குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -கன்னி

கன்னி

 

கன்னி

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம், பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நல்லது.

வீடு, மனை வாங்கும்போது சான்றிதழ்களைச் சரிபார்த்து வாங்குங்கள். உங்கள் சொத்தை விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக்கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குரு பகவானின் பார்வை: குரு உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்களின் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் நாட்டமின்மை, ஏமாற்றங்கள், திடீர்ச் செலவுகள் வரலாம். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் தனம் மற்றும் பாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5 வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகி யும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் கைகூடும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறிவரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.

பெண்களுக்குத் திருமணம் கைகூடும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்விப் பிரிவில் சேர அதிகம் செலவு செய்யவேண்டி வரும்.

கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும்.உங்களின் படைப்புகளுக்குக் காப்புரிமை செய்து கொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தரும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில், காஞ்சி மாவட்டம் குன்றத்தூரில் அருளும் திருஊரகப்பெருமாளை வழிபட்டு வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.

%d bloggers like this: