குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -விருச்சிகம்

விருச்சிகம்

 

விருச்சிகம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்கு வார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.      

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமான ஒருவரைச் சந்திப்பீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில்  செல்வதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. சிலர் மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மணமாகாத பெண்களுக்கு திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று புதிய வேலையில் அமர்வார்கள்.

மாணவ மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவார்கள். வருமானம் உயரும்.

  பரிகாரம்: கிருத்திகை தினங்களில், திருச் செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள்; சகல வளங்களும் பொங்கிப்பெருகும்.

%d bloggers like this: