதன்மூலம், முதலீட்டின் 50 சதவிகிதத் தொகையை ரொக்கமாக ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்துக்கொள்ள முடியும். மொத்தத் தொகையையும் எடுக்கவேண்டுமெனில், காலையில் யூனிட்டுகளை விற்றால், மதியத்துக்கு மேல் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும். அதாவது, ஒரே நாளில் பணத்தை எடுத்துவிட முடியும். எனவே, லிக்விட் ஃபண்டுகள் சிறந்தது. சேமிப்புக் கணக்கைவிட சற்று கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

* இந்த அவசர கால நிதிக்கான முதலீட்டில் முதலீடு செய்யும்போது, மூலதனத்துக்கு இழப்பு வராமல் பார்த்து, முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வுசெய்வது அவசியம்.

* அவசர காலத் தேவைக்கான தொகையை முதலீடு செய்யும்போதோ அல்லது அவசரத் தேவைக்கு எடுக்கும்போதோ, கட்டணமில்லாமல் இருக்க வேண்டும். இந்த சேமிப்பு, லாப நோக்கத்திற்கானது மட்டும் அல்ல. அதேசமயம், லாபம் தரக்கூடிய இடங்களில் சேமிப்பதும், தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும்படி அந்த சேமிப்பை அமைத்துக்கொள்வதும் ரொம்பவே முக்கியம்.

* குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எமர்ஜென்சி ஃபண்டு முதலீட்டை மேற்கொள்ள வேண்டாம்.

* குடும்பத்தில் வயதானவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருந்தால், சற்று கூடுதலாக இந்த எமர்ஜென்சி ஃபண்டு வைத்திருப்பது நல்லது.

* அவசர காலச் செலவுக்கான நிதியைக் கணவன்- மனைவி இணைந்து ஜாயின்ட் கணக்கில் வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் ஒருவருக்கு அசம்பாவிதம் ஏற்படும்போது மற்றவர் சிரமம் இல்லாமல் பணத்தை எடுத்து செலவு செய்ய முடியும்.

‘எமர்ஜன்ஸி ஃபண்டு’ அனைவருக்கும் ஏன் தேவை என்பது இப்போது புரிந்திருக்கும். அந்த நிதி இல்லாதவர்கள், தயவுசெய்து அதை உடனே உருவாக்குங்கள்!

%d bloggers like this: