குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மிதுனம்

மிதுனம் :

மிதுனம்

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்குநேராகப் பார்க்கவிருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாகப் பணம் வரும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.    

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவார்கள். 

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். 

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்துசெய்யலாம். சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு லாபம் ஈட்டுவீர்கள்.  ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.அதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.

பெண்கள் கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

மாணவ மாணவியருக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டில் பரிசு பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடிவரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். 

பரிகாரம்: ஏகாதசி தினங்களில், திருமலை வையாவூர் பிரசன்னவேங்கடேசரை வணங்கி வாருங்கள்; சகல சுபிட்சமும் கைகூடும்.

%d bloggers like this: