ரிஷபம் :

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். பயணங்களும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருந்துகொண்டேயிருந்தாலும் வருமானம் குறையாது. உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும் பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வது நல்லது.
ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். வேலைச்சுமையால் தூக்கம் குறையும்.
குரு பகவானின் பார்வை: குரு பகவான் 2-ம் வீட்டைப்பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சிலர் உங்களுடைய உழைப்பைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்ப்புகள் குறையும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.
மகரத்தில் குரு பகவான்: 28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 9-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
வியாபாரத்தில் பழையதவறுகள் நிகழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலியுங்கள். கடையை இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல் மற்றும் ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது.
பெண்கள் சிறிய சந்தர்ப்பங்களைக்கூடப் பயன்படுத்தி முன்னேறுவார்கள். திருமண விஷயத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. மாணவ மாணவியர் கடைசிநேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
கலைத்துறையினர் போராடி சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அரவணைத்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: பிரதோஷ நாளில், சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் திருப்புலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; வளம் பெருகும்