அதிர்வலை சிகிச்சையின் அற்புதங்கள்!

நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எலும்பியல் மருத்துவர் ராமகுருவிடம் இதுபற்றி விளக்கமாகக் கேட்டோம்.
”அதிர்வு அலை சிகிச்சையை ஆங்கிலத்தில் Shockwave therapy என்று சொல்கிறோம். இந்த சிகிச்சை உருவானதன் பின்னால் ஒரு வரலாற்று காரணமே உண்டு. இரண்டாவது உலகப் போரின்போது தண்ணீர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. அந்த குண்டுகளின் அதிர்வுகளால் ராணுவ வீரர்களின் நுரையீரல் சேதம் அடைந்தது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதே நேரத்தில் 1950-ம் ஆண்டில் அதிர்வு அலைகளால் செராமிக் தகடுகள் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பிறகு 1968-ல் ஜெர்மனியில் அதிர்வு அலைகளுக்கும், நமது உடலில் உள்ள தசைகளுக்கும் இடையே உண்டான மாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 1985-ல்தான் முதன்முதலாக பித்தப்பையில் இருந்த கல் அதிர்வலை சிகிச்சை மூலம் உடைத்து எடுக்கப்பட்டது. 1988-ல் இணையாத எலும்புகளுக்கு இந்த சிகிச்சை பயன்படுத்தப்பட்டது. 1992-ல் பிறவியிலேயே ஏற்படும் எலும்பு வளைவு நோய்க்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது.”

சிகிச்சை எப்படி செயல்படுகிறது?

”ஒலி அல்லது சத்தத்தில் உண்டாகும் அதிர்வு அலைகளைக் கொண்டு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதிகமான சக்தியை உடைய இந்த அதிர்வு அலைகள் வலி உள்ள தசைகளுக்கும், தசைநாண்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. அதிர்வு அலைகள் தசைகளிலும், தசை நாண்களிலும், எலும்புகளிலும் உள்ள தேய்வுகளைச் சீரமைப்பது மற்றும் மீளுறுவாக்கம் செய்கிற பணியை மேற்கொள்கிறது. இந்த அதிர்வலைகள் அழுத்தத்தால் அவ்வப்போது மாறுபடுகிறது. காற்றில் அழுத்தம் உண்டாக்கப்பட்டு அது கடத்தல்மானி மூலமாக கடத்தப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது.”

மருத்துவ குணங்கள்…

* புதிதாக ரத்த நாளங்கள் உற்பத்தியாகிறது.
* நீண்ட நாள் அழற்சி நோய் சரியாக்கப்படுகிறது.
* தசைநார்கள் உற்பத்தி அதிகமாகிறது.
* வலியை உண்டுபண்ணக்கூடிய பொருள் அவ்விடத்திலிருந்து அகற்றப்படுகிறது.
* வலியை தூண்டக்கூடிய பகுதியை கட்டுப்படுத்துகிறது.
* சுண்ணாம்பு படிமத்தைக் குறைக்கிறது.
* இந்த சிகிச்சையில் அதிசக்தி வாய்ந்த ஒலி அலைகள் தசைகளுடன் வேலை செய்து அவைகளை சரிபடுத்தவும், செல் வளர்ச்சிக்காகவும், வலியை போக்கவும், மூட்டுகளின் அசைவுகளை சரியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

அதிர்வு அலை சிகிச்சை பயன்பாடுகள்..
.

* தோள்பட்டை மூட்டுவலி மற்றும் துள்ளிக் குதிப்பதால் ஏற்படும் குதிகால் மூட்டுவலிக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
* முழங்கை மூட்டினைச் சுற்றி உண்டாகும் வலிக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. குறிப்பாக டென்னிஸ், மட்டைப்பந்து, இறகுப்பந்து விளையாடுபவர்கள், மெக்கானிக்குகள், வீட்டு வேலை அதிகம் செய்யும் பெண்கள் ஆகியோருக்கு டென்னிஸ் எல்போவில் உண்டாகும் வலியை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
* குதிகாலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும், குதிகால் எலும்பில் சிறிய முள்போன்று எலும்பு துறுத்திக் கொண்டிருப்பதாலும் உண்டாகிற குதிகால் வலிக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
* தசை நாண்களில் ஏற்படும் தளர்வு மற்றும் அழற்சியினால் உண்டாகும் வலி, தசை நாண்கள் எலும்புடன் சேரும் இடத்தில் ஏற்படும் வலி, தசை நாண்கள் எலும்பை இயக்க அதை இழுப்பதால் சுண்ணாம்புச் சத்து அதில் படிந்து உண்டாகும் வலிகளுக்கும் இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது.
* விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் கால்வலி மற்றும் உடலிலுள்ள அனைத்து வகை மூட்டுகளிலும் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் இந்த சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
* பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் அகற்ற உதவுகிறது.
* சேராத எலும்பு முறிவை சேர்த்து வைப்பதற்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
* நரம்புத் தளர்ச்சிக்கு இந்த சிகிச்சை உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த சிகிச்சை யாருக்கு கொடுக்கக்கூடாது?

”காயங்களில் சீழ் பிடித்திருக்கும் நபர்கள், சரும நோயுடைய நபர்களுக்குக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு 3 மாத காலம் ஆகும் வரையிலும் இந்த சிகிச்சை கொடுக்கக்கூடாது.”

எப்படி சிகிச்சை கொடுக்கப்படுகிறது?

”மூன்று கட்டமாக இந்த அதிர்வலை சிகிச்சை கொடுக்கப்படுகிறது. முதலில் வலி இருக்கும் இடத்தைத் துல்லியமாக அடையாளமிட்டுக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த இடத்தில் ஜெல்லி போன்று இருக்கும் மருந்துப் பொருளை தடவ வேண்டும். இந்த ஜெல்லியானது அதிர்வலைகளை மெதுவாகவும், அதிக திறனோடும் தசைகளுக்கு அனுப்ப உதவுகிறது. இறுதியில் அதிர்வலை மருத்துவ கருவியை அந்த ஜெல்லியின் மீது லேசாக அழுத்தி சிகிச்சை கொடுக்க வேண்டும்.

தற்போது உலகமெங்கும், அதிலும் குறிப்பாக இணையாத எலும்புகளை இணைக்க இந்த அதிர்வலை சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பதால் குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சையை தாராளமாக கொடுக்கலாம். அழுத்தம் அதிகம் உள்ள அதிர்வலைகள் தேவைப்படும்போது மருத்துவர் வழிகாட்டுதல்படி மயக்க மருந்து கொடுத்தும் இந்த சிகிச்சையை கொடுக்கலாம்” என்கிறார் மருத்துவர் ராமகுரு.

%d bloggers like this: