.

கடகம்
குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என்று கலங்க வேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.
வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு வசதியான பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே, மாற்றுவழியை யோசித்து வையுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
குரு பகவானின் பார்வை: குரு பகவான் குடும்பஸ்தானத்தைப் பார்ப்ப தால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.
மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். சிமென்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
பெண்கள் உயர்கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்துவந்த கருத்துமோதல் நீங்கும். மாணவ மாணவியர் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளுங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கித் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் பெறுவார்கள். மூத்த கலைஞர் களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
பரிகாரம்: கோபிச்செட்டிப்பாளையம் அருகில் பாரியூரில் அருளும் ஸ்ரீகொண்டத்து காளியை வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் பெருகும்.