Advertisements

மார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்!

ஸ்பென்சர் பிளாசாவில் கூட்டமே இல்லாத ஹோட்டலில் நமக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தார் கழுகார். கையில் நிறைய பத்திரிகைகள் இருந்தன. அதில் ‘நமது அம்மா’வை நம் முன்னே வைத்து அதில் வந்திருந்த கவிதையைக் காண்பித்தார் கழுகார்.

`சத்தியத்து கோட்டையும்… சாத்தான்கள் நோட்டமும்’ என்ற தலைப்பில் இருந்த அந்தக் கவிதையைப் படித்துவிட்டு, ‘‘சசிகலாவையும், தினகரனையும் கடுமையாக விமர்சிக்கிறதே இந்தக் கவிதை… பின்னணி என்னவோ?” என்றோம். விளக்க ஆரம்பித்தார் கழுகார்.

‘‘அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே இந்தக் கவிதை கடும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ‘சித்ரகுப்தன்’ என்ற பெயரில் ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் எழுதியிருக்கும் இந்தக் கவிதையில், தினகரனை ‘கூறுகெட்ட குக்கர்’ என்றும், சசிகலாவை ‘மண்ணுளிப்பாம்பு’ என்றும், ‘கோல்டன் மிடாஸ் மதுபானஆலையை நடத்தி கும்மாளம்போட்ட நச்சுக்கிருமிகள்’ என்றும் வரிக்கு வரி வாரியிருக்கிறார்கள்!’’

‘‘ஏன் இந்தக் கோபம்?’’

‘‘ `தொண்டர்கள் கூடி நடத்துகிற தூயநதிச் சொரூபமாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இணைக்கரத்தால் நடத்தும் கோட்டைக்குள் அந்தச் சாத்தான்கள் ஒருநாளும் சரசமாட முடியாது, இது சத்தியம்’ என்று முடிகிறது கவிதை. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ‘எடப்பாடி தரப்புடன் சசிகலா தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது’ என்ற பலமான கருத்து அ.தி.மு.க-வுக்குள் சில மாதங்களாகவே பேசப்படுகிறது. எடப்பாடி தரப்பிலும் இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இந்த ரகசியச் சந்திப்பு, இரண்டு மூத்த அமைச்சர் களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்சியினரை சமாதானம் செய்யவே இப்படி ஒரு கவிதையை எடப்பாடி வெளியிட வைத்துள்ளாரா என்று ஒரு தரப்பு யோசிக்கிறது.’’

‘‘கவிதை இப்படி இருக்கிறது… ஆனால், எடப்பாடி வெளியிட்ட அரசாணை ஒன்று பன்னீர்செல்வம் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளதாமே?’’

‘‘ஆம், கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசு ஆணை ஒன்றை வெளியிட்டது. அதில் `7,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அந்ததந்த உள்ளாட்சி அமைப்புகளிலேயே அனுமதி வாங்கிக்கொள்ளலாம்’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஓ.பி.எஸ் கட்டுப் பாட்டில் உள்ள நகர ஊரமைப்புத் துறையின் கீழுள்ள உள்ளூர் திட்டக் குழுமம், பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர ஊரமைப்பு இயக்குநரகம் போன்றவற்றில்தான் திட்ட அனுமதி வாங்க வேண்டியிருந்தது. இப்போது அந்தந்த மாநகராட்சிகளே அனுமதி வழங்கலாம் என்ற அரசாணை மூலம், வேலுமணி துறைக்கு சத்தமில்லாமல் இந்த பவர் மாற்றப்பட்டிருக்கிறது. ‘பசையான’ பவர் கைவிட்டுப் போயிருப்பதில் கொந்தளித்துப்போயிருக்கிறாராம் பன்னீர். ஆனாலும் அடுத்த ஆண்டு மார்ச் வரை அமைதியாவே இருக்கப்போகிறாராம்!’’

‘‘அதென்ன மார்ச் மாதம் வரை?’’

மிஸ்டர் கழுகு: மார்ச் வரை மௌனம் காக்கும் பன்னீர்!

‘‘இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்… இவர் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் டெல்லி மேலிடம், மார்ச் வரை அவரைப் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறதாம். சசிகலாவின் விடுதலையும் அதற்குள் நடந்துவிடும் என்பதால், அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.’’

‘‘சசிகலா விவகாரத்தில் வேறு ஏதேனும் அப்டேட் இருக்கிறதா?’’

‘‘சுப்பிரமணியன் சுவாமியின் தூதுவராக சசிகலாவை சந்திரலேகா சந்தித்தது நினைவிருக் கிறதா… அந்தச் சந்திப்பின்போது எடப்பாடி தரப்புடன் இணக்கமாகப் போகச்சொல்லி சசிகலாவிடம் சொல்லப் பட்டதாம். அந்தச் சந்திப்புகுறித்து பெங்களூ ருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விவரங்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு வந்த பதிலில், ‘ஒரே நாளில் சந்திரலேகா, தினகரன் உட்பட ஆறு பேர் சசிகலாவைச் சந்தித்தனர்’ என்று தகவல் கிடைத்திருக்கிறது. சிறை விதிப்படி நான்கு பேருக்குமேல் சிறையில் உள்ளவர்களைச் சந்திக்க முடியாது. சசிகலாவை ஆறு பேர் ஒரே நேரத்தில் எப்படிச் சந்திக்க அனுமதித்தார்கள் என்று கேட்டு சிறைத்துறைக்கு எதிராக வழக்கு போடப் போகிறாராம் அவர். உண்மையில், சசிகலாவை சந்திரலேகா சந்தித்த நாளில், தன்னால் சந்திக்க முடியாமல் 15 நாள்கள் கழித்தே சந்தித்ததாக தினகரன் ஏற்கெனவே பேட்டி கொடுத்திருக்கிறார். அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவலை சிறை அதிகாரிகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், இந்த வழக்கு எடுபடுமா என்பது சந்தேகமே!’’

‘‘சிறையில் இருந்தாலும் சசிகலாவைச் சுற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை என்று சொல்லும்!”

‘‘ஆமாம்… இடைத்தேர்தலில் தினகரன் கட்சி நிற்காமல்போனதற்கு சசிகலா தரப்பிலிருந்து கரன்ஸி வந்து சேராததும் ஒரு காரணம் என்று ஏற்கெனவே உமக்குச் சொல்லியிருந்தேன். இப்போது சசிகலா கொடுத்துவைத்த கரன்ஸியை வசூல்செய்யும் பணியில் இறங்கியிருக்கிறாராம் சென்னையின் அதிரடிப் பிரமுகர் ஒருவர். சசிகலா வெளியே வருவதற்குள் பெரும்தொகையை இந்த டீம் வசூல் செய்துவிடும் என்கிறார்கள்.’’

‘‘இடைத்தேர்தல் முகாம்கள் எப்படி இருக்கின்றன?’’

‘‘அமைச்சர்கள், தொகுதிகளில் முகாமிட வில்லை என்ற குறை இருக்கிறது. ‘பிரதமரின் மகாபலிபுரம் விசிட்டுக்குப் பிறகே அமைச்சர்கள் முழுவீச்சில் களமிறங்குவார்கள்’ என்று தலைமையிலிருந்து சொல்லிவிட்டார்களாம். இதனால் கரன்ஸியைக் களத்தில் இறக்குவதில் அ.தி.மு.க கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது.’’

ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்

‘‘காமராஜர் நினைவு நாளில் டெல்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு ஒருவரும் மாலை அணிவிக்கவில்லையாமே?’’

‘‘ஏற்கெனவே இப்படி ஒரு பிரச்னையைத்தான் கராத்தே தியாகராஜன் கிளப்பியிருக்கிறார். ‘கடந்த ஆண்டு கலைஞர் சிலைத் திறப்பு விழாவின்போது சோனியாவையும் ராகுலையும் அண்ணா நினைவிடத்துக்கு அழைத்துச் சென்று மரியாதை செலுத்தவைத்த ஸ்டாலின், போகும் வழியில் இருந்த காமராஜர் நினைவிடத்துக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டார். நாங்குநேரிக்கு பிரசாரத்துக்குப் போகும்முன் காமராஜர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வேண்டும்’ என்று அறிக்கை விட்டிருக்கிறார். இந்த விவகாரத்தை வைத்தே தி.மு.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே காமராஜரை மதிக்கவில்லை என்ற பிரசாரத்தையும் கையில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் ஆளுங்கட்சி.’’

‘‘ராதாபுரம் தொகுதியில் ஜெயித்த இன்பதுரைக்கு, துன்பம் வரும் போலிருக்கிறதே?’’

‘‘வாய்ப்பு இருக்கிறது… 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அப்பாவுவை வென்றார் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை. அந்த 49 வாக்குகள்தான் இப்போது சிக்கலாக மாறியுள்ளது. ‘201 தபால் ஓட்டுகளை செல்லாத ஓட்டுகளாகக் கணக்கிட்டதால்தான், நான் தோல்வியடைந்து விட்டேன்’ என்று அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட அப்பாவு, நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்றம் அந்தத் தபால் ஓட்டுகளை எண்ணச் சொல்லியிருக்கிறது. தபால் ஓட்டுகள் என்றால் அது அரசு ஊழியர்களின் ஓட்டுகளாகத்தான் இருக்கும். அவை தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கு தடை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் இன்பதுரை.’’

சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

‘‘ம்!’’

‘‘இதேபோல் நீதிமன்றச் சிக்கலை கார்த்தி சிதம்பரமும் சந்திக்கக்கூடும் என்கிறார்கள். அக்னி குழுமத் தலைவர் ஜெயபிரகாஷ், கார்த்தி சிதம்பரம் இடையே கிழக்குக் கடற்கரை சாலையில் ஓர் இடம் வாங்கியது தொடர்பான வழக்கு, சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் கார்த்தி சிதம்பரத்தைக் குற்றவாளியாக்கும் வேலைகள் நடந்து வருகின்றனவாம். வழக்கை தினம்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால், அவரது பதவிக்கும் ஆபத்து வரலாம் என்கிறார்கள்.’’

‘‘ஜெயித்தும் நிம்மதியில்லையா?’’

‘‘இன்னும் பட்டியல் நீள்கிறது… கேளும். 2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் உள்ளது. திடீரென அந்த வழக்கு விவரங்களை மத்திய உளவுத்துறை நோண்டிவருகிறதாம். எதற்கு என்று இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்!’’

‘‘எப்படியிருக்கிறார் சிதம்பரம்?’’

‘‘சிதம்பரத்துக்கு அக்டோபர் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷாவை 96 நாள்கள் காவலில் வைத்திருந்தார்கள். அந்தக் கணக்கை சரிசெய்ய வேண்டும் என்று வழக்கை இழுக்கிறார்களாம். 96 நாள்கள் வரை… அதாவது இரண்டு மண்டலங்கள் உள்ளே வைத்து ‘மண்டகப்படி’ நடத்த திட்டமிட்டிருக்கிறார் களாம்!’’

‘‘தூர்தர்ஷன் துணை இயக்குநர் வசுமதியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்களே?’’

‘‘பிரதமர் மோடியின் உரையை நேரலை செய்யாததுதான் காரணம் என்கிறார்கள். திட்டமிட்டே இதை நேரலை செய்யவில்லையா, தற்செயலாக நடந்ததா என விசாரிக்கிறார்களாம்’’ என்ற கழுகார், ‘பைபை’ சொல்லிப் பறந்தார்.

இங்கே சொன்னால்அங்கே நடக்கிறது!

தி.மு.க தலைவரின் நெருக்கமான உறவினர் ஒருவர், தமிழக அரசின் சுகாதாரத் துறையில் முக்கிய அதிகாரியாக இருக்கிறார். அவர் பணிக்கு சரியாக வருவதில்லை என்று சமீபத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாம். சம்பந்தப்பட்ட நபரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள, அறிவாலயத்திலிருந்து ஆளும்தரப்புக்கு போன் சென்றிருக்கிறது. மறுநாளே பதவி உயர்வுடன் பணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் அந்த அதிகாரி!

வெட்கத்தில் சிவந்த அமைச்சர்!

மைச்சர் ஒருவர், பெண் அதிகாரியுடன் ‘நெருக்கமாக’ இருக்கும் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது அல்லவா… இதுகுறித்து தன் நண்பர்களுடன் மனம்விட்டு ‘குளறிய’ மூத்த அமைச்சர் ஒருவர், ‘‘அந்தாளுக்கு எங்கேயோ மச்சம்யா. முந்நூறு சுகர் வெச்சுக்கிட்டு, புகுந்து விளையாடுறான்..!” என்று பொங்கித் தீர்த்தாராம். அருகில் இருந்த நண்பர் ஒருவர் “அண்ணே… நீங்க பண்ணாததா, குளிர்ப்பிரதேசத்துல மொத்த வித்தையையும் இறக்கி வெச்சிட்டீங்களாமே!” என்று கமென்ட் அடிக்க, “அடபோப்பா… நீ வேற” என்று வெட்கத்தில் சிவந்தாராம் அமைச்சர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: