ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆயிருவ பார்த்துக்க… என்னடா இது புது உருட்டா இருக்கு!

சாப்பிட்டாச்சா மக்களே.. வாங்க.. ஒரு ஜாலியான மேட்டரைப் பார்ப்போம்… இப்போதெல்லாம் ஒரு மேட்டர் ட்விட்டர் ட்ரெண்ட் ஆனால்தான், அதுக்கு ஒரு பப்ளிசிட்டியே கிடைக்குது. ஒரு விஷயத்தை எப்பாடுபட்டாவது

ட்ரெண்ட் ஆக்கியே தீருவது என அதற்கு தொடர்புடைய ஆட்கள் மெனக்கெட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு ஒரு நடிகரின் படம் பற்றிய அறிவிப்போ, அல்லது படத்தின் இசை வெளியீடோ இருந்தால், அன்றைய தினம் அதுதான் ட்விட்டரில் பேசுபொருளாக இருக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து ட்வீட்டுகளை போட்டு ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள்.

இதைத்தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்கள் நடக்கும்போது, அவை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ட்ரெண்ட் ஆகின்றன. உதாரணத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் மாமல்லபுரம் வருகைதான் இன்று சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. எனவே ட்விட்டரிலும் இதையொட்டி #GoBackModi #TNWelcomesModi #TNWelcomesXiJinping போன்ற Tag-கள் காலை முதல் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. இதில் #GoBackModi ஒரு கோஷ்டி, #TNWelcomesModi ஒரு கோஷ்டி. இரண்டு தரப்பிற்கும் இடையிலான ட்விட்டர் போரை வேடிக்கை பார்க்கவே ஒரு பெரும்கூட்டம் இருக்கிறது.

எப்படி டிரண்ட் ஆகிறது

அதெல்லாம் சரி, இந்த டேக்குகளை உருவாக்குபவர்கள் யார்? எப்படி ஒரு டேக்கை தீர்மானிக்கிறார்கள்? அதை எப்படி ட்ரெண்ட் ஆக்குகிறார்கள்? ஒரு விஷயம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக என்ன செய்ய வேண்டும்? இப்படி நிறைய கேள்விகள் அடிக்கடி நமக்கு தோன்றும். இதற்கான பதில்தான் இந்த கட்டுரை.

முதலில் ஒரு டேக் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.

உதாரணத்திற்கு இன்று மோடியும், சீன அதிபரும் சென்னை வருகிறார்கள் என்றால், இதை எதிர்க்க வேண்டும் என்று நினைப்போரும், ஆதரிக்க விரும்புவோரும் இதற்கான டேக்கை வடிவமைக்கும் பணியை முன்னதாகவே தொடங்கிவிடுவர். பிராந்திய மொழி டேக்குகளை விட ஆங்கிலத்தில் போடப்படும் டேக்குகள் தான் அதிகம் ட்ரெண்டாகும் என்பதால் பெரும்பாலும் ஆங்கில டேக்குகளே தேர்வு செய்யப்படுகின்றன. அதிலும், எழுத்துப்பிழைக்கு வாய்ப்பு இல்லாத வகையில், எளிமையான டேக்காக இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் அது மக்களை சென்று அடையும்.

அதி வேக டிவீட்டுகள்

#GoBackModi, #TNWelcomesModi இரண்டுமே எழுத்துப்பிழைக்கு வாய்ப்பு அதிகம் இல்லாத டேக்குகள்தான். பின்னர் முடிவு செய்யப்பட்ட அந்த டேக்கை வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தங்கள் குழுவினருக்கு தெரியப்படுத்தி, நாளை இத்தனை மணிக்கு இந்த டேக்கில் பதிவிடத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ட்ரெண்டிங்கை தீர்மானிப்பதில் டைமிங்கிற்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. ஒரே டேக்கில் குறுகிய நேரத்திற்குள் நிறைய பேர் பதிவுகளை இட்டால்தான் ட்விட்டர் அதை ட்ரெண்டிங்கில் காட்டும். காரணம், ட்விட்டரின் அல்காரிதம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ட்விட்டரில் சுமார் 500 மில்லியன் ட்வீட்கள் போடப்படுகிறதாம். அதாவது ஒரு விநாடிக்கு சராசரியாக 5787 ட்வீட்டுகள். இந்த மாபெரும் கூட்டத்தில் உங்கள் சமாச்சாரம் கண்ணில் பட்டு, ட்ரெண்ட் ஆக வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

அரை மணி நேரத்தில் 2000

ஒரு விஷயத்தைப் பற்றி நாள் முழுவதும் 10000 ட்வீட் வருகிறது என்று வைத்துக்கொள்வோம், அது ட்ரெண்டாகாமல் போய்விடும். அதேசமயம் அதே விஷயத்தை பற்றி அரைமணி நேரத்திற்குள் வெறும் 2000 ட்வீட் வருகிறது என்றால் அது உடனே ட்ரெண்டாகிவிடும். எனவே நீங்கள் ஒரு விஷயத்தை ட்ரெண்ட் ஆக்க விரும்பினால், ஒரே சமயத்தில் எல்லோரும் களம் இறங்கி கலக்க வேண்டும், அப்போதுதான் அது வைரல் கன்டென்டாக மாறும்.

ட்ரெண்டிலும் உள்ளூர் ட்ரெண்டு, தேசிய அளவிலான ட்ரெண்டு, உலக அளவிலான ட்ரெண்டு என்று நிறைய இருக்கிறது. கடந்த முறை மோடி சென்னை வந்த போதெல்லாம், நம்ம ஆட்கள் வெறித்தனமா ட்வீட் போட்டு அதை உலக ட்ரெண்டிங்கில் வரவைத்துவிட்டார்கள் என்பது தனிக்கதை.

ஐடி விங்குகளின் வேலை

அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை, தங்களின் ஐடி விங்குகளை வைத்து இதுபோன்ற வேலைகளை செய்கின்றனர். போதிய கட்டமைப்பு இல்லாத சிறிய கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற விஷயங்களில் உதவுவதற்கென்றே சில டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இருக்கின்றன. இவர்கள் ட்ரெண்ட் ஆக்குவதையே தொழிலாக செய்பவர்கள். இந்த விஷயத்தை ட்ரெண்ட் பண்ணித் தருகிறோம் என்று சினிமாத்துறையிலும், அரசியல் துறையிலும் நிறைய பேர் இன்று கடைவிரித்திருக்கிறார்கள். ஒரு விஷயம் உண்மையிலேயே மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறதா அல்லது இதுபோல காசுவாங்கிக் கொண்டு யாராவது ட்ரெண்டு பண்ணித் தருகிறார்களா என்பதையும் கொஞ்சம் மெனக்கெட்டால் கண்டுபிடித்துவிட முடியும்.

காப்பி பேஸ்ட் கும்பல்கள்

ஒருமுறை ஒரு முக்கிய அரசியல் தலைவரின் நிலைப்பாடு ஒன்றை ஆதரித்து ஒரு டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ட்வீட் போட்டவர்களின் புரொபைல்களை புரட்டிப் பார்த்ததில், பெரும்பாலான ஐடிக்கள் வட இந்தியாவை சேர்ந்தவையாக இருந்தன. மேற்கு வங்கத்திலும், குஜராத், உபி போன்ற மாநிலங்களில் இருந்து தமிழில் ட்வீட் போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் காப்பி பேஸ்ட் கும்பல்கள். நாம் மேலே சொன்ன மார்க்கெட்டிங் நிறுவனம், 10 அல்லது 15 ட்வீட்களை உருவாக்கி, சுற்றலில் விடும், அதை அவர்களின் நெட்வொர்க்கில் இருக்கும் ஆட்கள் அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து ட்ரெண்ட் ஆக்குவார்கள். இதற்கு ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்கப்படும்.

பாட்ஸ் வைத்தும் டிரண்டிங்

இது இல்லாமல் Bots என்று ஒரு வகை இருக்கிறது. இது ஒருவகை போலிக் கணக்குகள். ட்விட்டரில் இதுபோல கிட்டத்தட்ட 48 மில்லியன் பாட்ஸ் இருக்கிறதாம். இதுபோன்ற பாட்ஸ்களை பயன்படுத்தியும் பல நேரங்களில் ட்ரெண்டிங்குகள் வடிவமைக்கப்படுகின்றன. இதை எல்லாம் கட்டுப்படுத்த ட்விட்டர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதேபோல ட்விட்டரில் இன்ஃப்ளூயன்சர்ஸ் என ஒரு சாரார் இருக்கிறார்கள். அதாவது நிறைய பின்தொடர்பாளர்களை கொண்டிருப்பவர் இன்ஃப்ளூயன்சர் என்று அறியப்படுவார். இவர்களை மடக்கி, நன்றாக “கவனித்தாலும்” உங்களின் செய்தியை ட்ரெண்ட் ஆக்க உதவுவார்கள். பாலிவுட் பிரபலங்கள் இதுபோன்ற கமர்ஷியல் ட்வீட்கள் மூலமாகவும் எக்கச்சக்கமாக கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். ஒரு ட்வீட் போட ரூ 2 லட்சம் முதல் ரூ 50 லட்சம் வரை இந்த பிரபலங்கள் வசூலிக்கிறார்களாம். சமீபத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய் உள்ளிட்ட 30 பிரபலங்கள் இப்படி காசு வாங்கிக்கொண்டு ட்வீட் போட சம்மதித்த சர்ச்சையில் சிக்கினர்.

தானா சேர்ந்த கூட்டமல்ல!

மொத்தத்தில் இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, ட்விட்டர் ட்ரெண்ட் என்பது விளையாட்டுத்தனமான விஷயம் அல்ல. ஒரு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது, ஒருவரின் புகழை கெடுப்பது முதல் ஒரு படத்தின் வசூலுக்கு வழிவகுப்பது வரை ஒவ்வொரு ட்வீட்டின் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு ட்ரெண்டின் பின்னாலும் உள்நோக்கத்துடன் வேலை செய்யும் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.

எனவே அடுத்தமுறை ஏதேனும் வைரல் டேக்கை பயன்படுத்தி ட்வீட் போடும் முன், இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு போடுங்கள்.

%d bloggers like this: