குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மகரம்

மகரம்

மகரம்

ங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12-ம் வீடான விரயஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும்.

புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசு அனுமதி கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவிக்குள் வரும் சிறு பிரச்னைகளைப் பெரிதாக்க வேண்டாம்.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிப்பது நல்லது. சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநாவசியமாக யாரிடமும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்குக் குடிபெயர்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் ஒருபக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், பயணத்தில் கவனமாக இருங்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துபோட்டுப் பார்க்கவேண்டி வரும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.

மாணவ, மாணவியர் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழனறு ஆலங்குடி குருபகவானை வழிபட்டு வாருங்கள்; தடைகள் நீங்கும்.

%d bloggers like this: