குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -சிம்மம்

.

சிம்மம்

 

சிம்மம்

போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன்வைத்த காலைப் பின்வைக்காத நீங்கள், திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.

உங்களின் ராசிக்கு சுகஸ்தானமான 4-ம் வீட்டில் அமர்ந்து வீண் விரயத்தையும் ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான், 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் புதிய பாதையில் பயணிப்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் அமைவார்.

குழந்தைபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கு கைக்கு வரும். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் பார்வை: உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம்கொடுக்காதீர்கள். உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூரம், உத்திரம் 1-ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ஜீவனாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் அமர்வதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும் வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும் இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதிய தொழில் அல்லது புதிய கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். பெரிய பதவியில் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். தடைப்பட்ட திருமணம் நல்ல விதத்தில் முடியும். மாணவ மாணவியரின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு.

கலைத்துறையினர் புகழடைவார்கள். சிலருக்கு விருது கிடைக்கும். உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், பாளையம் எனும் ஊரில் அருளும் கதிர்நரசிங்கப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

%d bloggers like this: