சசிகலாவை முடக்கும் பா.ஜ.க… பன்னீர் வைத்த நெருப்பு!

அறைக்குள் நுழைந்த வேகத்தில் அங்கு இருந்த ஸ்டூல் மீது ஏறி, கைகட்டி நின்ற கழுகார், “இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு, தமிழக பா.ஜ.க அலுவலகத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றதைப் பற்றி, கடந்த இதழில் கூறியிருந்தேன்.

‘அங்கு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இல்லை என்பதால், பொன்.ராதா கிருஷ்ணனைச் சந்தித்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அது தவறான தகவல். நீர் வெளியிட்டிருந்த சந்திப்புப் புகைப்படமே அதைச் சொல்லிவிட்டது. ஜெயக்குமாருடன் கேசவ விநாயகமும் அந்தப் படத்தில் இருக்கிறார்” என்று கம்மிய குரலில் சொன்னார்.

“படத்தையும் நீரே பார்த்துக் கொடுத்திருந்தால் தவறு நேர்ந்திருக்காதே…” என்றோம்.

“உண்மைதான். பல்வேறு வேலைகள் இருந்ததால், உமக்கே நேரடியாக அனுப்பச் சொல்லிவிட்டேன். அது என் பிசகுதான். கேசவ விநாயகம் பலருக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பதால், உம்முடைய குழுவினரும் அதைக் கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டது.”

“உண்மைதான்.”

“என்னிடம் பேசிய அ.தி.மு.க தரப்பினர், ‘கேசவ விநாயகத்தைச் சந்திப்பதற்காக ஜெயக்குமார் செல்லவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்திப்பதுதான் நோக்கம்’ என்று சொன்னார்கள். அதைத்தான் கேசவ விநாயகத்தைச் சந்திக்கவே இல்லை என்பதாக நான் தவறுதலாக உள்வாங்கிக்கொண்டேன். அதை அப்படியே உம்மிடமும் கூறிவிட்டேன். வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!’’

“தவற்றை உளமார ஒப்புக்கொள்பவர்கள், அதிலேயே உயர்ந்துவிடுவார்கள்” என்ற நாம்,

‘‘தி.மு.க – பா.ம.க இடையே அறிக்கைப் போர் முற்றிவருகிறதே?’’ என்று கேட்டோம்.

ஸ்டூலைவிட்டுக் கீழிறங்கிய கழுகார், ‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் கொடுத்த ஓர் அறிக்கைதான் ராமதாஸ் தரப்பை இவ்வளவு சூடாக்கிவிட்டது.’’

‘‘கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் குறித்த அறிக்கையா?’’

‘‘அதேதான்… வன்னியர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, 1969-ம் ஆண்டு இறந்தார். அவரின் மறைவுக்கு, ‘ஏழையாகப் பிறந்து… ஏழையாக இறந்தவர்’ என புகழஞ்சலி செலுத்தினார் கருணாநிதி. இப்போது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன் வன்னியர் சமுதாய இடஒதுக்கீட்டுக்குப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும். அதேபோல், அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தார்.’’

‘‘இதில் என்ன பிரச்னை?’’

‘‘அறிக்கையில் ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின். இவை மூன்றுமே பா.ம.க-வின் அடிநாதமான விஷயங்கள். குறிப்பாக இடஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் பேசுவதை ராமதாஸ் சுத்தமாக விரும்பவில்லையாம்.’’

ஸ்டாலின்

‘‘ஓஹோ!’’

‘‘மருத்துவரின் வெறுப்பு, அறிக்கையிலேயே எதிரொலித்தது. ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி பயமே ஸ்டாலினை இப்படி அறிக்கைவிடவைத்துள்ளது. வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க ஒன்றும் எளிதாகத் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 21 சொந்தங்களின் உயிரை இழந்தே இந்த இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 30 ஆண்டுகளாக பா.ம.க போராடிவருகிறது. அதில் 12 ஆண்டுகள் தி.மு.க ஆட்சிதான். வன்னியர் இடஒதுக்கீடு பற்றிப் பேசும் ஸ்டாலின், முதலில் அவர் கட்சியில் வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரட்டும். கோவிந்தசாமி நூற்றாண்டு விழாவைக்கூட நடத்தாதவர் ஸ்டாலின். கோவிந்தசாமி குடும்பத்துக்கு உரிய மரியாதையை கட்சியில் தரவில்லை. இப்போது எந்த நோக்கத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?’ என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.’’

‘‘தி.மு.க தரப்பு டென்ஷன் ஆகியிருக்குமே?’’

‘‘ஆமாம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வைத்து பதில் அறிக்கை கொடுத்தார்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பமும் இடஒதுக்கீடு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது என்பதுடன், தைலாபுரத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அவரைவைத்து ராமதாஸுக்கு எதிராக முரசொலியில் கட்டம் கட்டிவிட்டனர். பா.ம.க தரப்பில் துணை பொதுச்செயலாளர் வைத்தியநாதனைவைத்து இதற்கு பதிலடி கொடுக்க… இந்த விவகாரம் பற்றி எரிகிறது.

‘‘இதற்கு எப்போதுதான் முடிவாம்?’’

‘‘ராமதாஸ் தரப்பு, இந்த விவகாரத்தை லேசில் விட்டுவிடக் கூடாது என முடிவெடுத்திருக்கிற தாம். அதை அ.தி.மு.க-வும் ரசிக்கிறது. ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடிக்கு எதிராக வன்னியர் மத்தியில் புகைச்சல் இருப்பதால், இந்த விவகாரத்தைவைத்து விக்கிரவாண்டியில் வன்னியர் வாக்குகளைக் கவர நினைக்கிறது ஆளுங்கட்சி.’’

‘‘டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தித்திருக்கிறாரே ராமதாஸ்?’’

‘‘ஆமாம், அன்புமணி ராமதாஸ் மூலமே நேரம் வாங்கப்பட்டுள்ளது. எழுவர் விடுதலைக்கான கோரிக்கையை பிரதமரிடம் வைத்ததாக ராமதாஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும், தன் மகனின் அரசியல் எதிர்காலம் குறித்தும் சில விவரங்களை பிரதமரிடம் பேசியிருக்கிறார் ராமதாஸ். வெறும் அரசியல் சந்திப்பாக இது இருந்துவிடக் கூடாது என்பதால் கோரிக்கை மனுவையும் கொடுத்திருக்கிறாராம்.’’

மோடியுடன் ராமதாஸ், அன்புமணி

‘‘சசிகலா விவகாரம் மீண்டும் பூதாகரமாகிவிட்டதே?’’

‘‘அதை சசிகலாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒருபுறம் அவரை முன்கூட்டியே விடுவிப்பதற்கு சட்டத்துறையில் உள்ள வாய்ப்புகளை அலசிவருகிறது ஒரு டீம். இதற்கிடையே கர்நாடகச் சிறைத்துறையினர் பரப்பன அக்ரஹாரச் சிறையில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அந்த நேரத்தில் சசிகலாவைக் குறிவைத்து இந்த ரெய்டு என்றும், ரூபா கொடுத்த அறிக்கையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட வினய்குமார் அறிக்கையின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது என்றும் செய்திகள் பரவின.’’

‘‘உண்மை என்னவாம்?’’

‘‘வினய்குமார் அறிக்கை அளித்து சுமார் எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை சசிகலாவின் வழக்கறிஞர்கள்வசமும் அளிக்கப் பட்டிருக்கிறது. அதில் சசிகலா சிறையைவிட்டு வெளியேறியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் கண்காணிப்பாளர் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய வீடியோவே அது என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கி றார்கள். அதேசமயம், சசிகலாவின் அறைக்கு சில பிரத்யேக வசதிகள் இருந்துள்ளது உண்மைதான் என்றும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கின்றனராம். சிறையில் ரெய்டு நடந்தபோது சசிகலாவின் அறைக்கு எந்த அதிகாரியும் செல்லவில்லை. மேல்தளத்தில் மட்டுமே சோதனை நடந்ததாக சிறைத்துறையினர் விளக்கம் அளித்திருக்கின்றனர். ஆனாலும் சசிகலாவுக்கு சிக்கல் வரும் என்கிறார்கள்.’’

‘‘என்ன சிக்கல்?’’

‘‘சசிகலாவுக்கான நன்னடத்தைச் சான்றிதழை அவரின் வழக்கறிஞர்களிடம் கர்நாடகச் சிறைத்துறை இதுவரை தரவில்லை. அந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே முன்விடுதலைக் கான வேலைகளைத் தொடர முடியும். ஆனால், இப்போது சிறைத்துறையினர் நடத்திய ரெய்டு, வினய்குமார் அறிக்கை இவற்றை வைத்து சசிகலாவின் நன்னடத்தைச் சான்றிதழில் ஏதேனும் சிக்கலைக் கொண்டுவந்தால், அவரின் விடுதலை இன்னும் ஓராண்டு தள்ளிப்போவது உறுதி. இதை தினகரனிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் சசிகலா.’’

‘‘சசிகலாவை தினகரன் சந்தித்தாரா?’’

‘‘ரெய்டு நடந்த அன்று காலையே தினகரன் பெங்களூரு சென்றுவிட்டார். சிறையில் ரெய்டு நடந்தபோது அவரைக் காக்கவைத்திருக்கிறார்கள். ரெய்டுக்குப் பிறகே அவர் சசிகலாவைச் சந்திக்க அனுமதித்திருக்கிறார்கள். ‘சுகர் அதிகமாகியிருக்கிறது. முதுகுவலியும் அதிகமாக இருக்கிறது. என்னால் இந்தச் சூழ்நிலையில் இருக்க முடியவில்லை’ என்று சொல்லி கண்ணீர் விட்டாராம் சசிகலா.’’

‘‘ம்!’’

‘‘சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க தரப்பு நினைக்கிறதாம். அவரை விடுதலை செய்தால் மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் குழப்பம் வரும். அது தேவையில்லாத வேலை என நினைக்கிறார்களாம். சசிகலாவை விடுவிக்க சுப்பிரமணியன் சுவாமி எடுத்த முயற்சிகள் இந்தக் காரணங்களால் முடங்கியிருக்கின்றன. மறுபுறம் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சசிகலா தரப்பு திணறிவருகிறது.’’

‘‘பா.ஜ.க தரப்பு இப்படி நினைக்கக் காரணம்?’’

‘‘சசிகலா சிறையிலிருந்து வந்தால் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற முயற்சி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்று பன்னீர் தெரிவித்தாராம். பா.ஜ.க-வுக்கு நெருக்கமான ஆடிட்டர் மூலமாக இந்தத் தகவல் டெல்லி மேலிடத்துக்குப் போயிருக்கிறது. அ.ம.மு.க-வை பலவீனமாக்கிவரும் இந்த நேரத்தில், சசிகலாவின் விடுதலை வேறுவிதமான ரியாக்‌ஷனை ஏற்படுத்திவிடும் என அஞ்சுகிறார்கள். இந்தப் பக்கம் இப்படி முட்டுக்கட்டை போட்டுவிட்டு, மற்றொரு புறத்தில் அ.ம.மு.க-வுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறார்கள்.’’

‘‘அது என்னவாம்?’’

‘‘அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவுசெய்யாமல் போனதால்தான், இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில் களம் இறங்க முடியவில்லை என்று தினகரன் சொல்லிவந்தார். அந்தக் கட்சியைப் பதிவுசெய்வதற்கான வரிசைமுறை இந்த மாதம்தான் தேர்தல் ஆணையத்தில் வருகிறது. அதற்குள் எடப்பாடி மற்றும் பன்னீர் இணைந்து தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் அ.ம.மு.க-வை கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவுசெய்யக் கூடாது என்றும் சொல்லியுள்ளனர். இதனால், அ.ம.மு.க பதிவுக்கு முன்பாக அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க பிரதிநிதிகளிடம் இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்கிறார்கள். அதன் பிறகே

அ.ம.மு.க-வை கட்சியாகப் பதிவுசெய்வது குறித்து ஆணையம் முடிவுசெய்யுமாம்’’ என்ற கழுகார், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தார்.

%d bloggers like this: