குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கும்பம்

.

கும்பம்

 

கும்பம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் வாழ்வு வளம்பெறும். லாபஸ்தான குரு பகவான் குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். உறவினர்கள் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.

குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளையசகோதர வகையில் அனுகூலம் உண்டு.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகமடைவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் சுகஸ்தானாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். 6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 12-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் திடீர்ப் பயணங்கள் உண்டு.

வியாபாரத்தில் வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச்சந்தை, இரும்பு, கட்டட உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களிடையே உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

இளம் பெண்களுக்குக் கல்யாணம் கைகூடும். வரும். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள். புதிய இடத்தில் உத்தியோகம் அமையும்.

மாணவ மாணவியர் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.

கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து வீறுநடை போடுவார்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

  பரிகாரம்: காஞ்சி மாவட்டம், கீழ்படப்பையில் அருளும் ஸ்ரீவீரட்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்; மகிழ்ச்சி தங்கும்.

%d bloggers like this: